Friday, March 30, 2012

ஏப்ரல் 1 ஓர் அறிவாளியின் தினம் !


William Harvey (1 April 1578 – 3 June 1657)


'முட்டாள்கள் தினம்' என்று உலக மக்களால் அழைக்கப்படும் ஏப்ரல் முதல் தேதிதான் பதினாறாம் நூற்றாண்டில் ஒரு தலைசிறந்த அறிவாளியைப் பெற்றெடுத்து பெருமை தேடிக் கொண்டது. ஆம், மருத்துவ சரித்திரத்தையே மாற்றி எழுதிய மேதை வில்லியம் ஹார்வி. 1578 - ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, இங்கிலாந்தின் போகஸ்டன் மாகாணத்தில் பிறந்தார்.

பள்ளியில் படிக்கும் போதே மருத்துவப் படிப்பின் மீது தீராக் காதல் கொண்டிருந்தார் ஹார்வி. நினைத்தது போலவே 1602 - ம் ஆண்டு இத்தாலியிலுள்ள பென்டா பல்கலைக்கழத்தில் மருத்துவ பட்டம் பெற்ற வில்லியம் ஹார்வி, லண்டன் திரும்பி மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.

அங்குதான் ஆரம்பித்தது ஹார்வியின் அயராத ஆராய்ச்சி. 14 ஆண்டுகள் முழுமையாக ஆராய்ச்சியில் முழ்கிக் கிடந்தார். மனித உடற் கூற்றை நாம் முழுமையாக கண்டறிந்திடாத காலம் அது. நம் உடலில் ரத்தம் தேங்கிக் கிடக்கிறதா, ஓடிக் கொண்டிருக்கிறதா என்பதை அப்போது பல்கலைக்கழங்களின் பட்டிமன்றத் தலைப்பு. அந்நேரத்தில்தான் அடிவானத்து விடிவெள்ளியாக வெளியானது வில்லியம் ஹார்வியின் ஆய்வு முடிவு.

'சந்தேகமில்லாமல் நம் உடலில் ரத்தம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அதை பம்ப் செய்யும் வேலையைத்தான் இதயம் செய்கிறது. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும் போதும் இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. நிமிடத்திற்கு 72 முறை அது துடிப்பதால் ஒரு நாளைக்கு 5700 லிட்டர் ரத்தம் அதன் வழியாகச் செல்கிறது' என்பதையெல்லாம் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னது ஹார்வியின் ஆராய்ச்சி.

அதுமட்டுமல்ல...அப்படி பம்ப் செய்யப்படும் ரத்தம் நம் உடல் முழுக்க எந்தெந்த ரத்த நாளங்கள் வழியே பாய்கிறது; மீண்டும் சுழற்சி முறையில் அது எப்படி இதயத்தை வந்தடைகிறது; கைகளிலும் கால்களிலும் செல்லும் ரத்த நாளங்கள் எப்படிக் கண்டறிவது என்றெல்லாம் வரைபடமே போட்டுக் காட்டினார் ஹார்வி.




ஆரம்பத்தில் அதை ஏற்காத 'மறுத்துவர்கள்' அந்த ஆராய்ச்சிக்கு 'பைத்தியக்காரத்தனம்' என்று பட்டம் கொடுத்தார்கள். ஆனால், காலப்போக்கில் ஹார்வி எடுத்துரைத்த உண்மைகளை அடிப்படையாக வைத்துத்தான் அவர்களால் மருத்துவமே பார்க்க முடிந்தது. மெல்ல ஹார்வியை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து, முதலாம் சார்லஸ் மன்னனுக்கு ஆஸ்தான மருத்துவராக அவரை அமர்த்தி அழகு பார்த்தது. தன் காலம் முழுக்க மனித உடற்கூற்றை ஆராய்ந்து கொண்டே இருந்த ஹார்வி, இன்றைய நவீன மருத்துவத்துக்கு பலமான அடித்தளத்தை அமைத்துவிட்டு, 1657-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, தனது 79 வது வயதில் மறைந்தார்.

இப்போது சொல்லுங்கள்..... இப்படிப்பட்டவரின் பிறந்த நாளான ஏப்ரல் ஒன்று அறிவாளி தினம்தானே !






தகவல் : சி.பரத்.

0 comments:

Post a Comment