Thursday, March 29, 2012

கலக்க மூட்டும் கடல் பாதாளத்தில் ஜேம்ஸ் கேமரூன் !


எதிலும் எப்போதும் சவாலை விரும்புகிற ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 'டைட்டானிக்' 'அவதார்', போன்ற பெரும் வெற்றி படங்களுக்குப் பின் ஓர் ஆவணப் படம் எடுக்கப் போகிறார். அதுவும் 3 - டி ஆவணப்படம். அதற்காக மனித குலமே தரிசிக்காத கடலின் ஆழத்துக்குச் சென்று படப்பிடிப்பு நடத்த போவதாக அறிவித்திருக்கிறார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் மரியானா டிரென்ச்!

மரியானா என்றதும், நம்ம ஊர் 'மெரீனா பீச்' மாதிரி இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். கடல் ஆராய்ச்சியாளர்களே பெயரை கேட்ட உடனே வெலவெலத்துப் போகும் அளவுக்கு 'வேட்டையன் அரண்மனை' இது. பசிபிக் பெருங்கடலுக்குள் 2550 கி.மீ. நீளத்தில் ஒரு அகழி வடிவில் இருக்கும் பெரும் பள்ளத்தாக்கு இது. இதன் ஆழம் 11 கிலோ மீட்டர் என்று இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலும் இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் கணக்குப்படியே நம் பூமியின் மிக ஆழமான கடல் பகுதி இதுதான். ஏன், நிலப்பகுதியில் மட்டும் இத்தனை ஆழமான பள்ளத்தாக்கு இருக்கிறதா என்ன ? கடல், நிலம் இரண்டுக்கும் சேர்த்து பூமியின் ஆழமான பிரதேசம் மரியானா டிரென்ச்தான்.

பொதுவாக நிலவின் மேற்புறத்தைப் பற்றி நாம் அறிந்து கொண்ட அளவுக்குக் கூட கடலின் ஆழத்தைப் பற்றி அறிந்ததில்லை என்பார்கள். இது அறிவியல் பூர்வமாக உண்மை. காரணம், கடலின் ஆழத்துக்குள் சூரிய ஒளி நுழையாது. அந்த கும்மிருட்டுக்குள் நம்மை என்னென்ன விலங்குகள் தாக்கும் என்று சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் மேலே, மேலிருக்கும் கடல் நீரால் வரும் அழுத்தத்தை மனித உடல் தாங்காது.

சாதாரண ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்யவே இத்தனை தடைகள் என்றால், இந்த கடல் பள்ளத்தாக்கில் கேட்க வேண்டுமா? இதுவரை மனிதன் கண்டறிந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் சென்றிருக்கும் அதிகபட்ச ஆழம் 6000 மீட்டர்கள்தான். மரியானா டிரென்ச் அதைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆழம். இதற்குள் ஒரு மனிதன் இறங்கினால், அவன் உடலின் ஒவ்வொரு இன்ச்சிலும் ஆயிரம் கிலோ எடையை வைத்தது போன்ற அழுத்தம் உண்டாகுமாம். இது நிச்சயமாக ஒரு மனிதனை பிழிந்தெடுத்துவிடும்.

அப்புறம் கேமரூன் மட்டும் எப்படி கேமராவோடு அங்கே போவார்?

அதற்காவே பிரத்யேகமாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியிருக்கிறார். 'டீப் ஸீ சேலஞ்சர்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கப்பல் ஒருவர் மட்டும் அமரக் கூடியது. எத்தனை அழுத்தத்தையும் தாங்கக் கூடியது. ஆழ்கடலுக்குள் ஒளியைப் பாய்ச்சுவதற்கும் கேமராக்களை இயக்குவதற்கும் இதில் வசதி உள்ளது.


'டீப் ஸீ சேலஞ்சர்' (Deepsea Challenger)


அங்கே காணக் கிடைக்கும் பொருட்களை ஆராய்ச்சிக்காக எடுத்து வருவதற்கேற்ற ஒரு இயந்திரக் கையும் கொண்டது.

'தனியாக ஒரு கப்பலையே உருவாக்கி, இப்படி ஒரு டிரிப் போகக் காரணம் என்ன ?' என்றால், ஈகோதான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ஆமாம், உலகின் மிக ஆழமான பகுதிக்கு யார் முதலில் செல்வது என்று உலக அளவில் 'பெரிய தலைகளுக்கு' மத்தியில் போட்டியே நடக்கிறதாம். ஜேம்ஸ் கேமரூன், இங்கிலாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் (வர்ஜின் மொபைல் குழுமத் தலைவர்), கூகுள் சேர்மன் எரிக் ஷ்மிட் போன்றவர்கள் அந்தப் பெரிய தலைகளில் அடக்கம். இதில் கேமரூன் முந்திக் கொண்டார்.


ஜேம்ஸ் கேமரூன் (Hollywood Director James Cameron)

"எது எப்படியோ... இதுவரை மனிதன் போகாத அந்த ஆழத்துக்குள் கேமரூன் போகும்போது பல ரகசியங்கள் வெளி வரலாம். அத்தனை ஆழத்துக்குள் வாழும் உயிரினங்கள் என்னென்ன என்பது கூட இதுவரை யாருக்கும் தெரியாது. அந்தப் புதிர்களை இந்தப் பயணம் அவிழ்க்கும். அவர் ஒரு இயக்குனராகவும் இருப்பதால், இது ஆவணப் படமாகவும் உருவாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த போட்டி, அறிவியல் துறைக்கு ஓர் வரப்பிரசாதம்' என்று கொண்டாடுகின்றனர் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள்.

இப்படியல்லவோ இருக்க வேண்டும் போட்டி !




தற்போது கிடைத்திருக்கும் செய்தி: 

இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது ஆழ்கடல் சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளர். அவர் கூறியதாவது :


'இது முற்றிலும் ஒரு வேற்றுக்கிரக அனுபவம், நாம் கனவு காண்பது போன்று மிக பாரிய கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி இங்கு நடைபெறுவதாக எனக்கு தென்படவில்லை. இந்த ஆழமான கடல் பரப்பில் நான் பார்வையுற்ற சிலவகை மீன்கள், திமிங்களுக்கு கண்கள் இருப்பதாக தெரிவதில்லை. பெரும்பாலானவை தூய வெள்ளை நிறத்தில் இருந்தன.  ஆனால் அவற்றை முன்னர் பார்த்ததில்லை. அவை இந்த அபூர்வமான சூழலை தழுவி வாழ்கின்றன. சூரிய வெளிச்சமோ, வெப்பமோ இந்த ஆழ்கடலுக்குள் ஊடுருவவில்லை. காரிருளும் கடும் குளிரும் எங்கும் சூழ்ந்திருந்தது.'

இச்சாகச பயணத்தை கெமரூன் முடித்து திரும்புவதற்கு 7 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.







தகவல் : கோகுலவாச நவநீதன். 
தற்போது கிடைத்திருக்கும் செய்தி மட்டும் : http://www.4tamilmedia.com 

0 comments:

Post a Comment