Monday, March 19, 2012
மனிதர்களும் - விலங்குகளும்.....
மனிதர்கள் வெளிநாடு செல்லும்போது கடவுச்சீட்டு தேவை. விலங்குகளுக்கு ? அவற்றுக்கும் சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. விலங்குகள் அதிகமாக வந்து இறங்கும் இடமாக, ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் விமான நிலையம் கருதப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 6 லட்சத்து 30 ஆயிரம் விலங்குகள் வருகின்றன. செல்லப்பிராணிகளாகவும், சரணாலயங்களில் வளர்க்கவும், ஆராய்ச்சி தேவைக்காகவும் இப்படி பயணிக்கின்றன விலங்குகள். அவை புறப்படும் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடக்கும். இதற்காக சான்றிதழ்களோடு வந்து இறங்கும் இடத்திலும் திரும்ப பரிசோதனை உண்டு. இப்படி ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் சோதனைக்கு ஆளாகும், வியட்நாம் நாட்டு பச்சை நிற தண்ணீர் ஓணான் இது !
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இருக்கிறது லெனிட்ஸ் விலங்குகள் சரணாலயம். காட்டிலும் நாட்டிலும் கைவிடப்படும் விலங்குகளை எடுத்துப் பராமரிக்கும் சரணாலயம் இது. இந்த சரணாலயத்தின் சமீபத்திய கதாநாயகன், 'பேபி' என்ற பெயர் கொண்ட ஃபிரெஞ்சு புல்டாக்.
சில நாட்களுக்கு முன் இந்த சரணாலயத்துக்கு ஆறு காட்டுப் பன்றிக் குட்டிகள் அழைத்து வரப்பட்டன. அவற்றின் தாயை யாரோ வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். குளிரில் தவித்துக் கொண்டிருந்த குட்டிகளை யாரோ காப்பாற்றி, இங்கு கொண்டுவந்து ஒப்படைத்தார்கள். குளிரில் நடுங்கியபடி அவை நின்றிருப்பதைப் பார்த்து பரிதாப்பட்ட பேபி நாய், அருகில் சென்று அவற்றை நக்கி கதகதப்பூட்டியது. பன்றிக் குட்டிகள் ஒவ்வொன்றும் அந்த நாயின் சைஸில் இருந்தாலும், அதன் கருணை குறையவில்லை. ஆறு குட்டிகளையும் குளிர்போக்கி, அவற்றோடு விளையாடியது. இப்போது தினமும் குட்டிகளுக்கு சரணாலய ஊழியர்கள் சரியான நேரத்தில் பால் தருகிறார்களா என்பதைக் கண்காணித்து, அவற்றைப் பார்த்துக் கொள்வது பேபிதான் ! இந்த விநோத பாசக் காட்சியைப் பார்க்க நிறையப் பேர் வருகிறார்கள்.
செல்லமாக நாய் வளர்ப்பார்கள்; பூனை வளர்ப்பார்கள்; ஆனால், போஸ்னியாவைச் சேர்ந்த எமின் ஜூடிக் என்ற இவர் கரடி வளர்க்கிறார். ஆள் உயரத்துக்கு வளர்ந்திருக்கும் இந்த ஆறு வயது கரடிகள் இரண்டையுமே தனது மகன்கள் போல வீட்டில் வளர்க்கிறார். அவர் சாப்பிடுவதையே அவையும் சாப்பிடுகின்றன. ஜூஸ் குடிக்கின்றன. 'வீட்டுக்குள் கரடி வளர்ப்பது அக்கம்பக்கத்தினருக்கு ஆபத்து' என்று அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டைச் சுற்றி கம்பி வேலி அமைத்திருக்கிறார் இவர்.
தகவல் : லோகேஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment