தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.
சம்பத்.
அதன் அமைப்பாளராக இருந்து முன்னணியை உருவாக்குவதில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு.
" சொந்த ஊர் துத்துக்குடி. என் இரண்டு வயதில் அப்பா காலமானார். அம்மாவின் பராமரிப்பில்தான் வளர்ந்தேன். அம்மா ஹோட்டலில் கூலி வேலை செய்து வந்தார். நெல்லை இந்து கல்லூரியில் பி.யூ.சி. படித்தேன். மாணவனாக இருந்தபோது. என் அண்ணாச்சி ஐ.டி.யு தொழிற்சங்கத்தில் இருந்தார். அவர் வைத்திருக்கும் மார்க்சிய, இடதுசாரி நூல்களை வாசித்ததால் இயக்க ஈடுபாடு ஏற்பட்டது. மின்சார வாரியத்திலும் துத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் பணியாற்றினேன். 1987 - ல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டேன். அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 1966 - ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் முழு நேர ஊழியன் ஆனேன். தற்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்" - சுருக்கமாக தன் அறிமுகம் முடித்துவிட்டு தமிழகத்தில் தீண்டாமை குறித்து விரிவாகப் பேசத் தொடங்குகிறார்.....
சாதியப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என்ற ஈடுபாடு எப்போது ஏற்ப்பட்டது ?
"1992 - ல் திருச்செந்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட நாலு மூலைக் கிணறு கிராமத்தில் தலித் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. காரணம் இல்லாமல் ஊரில் உள்ள இளைஞர்களைக் கைது செய்தது காவல் துறை. பெண்கள் மற்றும் ஒன்றரை வயதுக் குழந்தை மீதுகூடத் தோட்டாக்கள் உமிழப்பட்டன. இந்தச் சம்பவம் எனக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. 1996 - ல் கொடியங்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கடுமையாகத் தாக்கி, வீடுகளைச் சேதப்படுத்தி, விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் திருடிச் சென்றது காவல் துறை. 1995 - 96 -ல் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியான சாதிக் கலவரங்களில் தலித்துகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். கட்சி சார்பாகத் தொடர்ந்து அந்த மக்களைச் சந்தித்தேன். தலித்துக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பது கணத்தில் எடுத்த முடிவல்ல. தொடர்ச்சியாக தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களைக் கண்டதால், எடுத்த முடிவு!".
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணிகளில் குறிப்பிடத்தக்கவையாக நீங்கள் கருதுவது ?
"2007 - ம் ஆண்டு ஆகஸ்ட் 16 தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதயமானபோது நான் அதன் அமைப்பாளர் ஆனேன். புதுக்கோட்டையில் நடந்த முதல் மாநாட்டில் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நாங்கள் முதலில் தலையிட்டது உத்தப்புரம் பிரச்சனையில்தான். எங்கள் போராட்டத்தால் சுவர் இடிக்கப்பட்டு பாதை உண்டக்கபட்டது.
உத்தப்புரம் தலித் மக்களின் கோரிக்கைக்களுக்காக,2010- ல் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸார் தடியடி நடத்தி, டி.கே.ரங்கராஜன், நான் உள்ளிட்ட பல தோழர்களை அடித்து இழுத்துச் சென்றார்கள். உத்தப்புரத்தில் எம். பி. நிதியில் இருந்து நிழற்குடை கட்டுவதற்கு 3 லட்ச ரூபாயை டி.கே.ரங்கராஜன் ஒதுக்கி தந்து இருக்கிறார். ஆனால், நிழற்குடை கட்டினால் சமூகப் பதற்றம் வரும் என்று காரணம் சொல்லி, அந்த நிதியை அரசு பயன்படுத்தவேயில்லை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர், கோவை பெருமாள் நகர், சேலம் மகாத்மா காந்தி மகான் தெரு, திருப்பூர் போன்ற பல இடங்களில் தீண்டாமை சுவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் டவுனில் பொதுச் சாலையில் தலித்துகள் நுழைய கூடாது என்பதற்காக இரும்பு கதவு போட்டு சாதியை பாதுகாத்தார்கள். அதனை இடங்களிலும் எங்கள் போராட்டங்களால் தீண்டாமைச் சுவர்கள் தகர்க்கப்பட்டன.
2008 ஜூலை 12 அன்று அருந்ததியர் உள் ஒதுக்கீடு கேட்டு பிரமாண்டமான பேரணியை சென்னையில் நடத்தி, அன்றைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மனு அளித்தபோது, கொள்கை அளவில் அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள் ஒதுக்கீட்டு வழங்க ஒப்புக்கொண்டார். 18 இடங்களில் ஆலயப்
பிரவேசப் போராட்டங்கள் நடத்தி, முதன் முதலாக தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று இருக்கிறோம்.
63 நாயன்மார்களில் நந்தன் மட்டுமே தலித் நாயன்மார். சிதம்பரம் கோயிலுக்குள் அவர் நுழைந்த வழி என்பதற்காக, தெற்கு வாசலை அடைத்து வைத்து இருக்கின்றனர். முன்பு அந்த பாதை இருந்ததற்கான சான்றுகள் சேக்கிழார் புராணத்தில் இருக்கின்றன. கட்டுமான பணிகளுக்குக்காதான் அந்த வாசல் தற்காலிகமாக வைக்கப்பட்டதாகவும், பின்னர் மூடப்பட்டதாகவும் கதை விடுகிறார்கள். தற்காலிக வாசலுக்கு எதற்கு கோபுரம் வைத்தார்கள் ? அதிகாரபூர்வமற்ற வாசலுக்கு முன் எதற்கு நந்தி வைத்தார்கள் ?.
2010 - ல் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று அந்த வாசலைத் திறக்க கோரி கண்டன ஆர்பாட்டம் நடத்தினோம். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. 'நந்தன் என்று ஒருவர் இருந்தாரா என்பதே சந்தேகத்துக்கு இடம் இன்றி நமக்கு தெரியாது' என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறியது வியப்பை அளித்தது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று பெயர் வைத்திருப்பது ஏன்?
சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழித்து விட முடியுமா?
சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதிய ஒடுக்குமுறையின் கோர வடிவம்தான் தீண்டாமை. பெரியாரும், அம்பேத்காரும் தீண்டாமையைக் ஒழிக்க தனி கவனம் எடுத்து கொண்டார்கள். தீண்டாமை ஒழிப்பு என்பது, சாதி ஒழிப்பின் பிரிக்க முடியாத முன்னுரிமைக் கடமை. தீண்டாமை முற்றிலும் ஒழிந்து போனாலும் கூட சாதியை ஒழிக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடும்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்ற தலித் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுக்கிறதா ?
தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலேயே பல தலித் அமைப்புகள் உள்ளன. மாநில அளவில் 18 அமைப்புகளும், மாவட்ட அளவில் 67 அமைப்புகளும் உள்ளன. சில தலித் அமைப்புகள் தங்கள் சுயநலத்துக்காவும், பதவியை பெறுவதற்காகவும், தொடங்கிய திசையை விட்டு விலகிச் செல்வதுபோலத் தோன்றுகிறது. அரசியல் கட்சிகளாக உருவெடுக்கும்போது இந்த மாதிரியான போக்கு உருவாகிறது. இதனை மாற்றிக் கொண்டால் எந்த அமைப்புடனும் இணைந்து செயல்படுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.
அப்படியென்றால் தலித்துகள் கட்சி அரசியலுக்கு வரவே கூடாது என்கிறீர்களா ?
நான் அப்படி சொல்லவில்லை. தலித் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து செல்லாமல் சந்தர்பவாதக் கட்சிகளாக மாறுவது தலித் விடுதலைக்கு உதவாது. தலித் மக்கள் நிச்சயமாக அரசியல் சக்திகளாக உருவெடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் பங்கு பெற வேண்டும். அதுதான் தலித் மக்களுக்கான உண்மையான அரசியல் விடுதலை. வெறுமனே எம்.எல்.ஏ-வாகவோ, எம்.பி,யாகவோ ஆகிவிட்டதால், அரசியல் அதிகாரம் பெற்றுவிட்டதாக நாம் சொல்லி விட முடியாது. எம்.எல்.ஏ, எம்.பி ஆவதைவிட உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகள் பதவிக்கு வருவதுதான் இன்றைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு போன்ற எத்தனையோ உதாரணங்களை நாம் பார்த்துவிட்டோம்.
சாதி ஒழிப்புக் குறித்த புரிதல்களோடு இயங்கும் பிற இயக்கங்களுடன் இணைந்து உங்கள் அமைப்பு செயல்படுகிறதா ?
பெரியாரின் கொள்கைகளைத் திராவிடக் கட்சிகள் கைவிட்டுவிட்ட நிலையில், பெரியார் பெயரை காப்பாற்றும்படி சாதியம் குறித்து பேசும் இயக்கமாக பெரியார் தி.க. இருக்கிறது. அதனுடன் இணைந்து நாங்கள் பல இயக்கங்கள், கருத்தரங்குகள், கூட்டு நிகழ்வுகளை நடத்தி இருக்கிறோம்.
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அங்கு சென்று வந்தீர்களே... என்ன நிலைமை ?
அங்கே காவல் துறை அடாவடித்தனமான அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறது. இம்மானுவேல் குருபூஜைக்குச் செல்லும் தலித் மக்களை இயல்பாக அனுமதித்து இருக்க வேண்டும். செப்டம்பர் 9-ம் தேதி பழனிக்குமார் என்கிற 9-ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கொலை செய்யப்பட்டான். இம்மானுவேல் குருபூஜை குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்திருக்க முடியும். இந்த பின்னணியில் ஜான் பாண்டியனைக் கைது செய்ததன் மூலம் நிலைமையை மோசமாக்கியது காவல் துறை. தங்களது கடும் அதிருப்தியை தெரிவிக்க, மறியல் செய்ய முயன்றவர்களை கலைக்க எளிய வழிமுறைகளைக் கையாளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு நியமித்துள்ள கண்துடைப்பு விசாரணை கமிஷன் மீது தலித் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் சி.பி.ஐ. விசாரணைக் கோருகிறோம். தவறு இழைத்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாஞ்சோலைத் தொழிலாளர் பேரணியின் போதும், உத்தப்புரம், காங்கேயனூர் போராட்டங்களின் போதும் தி.மு.க. ஆட்சி. அப்போதும் காவல் துறை இப்படிதான் நடந்துகொண்டது. ஆட்சி மாறினாலும்,
காவல்துறையின் அட்டூழியங்கள் மாறவில்லை. காவல் துறையின் ஒரு பகுதி அதிகாரிகளிடம் சாதியக் கண்ணோட்டம் இருப்பதால் ஆட்சியில் யார் வந்தாலும் சாதிய வன்மைத்துடனே நடந்து கொள்கிறது காவல் துறை.
நன்றி : நிருபர் கவின் மலர்-விகடன் .