Tuesday, October 18, 2011

வன தேவதைகள்!

தேக்கடி... இன்னமும் மிச்சம் இருக்கும் பச்சைப்பசேல் மலைத் தொடர். இங்கேதான் பெரியார் புலிகள் காப்பக வனச் சரகம் இருக்கிறது. இந்த வனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு, இங்கு வாழும் 50 குடும்பத் தலைவிகளின் கைகளில்தான் இருக்கின்றது என்பதுதான் வியப்பு!

''ஆதிகாலத்துல காடுகள்தான் நமக்கு வீடா இருந்தது. வளர்ச்சி ஏற்பட... ஏற்பட... காட்டில் இருந்து நாம தூர வந்துட்டோம். நம்மை வாழவெச்ச வீட்டை நாமே செங்கல் செங்கலாப் பெயர்க்கிற மாதிரி, காட்டை அழிச்சுட்டு இருக்கோம். மிருகங் களை வேட்டையாடுறோம். மரங்களை வெட்டிக் காசு பார்க்குறோம். இப்படியே போனா, ஒரு கட்டத்தில், காடுங்கிற தையே கதையில் மட்டும்தான் கேட்க முடியும். சட்டங்கள் போட்டாலும் காட்டைப் பாதுகாக்க முடியலை. பழங் குடி மக்களோட ஆதரவு இல்லாமல் காடுகளைக் காப்பாத்த முடியாதுனு அரசாங்கத்துக்குத் தெரிஞ்சுதான் காட்டைப் பாதுகாக்கும் பொறுப்புல எங்களையும் இணையச் சொன்னாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த 'வசந்த சேனா’ அமைப்பு!'' - பெருமையாகச் சொல்கிறார் கிரேஸி குட்டி. 'வசந்த சேனா’ - எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வனங்களைப் பாதுகாக்கச் செயல் பட்டுவரும் தன்னார்வ அமைப்பு!


''முன்னே காட்டுக்குள் இருந்த மரங்கள், அபூர்வமான மூலிகைகளைக் கொஞ்சம் கொஞ்சமா வெளியாட்கள் கடத்த ஆரம்பிச்சாங்க. இது எல்லாமே ராத்திரி நேரங்களில் நடந்ததால், வனத் துறையால் தடுக்க முடியலை. ராத்திரி நேரங்களில் வாட்சர்கள் ரோந்து போனாங்க. அப்படிப் போகும்போது அசதியில் பகல் நேரத்தில் தூங்கிடுவாங்க. இதைத் தெரிஞ்சு, கடத்தல்காரங்க பகல் நேரத்தில் காட்டுக்குள் நுழைய ஆரம்பிச்சாங்க. பகல் நேரத்திலும் காடுகளைக் கண்காணிக்கணும்னு நினைச்சப்ப, வனத் துறை எங்களோட உதவியைக் கேட்டாங்க. அப்போ வனத் துறைக்கு உதவ முன் வந்ததில் பல பேர் பெண்கள்தான் எங்களை வெச்சு வசந்த சேனா அமைப்பை உருவாக்கினாங்க. இப்போ நாங்க பகலில் ரோந்து போய் காடுகளைப் பாதுகாக்கு றோம். எங்க அமைப்பில் ஸ்கூல், காலேஜ் பெண்களும் இருக்காங்க. அதிகமா இருக்கிறது குடும்பத் தலைவிகள்தான்!'' என்று வசந்த சேனாபற்றி அறிமுகப்படுத்துகிறார் குஞ்ஞம்மா.


இந்த அமைப்பின் தலைவரான ரமணி குட்டி, அமைப்பின் செயல்பாடுகள்பற்றி விளக்குகிறார். ''2002-ல் இந்த அமைப்பை வனத் துறை கொண்டுவந்தது. 2008-ல் எங்கள் அமைப்புக்கு 'ஈ.டி.சி’-ங்கிற சூழலியல் மேம்பாட்டுக் குழுவின் அங்கீகாரம் கிடைச்சது. இப்போ எங்க அமைப்பில் 50 பேர் இருக்கோம். இந்த 50 பேரை எட்டுக் குழுவாகப் பிரிச்சு இருக்கோம். ஒவ்வொரு குழுவிலும் அஞ்சு முதல் ஏழு பேர் வரை இருக்காங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழு ரோந்து போகும். பத்தரை மணிக்கு காட்டுக்குள் ரோந்து போக ஆரம்பிப்போம். மதியம் சாப்பாட்டுக்குத் திரும்ப வரும்போது, காலை யில் இருந்து மதியம் வரைக்கும் எந்தெந்த மிருகங்களைப் பார்த்தோம், காட்டுக்குள் என்ன வித்தியாசங்கள் தென்படுதுனு எல்லா விவரங்களையும் பதிவு செய்வோம். திரும்ப இரண்டு மணியில் இருந்து ஆறு மணி வரைக்கும் ரோந்து போவோம். திரும்ப வந்து விவரங்களைப் பதிவு பண்ணுவோம். நாங்க பதிவு பண்ற விஷயங்களைத் தினமும் ரேஞ்சர்களும் வாட்சர்களும் ஃபாலோ பண்ணிட்டே இருப்பாங்க. ஏதாவது பிரச்னைன்னா, உடனடியாக் காட்டுக்குள் போய் என்ன, ஏதுன்னு பார்ப்பாங்க'' என்கிறார்.


இந்த அமைப்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒரு நாளைக்கு ஒரு டஜன் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டனவாம். இப்போது தொடர் ரோந்து காரணமாக எந்த ஒரு மரமும் வெட்டப்படுவது இல்லை. ''காட்டுக்குள் போகும்போது, சில சமயம் மிருகங்கள்கிட்ட மாட்டிக்குவோம். இத்தனை வருஷ அனுபவத்தில், எந்த இடங்களில் மிருகங்கள் வரும், என்ன மாதிரி மிருகங்கள் வரும்னு அதோட வாசனை, கால் தடம், கழிவு... இதுகளைவெச்சே கண்டு பிடிச்சிருவோம். அதே மாதிரி எந்த இடங்களில் சரிவு இருக்கு, எந்த இடங்கள்ல தண்ணி ஓடும் என்பதும் எங்களுக்குத் தெரியும்'' என்கிறார் ரமணி குட்டி. ''வீட்டைவிட்டு வெளியே வராத பெண்கள் எல்லாம், இன்னிக்கு இந்த அமைப்பில் சேர்ந்த பிறகு, காட்டுக் குள் தனியா போயிட்டுத் திரும்பி வர்ற அளவுக்குத் தைரியம் அடைஞ்சு இருக்காங்க. காட்டுக்குள் ரோந்து போவதுடன், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தவும் செய்யறோம். எங்களோட உழைப்புக்கு அங்கீகாரமா 2006-ம் வருஷம் 'அம்ரித் தேவி பைஷ்னோய்’ விருது கிடைச்சுது. காடுகளைப் பாதுகாக்கும் வேலைக்காக இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயர்ந்த விருது அது'' என்று சிலிர்க்கிறார் கிரேஸி குட்டி. ''மழைக் காலத்தில் எங்களுக்குத் தேவையான ரெயின் கோட், தொப்பி, பூட்ஸ்னு எல்லாத்தையும் அரசாங்கம் தரும். மத்தபடி நாங்க சம்பளம் எதுவும் வாங்குவது இல்லை. நம்ம வீட்டைப் பாதுகாக்க எதுக்குப் பணம் வாங்கணும்?'' - குஞ்ஞம்மா கேட்க, அத்தனை பேரும் தலையாட்டி ஆமோதிக்கிறார்கள்!

நன்றி : நிருபர் : ந.வினோத்குமார். படம் : எம்.விஜயகுமார் -விகடன்.
நன்றி : http://www.thedipaar.com

0 comments:

Post a Comment