'' 'காடு சென்டிமென்ட்’ - இனி பிரபு சாலமனுக்கு டெடிகேட்டா?''
''உலகத்தில் நம்பிக்கை தர்ற விஷயங்கள் நிறைய இருக்கு. சோர்வு வர்றபோது எல்லாம் வானத்தைக் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால், நம்பிக்கை நட்சத்திரங்கள் கொட்டும். அப்படி ஒரு சோர்வான சமயத்தில் என்னை இழுத்து அரவணைச்சு புத்துணர்ச்சி கொடுத்து அனுப்பிவெச்சது காடு. ஆக, என் தாய் மடியில் நான் தஞ்சம் அடைந்திருக்கேன். வனம் மாதிரி ஒரு அதிசயம் வேறு கிடையாது. 'மைனா’வில் ஒரு புள்ளிகூடச் சொல்லலை. காட்டில் வாழும் மனிதர்கள் உண்மையான மண்ணின் மைந்தர்கள். காட்டுக்குள்ளே கிழங்கையும் தேனையும் சாப்பிட்டுக்கிட்டு, நல்ல துணிமணிகூட உடுத்தாம இருக்கிறதைவெச்சு சந்தோஷமா வாழ்றாங்க. அவங்க அந்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கிறதாலதான், நகரத்துக்குள்ளே நாம அழகாத் திரியிறோம். கொஞ்சம் நம்ம முதுகையும் திரும்பிப் பார்ப்போமேனு தோணுச்சு. அதான் திரும்ப வனம் புகுந்தேன். காட்டுக்குள்ளேதான் எல்லோரும் திரியிறோம். யானைகள் மாதிரி அப்பப்போ வெளியே வர்றோம்!''
'' 'கும்கி’ யானை ஸ்பெஷல் படம்னு தெரியுது. ஆனா, அதுல என்ன ஸ்பெஷல்?''
''காட்டுக்குள் இருந்து ஊர்ப் பக்கம் வர்ற யானைகளை விரட்டி அடிக்க மனிதனால் பழக்கப்பட்ட யானைக்கு கும்கினு பேரு. எதாவது ஒரு பகுதியில், 'யானைகள் புகுந்து அட்டகாசம்’, 'ரேஷன் கடையை உடைத்து நொறுக்கியது’, 'மனிதர்களைத் தாக்கியது’னு தினமும் யானைகளைப்பத்தி ஃப்ளாஷ் நியூஸ் வருது. ஏதோ யானைகளை வில்லன் ரேஞ்சுக்குக் கொண்டுவந்துட்டோம். ஆனா, நிஜத்தில் யானைகள் ரொம்பப் பாசமான ஜீவன். நேசிக்கத்தக்க மிருகம். ஆசாபாசம், கோபம், காதல், பழிவாங்கும் உணர்ச்சி, ஞாபகசக்தினு 40-50 டன் எடை கொண்ட மனிதன் அது... அவ்வளவுதான். யானையைச் சும்மா மிருகம்னு சொல்லக் கூச்சமா இருக்கு. அந்த யானைகளின் வாழ்வியல் சூழலின் பின்னணியில் ஒரு காதல் சொல்லி இருக்கேன். இப்போ வரை யானைகள்பத்தி தனியா ஒரு புத்தகம் எழுதுற அளவுக்குப் படிச்சாச்சு. யானைப் பாகன்களோடு பேசினால் கிடைக் கும் ஒவ்வொரு தகவலும் சுவாரஸ்யம். யானைக்குச் சின்ன சத்தம்கூடப் பிடிக்காது. வனத்தில் இயல்பா யானைகள் திரியும்போது, அவ்வளவு அழகா இருக்கும். யானைகள் மனிதர்களின் வாசத்தைப் பதிவுபண்ணி வைக்கும். பாகனோட வார்த்தைக் குத்தான் கீழ்ப்படியும். எங்கே நெல் இருக்கு, சோளம் இருக் குனு அதுங்களுக்குத் தெரியும். பரம்பரை பரம்பரையாக யானை களின் ஜீன்லயே மேப் ரூட் இருக்கு. பேச்சிலர் ஆண் யானை கள் மட்டுமே தனியாத் திரியும். பெண் யானைகள் மகள், அத்தை, அம்மானு உறவுகளோடுதான் திரியும். யானைகளைக் காதலிக்கிற ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலான காதல்தான் படம்.
கிராஃபிக்ஸ் கப்பல்ல நடந்தாலும் 'டைட்டானிக்’தான் உலகின் பிரமாண்டமான காதல் படம் இல்லையா? அப்படிப் பார்க்கும்போது, நிஜமான யானைகள் வளர்த்தெடுக்கும் 'கும்கி’ பிரமாண்டமான காதல் படமா இருக்கும். வனத்தையும் மனத்தையும் ஒரு சேரத் தூண்டில் போட்டுத் தூக்கும். அதுதான் படத்தின் விசேஷம்!''சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோ. சில்வர் ஸ்பூன் வளர்ப்பு... அமெரிக்கா படிப்பு... காடு, மலை, மேடுனு ஈடுகொடுக்கிறாரா?''
''ஒரு காலத்தில் போக் ரோடு வழியா நடந்து போகும்போது, வீட்டு வராந்தாவுல சிவாஜி அண்ணன் தெரியுறாரானு எட்டிப் பார்ப்பேன். ஆனா, இப்போ சிவாஜி இல்லத்தில் இருந்தே எனக்கு அழைப்பு. ஒரு டீ பார்ட்டி கொடுத்து, சால்வை போர்த்தி, 'விக்ரமை உங்ககிட்டே ஒப்படைச்சிட்டேன்’னு மட்டும் சொன்னார் பிரபு சார்.
யானைகள் பொதுவா 11 அடி இருக்கும். தந்தம் ஐந்தரை அடி இருக்கும். அதுக்குப் பக்கத்தில் நின்னா, ஒருத்தர் கம்பீரமாத் தெரியணும். அப்படித் தெரியிறார் விக்ரம் பிரபு. அவர்தான் இப்ப யானையைக் குளிப்பாட்டுறார். அது தின்ன மட்டை போடுறார். மருந்து கொடுக்கிறார். செல்லம் கொஞ்சுறார். யானையும் விக்ரமை செல்லமா தும்பிக்கையில் தூக்கிட்டுப் போகுது. ஷூட்டிங் முடிஞ்சதும் லாரியில் அன்பா அதட்டி, செல்லம் கொஞ்சி, ஏத்தி அனுப்பிவைக்கிற வரை இப்போ அந்த யானை முழுக்கவே விக்ரம் கன்ட்ரோல்லதான் இருக்குது.
அவருக்கு ஜோடி லட்சுமி மேனன். ப்ளஸ் ஒன் பொண்ணு. 'மைனா’ அமலா பாலுக்குக் கொடுத்த வெளிச்சத்துக்குக் கொஞ்சமும் குறையாம லட்சுமியும் கொண்டாடப்படுவாங்க!''
'லிங்குசாமி தயாரிப்பில் ஒரு படம்... உங்களுக்கு எந்த அளவு சுதந்திரம்?''
''யானையை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அதுவா நடிக்க வந்தாதான் நடிப்பு. இல்லேன்னா, அன்னிக்கு முழு நாளும் வேஸ்ட்தான். சும்மா ஃபிலிம் ரோல் எகிறும். லிங்குசாமி சார் ஒண்ணுமே சொன்னது இல்லை. 'ஏன்... எப்படி... எதற்கு’னு ஒரு கேள்வியும் கிடையாது. 'மைனா’ செஞ்சுட்டு இருக்கும்போதே, கூப்பிட்டு அட்வான்ஸ் கொடுத்துப் 'படம் பண்ணுங்க’னு சொன்ன மனுஷன். 'கும்கி’யை முதல் ரசிகராப் பார்க்க லிங்குசாமிக்கு ரொம்பப் பிடிக்கும்!''
நன்றி : நிருபர் நா.கதிர்வேலன் - விகடன்
0 comments:
Post a Comment