Friday, March 9, 2012

ஏழை படும் பாடு !


மருத்துவமனையில் இருந்து கேட்கிற ஒரு தாயின் கதறல் அந்தச் சிறுகதையின் தொடக்கம். விருத்தாசலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்ச் செல்வி சாமுண்டி என்கிற தலைப்பில் தொகுத்திருக்கிற சிறுகதைத் தொகுப்பில், 'எதார்த்தம்' என்றொரு கதை இருக்கிறது. அந்தக் கதையில் தங்கள் பிள்ளையை இழந்த விட்டு, விவசாயக் கூலிகளான தாயும், தந்தையும் அழுகிற அழுகை நம் நெஞ்சைச் சுடுகிறது.

காலையிலேயே அந்தப் பிள்ளைக்கு உடம்பெல்லாம் சுட்டது. அவர்கள் நடவு வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவள் கேட்டால் 'இப்படிக் கொதிக்குதே பிள்ளைக்கு.' அவனும் தொட்டுப் பார்த்து விட்டு பதறிப் போனான், பயந்து போனான். என்ன செய்வது என்று இரண்டு பேருக்கும் புரியவில்லை. திருத்துறைப் பூண்டியிலே இருக்கிற ஒரு மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு போகலாம் என்று நினைத்தார்கள்.

காசு இருந்தால் தனியார் மருத்துவமனையில் எந்த நேரம் வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால் இவர்கள் இந்த கிராமத்திலே இருந்து திருத்துறைப் பூண்டிக்குப் போக வேண்டும்.

'பத்து மணிக்குப் போயிட்டு நாம நடவுக்கு வந்துர முடியுமா' என்று கேட்டாள். 'எப்படி முடியும், அங்க ஆஸ்பத்திரியே 10 மணிக்கு மேலதான் தொறப்பாக. நாம அதுக்கப்புறம் புள்ளையைக் காட்டிட்டு, இங்க கொண்டு வந்த விட்டுட்டு போறத்துக்கு பன்னெண்டு மணி ஆயிரும். அதுக்கப்புறம் யாரு நம்மள வேலைக்குச் சேப்பா ? அப்ப இன்னைக்கு வேலைக்குப் போகலையா நீ' என்று கேட்டான்.

'வேற என்ன வழியிருக்கு. இந்த புள்ளைக்கு இப்படி கொதிக்குதே, எப்படி விட்டுட்டு போறது' என்று அவள் கேட்டாள். அந்த கேள்வியில் நியாயம் இருப்பதை அவனும் உணர்ந்தான். ஆனாலும் இன்றைக்கு நடவு வேலைக்குப் போகவில்லை என்றால் மறுபடியும் நாளைக்குச் சேர்த்துக்கொள்வார்களா என்று தெரியாது.

மனைவி கண்ணம்மா இருக்கிற அணி சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள் தொடர்ந்து வேலை கிடைக்கிறது. ஒரு நாளைக்குப் போகவில்லை என்றாலும், அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள பத்துப் பேர் தயாராக இருக்கிறார்கள். அவளுக்கு அது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஒரு நாள் கூலி போனால் கூடக் குற்றமில்லை. தொடர்ந்து வேலை கிடைக்கமால் போய்விடுமோ என்ற அச்சம் இருந்தது.

எனவே அவன் மெதுவாய்ச் சொல்லிப் பார்த்தான். 'ம்ம்... உண்மதான். ஆனா நாம இன்னைக்கு நடவுக்குப் போகலைன்னா, இனிமே நமக்கு வேலையே இல்லமாப் போயிடுமோன்னு பயம்மா இருக்கு. நாம நாலு நாள் ஓடி வேலை பர்த்துட்டோமுன்னா அடமான வச்சிருக்கிற ஒன்னோட மூக்குத்திய மீட்டுறலாம். வருஷம் பூராவ நமக்கு வேலை கெடைக்கிது ? இந்த நேரத்துல நாம நடவுக்குப் போகலைன்னா வேற எப்ப போறது' என்று அவன் கேட்டான்.

'சரி அப்ப இந்த புள்ளைய என்ன பண்ணலாங்கற' என்று அவள் கேட்டபோது, 'இதோ நம்ம முக்குக் கடையிலா ஒரு காய்ச்ச மாத்திர இருக்கு. அதையும் டீத்தண்ணியும் வாங்கிக் குடுத்துட்ட காய்ச்சல் குறைஞ்சி போயிரும். நாம சாயங்காலமா வந்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிறலாம்' என்று சொன்னான்.

அவளுக்கும் அது சரி என்பது மாதிரிப் பட்டது. ஒரு பக்கத்திலே காய்ச்சல் கொளுத்துகிற குழந்தையை விட்டுப்போக மனமில்லை. இன்னொரு பக்கத்திலே நடவு வேலை போய்விட்டால், நாளைக்குச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்றும் புரியவில்லை. ஒரு ஆள் சம்பாதித்து இந்தக் குடும்பத்தைத் தள்ள முடியாது. அப்படி ஒன்றும் பெரிய வருமானம் இல்லை. இரண்டு பெரும் கூலிகள்.

ஆகையினாலே 'சரி ஓடிப்போய் அந்த முக்குக் கடையிலே மாத்திரய வாங்கிட்டுவா' என்று சொன்னாள். வாங்கிக் கொண்டு வந்ததும் அதை டீத்தண்ணியிலே கலந்து கொடுத்தார்கள். பிள்ளையும் குடித்தது. எப்படியும் ஒரு மணி நேரத்திலே காய்ச்சல் குறைஞ்சிரும். நாம சாயந்திரம் ஒடி வந்திரலாம் என்று இரண்டு பேரும் வேலைக்குப் போனார்கள். வேலைக்குப் போன இடத்திலே கடுமையான வேலை. அன்றைக்கு வழக்கமாக முடிக்கிற நேரத்திற்கு வேலை முடிந்துவிட்டாலும், கூலி கொடுப்பதற்குக் கொஞ்சம் நேரம் ஆயிற்று. எனவே வரிசையில் காந்திருந்து கூலி வாங்கிக் கொண்டு வருவதற்குள் மணி 6 ஆகிவிட்டது. இவள் வீடு வந்து சேர்வதற்கும், அவன் வருவதற்கும் சரியாக இருந்தது.

அவர்கள் இரண்டு பேருக்கும் காலையில் இருந்த ஒரு திட்டம், பிள்ளைக்கு அந்த மாத்திரையோடு நிறுத்தி விட வேண்டாம். வருகிறபோது சின்ன சின்ன நண்டுகளைப் பிடித்துக் கொண்டு வந்து, அதை நச்சிப்போட்டு ரசம் வச்சிக் குடுத்தா காய்ச்சல் கொறைஞ்சிரும் என்பது. அது அவர்களுடைய கை வைத்தியம்.

எனவே கண்ணம்மாள் வருகிறபோதே, வரப்புகளிலே இருந்த சின்ன சின்ன நண்டுகளைப் பிடித்துப் தன் முந்தானையிலே கட்டிக்கொண்டாள். அந்த நண்டுகள் குறுகுறுவென்று வயிறெல்லாம் ஓட, அதன் கால்களைப் பிய்த்துத் போட்டு விட்டு, மறுபடியும் முந்தானையிலே முடிந்துகொண்டு வந்து சேர்ந்தாள். மாரியப்பனும் நண்டுகளைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தான். அதைக் கண்ணம்மாள் கொண்டுவந்ததிலே மகிழ்ச்சி அடைந்தான்.இன்றைக்கு இரவு ரசம் வைத்துச் சாப்பிட்டால் காய்ச்சல் குறைந்து விடும்.

உள்ளே போய்ப் பிள்ளைத் தொட்டுப் பார்த்தால், காய்ச்சல் காலையிலே இருந்ததைவிடக் கடுமையாய் இருக்கிறது. பிள்ளைக்குக் கைகால் எல்லாம் இழுக்கிறது. இரண்டு பேரும் அலறி அடித்தபடி, நண்டை எல்லாம் அப்படியே போட்டு விட்டுப் பிள்ளையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்.

இவர்கள் போய் சேர்வதற்குள் அங்கே பணியில் இருந்த மருத்துவர் வீட்டிற்க்குப் போய்விட்டார்.அங்கே இருந்த செவிலியர்கள் சொன்னார்கள், ஒரு பத்து நிமிடம் காத்திருங்கள் அடுத்த மருத்துவர் வந்துவிடுவார் என்று. பிள்ளைக்கோ காய்ச்சல் கொதிக்கிறது. அதுமட்டுமல்லாமல், கைகால் எல்லாம் இழுக்கிறது. அதைப் பார்த்துவிட்டு செவிலியர்கள் முதல் உதவி சிகிச்சைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனாலும், காய்ச்சல் குறைந்தபாடில்லை. மருத்துவர் வந்தார். மாத்திரை கொடுத்தார். அந்த பிள்ளை கொஞ்சம் மயக்கத்திலே இருந்தது. இனி சரியாய் போய்விடும். நல்ல வேளை கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும், குழந்தையை இழந்திருப்போம் என்கிற எண்ணத்தோடு இரண்டு பேரும் குழந்தைக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருந்தார்கள்.

ஆனால் பகலெல்லாம் வேலைப் பார்த்துக் களைத்துப்போன அவர்களால் தொடர்ந்து விழித்திருக்க முடியவில்லை.கட்டிலுக்குப் பக்கத்திலே கண்ணம்மாள் படுத்து உறங்கிப் போனாள். அந்த மருத்துவமனையின் வராண்டாவில் துண்டை விரித்து மாரியப்பனும் படுத்துக் கொண்டான். எப்படியும் பிள்ளைக்குக் காலையிலே சரியாகிவிடும் கொண்டுபோய் வீட்டிலே விட்டுவிட்டு, அடுத்த நாள் காலையிலே நடவுக்குப் போய்விடலாம் என்பது அவர்களது திட்டம்.

திடீரென்று கண்ணம்மாளின் அலறல் சத்தம் கேட்டு மர்ரியப்பன் ஓடிச் சென்று பார்க்கிறான். நர்சுகள் எல்லோரும் பக்கத்திலே இருக்கிறார்கள். அந்த குழந்தை இறந்து போய்விட்டது. அவர்களால் அதைக் காப்பாற்ற முடியவில்லை. கொடுத்த மாத்திரை வேலை செய்ய முடியாத அளவுக்கு நோய் கடுமையாகப் பாதித்து, அந்தக் குழந்தை இறந்து போய்விட்டது.


ஓவென்று.....கண்ணம்மாள் அலறுகிறாள். அருகில் இருக்கிற செவிலியர்களும் மற்றவர்களும் சமாதானம் செய்தும் கூட ஒரு மணிநேரமாக அவளின் கதறல் நிற்கவில்லை. மிகவும் ஆதரவாக, சமாதானமாக, பாசமாகப் பேசிய செவிலியர்கள் கூட, அரைமணிநேரம், முக்கால் மணிநேரத்திற்கு பிறகு கடுமையாகப் பேசுகிறார்கள். என்ன இருந்தாலும் இது மருத்துவமனை இப்படியெல்லாம் சத்தம் போடக் கூடாது என்று எவ்வளவு சொன்னாலும் கண்ணம்மாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர்களும் பொறுமை இழந்து, கண்ணம்மாவைக் கையைப்பிடித்து இழுத்து வந்து மரத்தடியிலே விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். மருத்துவமனைக்கு எதிரிலே இருக்கிற மரத்தடியில் அப்படியே விழுந்து கிடக்கிறாள். மீண்டும் அங்கேயிருந்தும் கதறுகிறாள். வேறு வழியில்லாமல் மாரியப்பன் குழந்தைக்குப் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொள்கிறான்.

முதல் நாள் இரவு தன் அம்மாவுக்கு சொல்லியனுப்பினான். 'கையிலே காசு இல்ல. நீ ஏதாவது காசு எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வா. பிள்ளைய ஆஸ்பத்திரியில சேத்திருக்கிறோம்' என்று. அடுத்த நாள் காலை 5 மணி பேருந்தில் அவனுடைய தாய் வந்து சேர்ந்தாள். எப்போது எழுந்தாள், எப்போது இதையெல்லாம் செய்தாள் என்று தெரியாது, வரும்போது சோறும், புளிக்குழம்பும் எடுத்துக் கொண்டு வந்தாள். மகனைப் பார்த்து, மகன் அலறுவதைப் பார்த்து அவளுக்குப் புரியவில்லை. 'எம்மா எம்புள்ள என்னய விட்டுப் போயிட்டாம்மா' என்று அழுதான். மகனையும், மருமகளையும் அரவணைத்து ஆறுதல் சொல்லி அவளும் அழுதாள்.

மருத்துவமனையிலே பிள்ளையைத் துணியிலே சுற்றிக் கையிலே கொடுத்து விட்டார்கள். 'இனிமேலும் இங்கே வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் எப்படியாவது எடுத்துக் கொண்டு போங்கள்.' பிள்ளையைத் தோளிலே சாய்த்துக் கொண்டு பேருந்து நிறுத்தம் வரைக்கும் மூவரும் அழுது கொண்டே வந்தார்கள். ஏதாவது வாடகைக்கார் கிடைக்குமா என்றால் 250 ரூபாய், ஆட்டோ 150 ரூபாய் கேட்டார்கள். 'அம்மா நீ எவ்வளவு பணம் வச்சிருக்கே' என்று கேட்டபோது, அந்த அம்மா எண்ணிப்பார்த்து '15 ரூபாய் இருக்கிறது' என்று சொன்னாள். 15 ரூபாய்க்கு எந்த வண்டியும் போகமுடியாது.

வேறு வழியில்லை, அவன் மனைவியையும், அம்மாவையும் பார்த்து, 'நாம எழப்பட்டவங்க. நமக்கு வேறு வழியில்ல. நீங்க ரெண்டு பேரும் கட்டயப்பட்டு அழுகைய நிறுத்திட்டா இந்தப் பிள்ளைய தோளுல சாய்ச்சிக்கிட்டு பஸ்சிலேயே போயிரலாம்' என்று சொன்னான்.

அழுகையை அவ்வளவு எளிதில் அடக்க முடியவில்லை. ஆனாலும் காய்ச்சலில் கிடக்கிற குழந்தையைத் தூக்கிக்கொண்டு போவது போல, அந்தக் குழந்தையை அரவணைத்துத் தூக்கிக் கொண்டு பேருந்தில் ஏறி உட்கார்ந்தான். இதில் என்ன கொடுமையென்றால், திருத்துறைப் பூண்டியிலிருந்து கிராமத்திற்குப் போவதற்கு மூன்று டிக்கெட்டுகள் இல்லை, முன்றரை டிக்கெட்டுகள் எடுத்தான். இதைப்பார்த்து மறுபடியும் கண்ணம்மா அழுதாள். அவனுடைய தாய் அவளை அடக்கினாள்.

ஏறத்தாழ கிராமத்தை நெருங்குகிற போது, அதற்கு மேலும் தாங்க முடியாமல், 'ராசா போயிட்டியேடா....' என்று அந்தப் பெண் அழுதபோதுதான் நடத்துனருக்குப் புரிந்தது. தன்னை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது புரிந்தாலும், அவர் கோபப்படாமல் போனால் போகட்டும் என்று கிராமத்திலேயே இறக்கிவிட்டார்.

கிழே இறங்கி அந்தத் தேநீர்க்கடையிலே ஆளுக்கு ஒரு தேநீரைக் குடித்துவிட்டு, அந்தக் குழந்தையைக் கொண்டுபோய் அடுத்த நாள் அடக்கம் செய்து, மூன்று நாட்களுக்குப் பிறகும் எழாமல் கண்ணம்மா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். உண்ணவில்லை, சரியாக உறங்கவில்லை.

அப்போது மாரியப்பனின் தாய் கண்ணம்மாவைத் தட்டி எழுப்பி, 'என்ன செய்றது, எவ்வளவு நாள் அழ முடியும். அழுதாலும் என்ன செய்ய முடியும். மறுபடியுமா அந்தக் குழந்த வரப்போகுது. கண்ணத் தொடச்சிக்க. பொம்பளைங்க எல்லோரும் நடவுக்குப் போறாங்க பாரு. அவுங்களோட சேர்ந்து போ. போகலைன்னா நாளைக்குச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது. வேறு வழியென்ன இருக்கு நமக்கு. அழுது அழுது காசு வருமா' என்று சொல்லிச் சமாதானப்படுத்தினாள்.

முதலில் கண்ணம்மாவிற்குக் கோபம் வந்தது. பிள்ளை இறந்து போயிருக்கிற துன்பம்கூடத் தெரியாமல் நடவு வேலைக்குப் போகச் சொல்லுகிறாளே என்று நினைத்தாள். ஆனால்,அதையும் மீறி, அதைத் தவிர வேறு வழியில்லை என்கிற எதார்த்தம் கன்னம்மாளுக்குப் புரிந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தலையை வாரி முடிந்துகொண்டு எழுந்தாள். நடைப் பிணமாக நடவுக்குப் போகும் பெண்களோடு சேர்ந்து நடந்தாள் என்று அந்தக் கதை முடிகிறது.

ஏழைகள் தங்கள் பிள்ளையின் சாவினால் ஏற்பட்ட துன்பத்தைக் கூட வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல்தான் இந்த பூமியில் வாழ்கிறார்கள் என்னும் கொடுமையை அந்தச் சிறுகதை நம் நெஞ்சில் தைப்பதைப் போலச் சொல்லுகிறது.






நூல் : ஒன்றே சொல், நன்றே சொல்.


ஆசிரியர் : ஐயா சுப.வீரபாண்டியன்.

2 comments:

sundarmeenakshi said...

sudukiradhu ,idhuthan unmai,

Siraju said...

என்னை மிகவும் மன வேதனைக்கு உள்ளாக்கிய கதை இது. கருத்துக்கு நன்றி நண்பரே !

Post a Comment