Wednesday, October 12, 2011

லாஃபிங் வில்லாவில் இருந்து சலீம்குமார்!

''விகடனல்லே... வரும் வரும்... மோல்டுக்குப் புவாம். டிஸ்டர்பன்ஸ் இருக்காது!'' என்று மாடிக்கு அழைத்துச் செல்கிறார் சலீம் குமார். வில்ஸ் புகைக்கு ஊடாக வருகிறது புன்னகையும் பேச்சும்!

சலீம்குமார். கேரள சினிமாவின் சீனியர் இயக்குநர்களாலும் ஹீரோக்களாலும் தேடப்படும் காமெடியன் ப்ளஸ் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ப்ளஸ் மிமிக்ரி திறமையாளர்களின் ரோல் மாடல்! 'புலிவால் கல்யாணம்’, 'மாயாவி’ போன்ற படங்கள் இவருடைய காமெடிக்காகவே பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தவை. இவர் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான 'ஆதாமின்டே மகன் அபு’வைப் பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டினார்கள். கேரளாவில் ஒரு முதிய தம்பதியினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள எப்படி எல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதுதான் கதை. அபுவாக நடித்த சலீம்குமார் மகனைப் பிரிந்து இருக்கும் 70 வயது முதியவரின்சோகத் தையும் மனைவியின் மீதான பாசத்தையும் ஹஜ் பயண ஏக்கத்தையும் தன் தளர் நடையால், நிறுத்தி நிறுத்திப் பேசும் வசன உச்சரிப்பால்... தத்ரூபமாக உருக்கி எடுத்து இருப்பார். இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், சலீமின் நிஜ வயது 43. தமிழும் மலையாளமுமாக சலீம்குமாருடன் சம்சாரித்ததில் இருந்து...


''உங்க நிஜ ஏக்கம்தான் 'ஆதாமின்டே மகன் அபு’ படத்தில் வெளிப்பட்டதா?''

''அப்படிலாம் எதுவும் இல்லை. என் பேர்தான் இப்படி நினைக்கவைக்கும். நான் ஒரு இந்து. அந்தப் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல் ஹோம் வொர்க் செய்தீங்களானு கேட்குறாங்க. அப்படி லாம் நான் எதுவும் செய்யவில்லை. எந்தப் படத்துக்கும் எப்பவும் நான் ஹோம் வொர்க் செய்தது இல்லை. படத்துக்கு அவார்டுலாம் கிடைச்சது சந்தோஷம்தான். ஆனா, படம் லாஸ்! இதுல நானே டிஸ்ட்ரிபியூஷன் வேற செய்தேன். நல்ல படம் பார்க்க ஆள் இல்லை. இனிமே அப்படி ஒரு படம் நடிக்கத் தோணுமா எனக்கு?!''

''மிமிக்ரி ஆர்டிஸ்ட்டுகள் எல்லாருக்கும் நீங்கதான் ரோல் மாடல். அவங்களுக்கு என்ன மெசேஜ் சொல்ல விரும்புறீங்க?''

''விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 'இவருக்குக் கிடைத்த விருது, மிமிக்ரி கலைஞர்களாக இருந்து சினிமாவில் நடிகர்களாகி இருப்பவர்களைக் கேலி செய்யும் கூட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட அறை’னு சொன்னார் நடிகர் திலீப். நான் அவ்வளவு சீரியஸா இதைப் பார்க்கலை. தேசிய விருதுக் குழுவில் மலையாளிகள் யாரும்இல்லைங் கிறதுதான் எனக்கு விருது கிடைச்சதுக்குக் காரணம்னு அப்பவே சொன்னேன்.

மிமிக்ரி ஆர்டிஸ்ட்டுகளுக்குனு இல்லை... எல்லாருக்கும் நான் பொதுவா சொல்ற ஒரே விஷயம்... உங்களுக்கு என்ன தெரியுமோ அதை மனசார செய்யுங்க. மத்தவங்க என்ன சொல்லுவாங்களோனு கூச்சமோ, தயக்கமோ படாதீங்க!

நடிகரோ, இன்ஜினீயரோ, டாக்டரோ... யாரா இருந்தாலும் நிறைய புத்தகங்கள் வாசிங்க. இப்ப பொதுவாவே வாசிக்கிற பழக்கம் குறைஞ்சிடுச்சு. அதுலேயும் இப்போ பசங்கள்லாம் சிக்ஸ்பேக் வைக்கப் போயிடுறாங்க. பொண்ணுங்க பியூட்டி பார்லர்ல தலைமறைவு ஆயிடுறாங்க. கொஞ்சம் உலகத்தையும் உத்துக் கவனிங்கப்பா!''

''தமிழில் நடிக்கச் சொல்லி இன்னும் அழைப்பு வரலையா?’

''எப்பவோ வந்தாச்சு. நான்தான் பொறுமையா இருக்கேன். தமிழ் இண்டஸ்ட்ரி எனக்கு ரொம்பப் பிடிக்கும். மூணு மாசம் கவனிக்காம விட்டாகூட யாரோ புது ஆள் வந்து ஹிட் அடிச்சுட்டு நிக்குறான். புதுசு புதுசா டெக்னாலஜி வருது. நல்ல படம் எடுத்தாலும் பார்க்க ஆள் இருக்கு. சின்சியரா உழைக்கிறாங்க. ஆரவாரமா வாழ்க்கையைக் கொண்டாடுறாங்க!''

''உங்க குடும்பம்பத்தி...''

''சுனிதா என் வொய்ஃப். சந்து, அரோமல் என் மக்கள். சினிமால இருக்குறவங்க மக்களும் சினிமாவுக்கு வரணும்னு வீட்ல எல்லோருக்கும் ஆசை உண்டு. தமிழ்ல அது சக்சஸும் ஆகியி ருக்கு. ஆனா, இப்போ யாராவது 'சலீம் எவிடெ’னு கேட்டா, என் வொய்ஃப் 'ஷூட்டிங் போயிருக்கார்’னு சொல்வாங்க. இன்னும் சில காலத்துக்குப் பிறகு, என் மக்கள் சினிமாவுக்கு நடிக்கப் போய், அப்ப யாராவது 'மக்களு எவிடெ’னு கேட்கும்போது அப்பவும் அவங்க 'ஷூட்டிங் போயிருக் காங்க’னு சொன்னா போரடிக்காது? அதுக்காகவாவது வேற வேலைக்குப் போங்கனு சொல்வேன்!''

''சினிமா வாழ்க்கை திருப்தியா இருக்கா?''

''14 வருஷத்துல 112 படங்கள் நடிச்சுட்டேன். திருப்தியா இல்லாமலா இந்த ஓட்டம் ஓடியிருக்கேன்? ஆனா, இத்தனை வருஷத்திலும் எனக்கு சினிமா புரியவே இல்லை. புரிஞ்சுக்கிட்டா எல்லாப் படங்களும் ஹிட் ஆகி இருக்குமே? ஸ்டேஜ் ஷோ பண்ணும்போது ஒரு நிகழ்ச்சிக்கு 250 ரூபாதான் சம்பளம். இப்போ வீடு, வாசல்னு எல்லாம் இருக்கு. நான் மக்களைச் சிரிக்கவெச்சதுக்கு அவங்க என்னை நல்ல இடத்துலதான் வெச்சிருக்காங்க. அந்த நன்றிக்காக என் வீட்டுக்கு 'லாஃபிங் வில்லா’னு பேர் வெச்சிருக்கேன். சரிதானே?''


நன்றி : நிருபர் ந.வினோத்குமார் படம் : எம்.விஜயகுமார்- விகடன்.

0 comments:

Post a Comment