Wednesday, March 21, 2012
தகவல் பல விதம் !
இன்னும் சில பல பத்தாண்டுகளில் கச்சா எண்ணெய்க் கிணறுகள் வற்றி பெட்ரோல், டீசல் எல்லாம் தீர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதனால் உலகெங்கிலும் மாற்று எரிபொருள் தேடும் முயற்சிகள் நடக்கின்றன. பிரேசில் நாடு சர்க்கரையிலிருந்து எத்தானால் தயாரித்து, அதை எரிபொருளாகப் பயன்படுத்தும் முயற்சியில் வெற்றியடைந்து இருக்கிறது.
இதேபோல அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் பலவும் மக்காச் சோளத்திலிருந்து எத்தனால் எடுக்கின்றன. டீசல் எஞ்சின்களில் டீசலுக்குப் பதிலாக வெஜிடபிள் ஆயிலைப் பயன்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன.
ஆனால் இவை எல்லாவற்றிலும் ஒரு அபாயம் இருக்கிறது. உணவே எரிபொருள் ஆகிவிட்டால், உலகெங்கும் உணவுப் பஞ்சம் வந்துவிடும். இதற்கு கடலுக்குள் தீர்வு கண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். கடலுக்கடியில் இருக்கும் பாசிகள், களைச் செடிகள் போன்றவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கும் முயற்சிதான் அது!
ஒரு ஸ்பெஷல் என்சைமை இந்த பாசிகள் மற்றும் களைகளில் புகுத்தினால், அதிலிருந்து எத்தனால் கிடைக்கும். மக்கச் சோளத்தில் கிடைப்பதைவிட ஐந்து மடங்கு அதிகம் எத்தனால் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதற்காக கடலுக்கு அடியில் யுத்தங்கள் நடக்கலாம். மீண்டும் ஏகாதிபத்தியப் போர்.
உலகில் கிடைக்கும் அத்தனை ரக ஸ்கேல்களாலும் அளந்து முடிவெடுத்துவிட்டார்கள். இவர்தான் சாதனையாளர் என்று! மிகக் குள்ளமாகப் பிறந்ததுதான் இவர் சாதனை. நேபாளத்தைச் சேர்ந்த 72 வயது சந்திர பகதூர் டாங்கி இப்போது கின்னஸால் அங்கீகரிக்கபட்ட உலகின் குள்ள மனிதர்.
'தற்போது உலகில் உயிர்வாழும் மனிதர்களில் மிகக் குள்ளமானவர்', மனித இன வரலாற்றில் இதுவரை உலகில் பிறந்தவர்களிலேயே மிகக் குள்ளமானவர்' என இரண்டு சாதனை சான்றிதழ்களை கின்னஸ் கொடுத்து இருக்கிறது. கின்னஸ் பதிப்பகத்தின் ஆசிரியர் கிரெய்க் கிளாண்டோ நேபாளம் வந்து சான்றிதழ்களை வழங்கினார். சந்திர பகதூரின் உயரம் 54.6 சென்டிமீட்டர். இதற்குமுன் உலகின் குள்ள மனிதராகக் கருதப்பட்டவர், 60 சென்டிமீட்டர் உயரமுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜூன்ரே பாலாவிங். அவருக்குத்தான் தெரியும் அவர் வேதனை.
அந்த அழகிய பெட்டியைத் திறந்தால் உள்ளே 49 குட்டி சாக்லேட்டுகள் இருக்கும். பெட்டியின் விலை இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய். 'அப்படி என்ன தங்கத்துலயா இழைச்சிருக்காங்கா ?' என்று நீங்கள் பொங்கினால்....ஆமாம்.
புகழ்பெற்ற லெபனான் சாக்லேட் நிறுவனமான பாட்சி, அறிமுகம் செய்திருக்கும் 'ஜூவல்லரி சாக்லெட் இது. ஒவ்வொரு சாக்லெட்டும் தங்கம் அல்லது வெள்ளி இழைத்த காகிதத்தால் அழகான வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும். மேலே 24 காரட் தங்கத்தில் செய்த பூக்கள், ஸ்வரோஸ்கி கற்கள். பிளாட்டினத்தால் அலங்காரம் என இழைத்திருக்கிறார்கள். சாக்லெட்டை சாப்பிட்டு காகிதத்தைத் தூக்கிப் போட கண்டிப்பாக முடியாது.
ஒரு நேரச் சோற்றுக்கு அல்லல்ப்படும் உலகமடா இது!
தகவல் : லோகேஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment