Monday, October 24, 2011

நீயின்றி நானில்லை.. நிலவின்றி நாமில்லை


நிலா எப்போதுமே கவிஞர்களை கொள்ளை கொள்ளும் ஒரு அம்சம்தான். இந்த நிலா உருவானதற்கு நீண்ட வரலாறு உண்டு. 400 கோடி வருடங்களுக்கு முன்பு தியா என்ற பெரிய கிரகம் ஒன்று பூமியில் வந்து மோதியது. அந்த மோதல் சரியான கோணத்தில் அமைந்ததால் மட்டுமே நமக்கு நிலவு என்ற ஓர் அற்புதம் கிடைத்தது. இந்தக்கோணம் சற்று அதிகமாக இருந்திருந்தால் அது பூமியின் மீது மோதாமலே சென்றிருக்கும். பூமிக்கு நிலவு கிடைத்திருக்காது.

அதே வேளையில் அந்த கோணம் சற்று குறைவாக இருந்திருந்தால் அது பூமியில் மோதியவுடன் பூமி தூள்தூளாக நொறுங்கி போயிருக்கும். எரிகற்கள், வால் நட்சத்திரங்கள் போல் பூமியும் சூரியனை சுற்றி வந்திருக்கும். சரியான கோணத்தில் இந்த மோதல் நிகழ்ந்த காரணத்தால் தான் நிலவு சரியான அளவில் சரியான தொலைவில் உள்ளது. இதனால்தான் நம்மால் முழுமையாக சூரியகிரகணத்தை பார்க்க முடிகிறது. நிலவின் தொலைவு சற்று மாறி இருந்தாலும் நம்மால் சூரியகிரகணத்தை பார்க்க முடிந்திருக்காது.


2004 - ம் ஆண்டு டேவ் வால்தட் என்ற விஞ்ஞானி நடத்திய ஆய்வின் படி நிலவின் எடை இப்போது இருப்பதை விட இரண்டு சதவிகிதம் அதிகமாக இருந்திருந்தால் கூட பூமியின் அச்சு சாய்வு 50 டிகிரி வரை மாறியிருக்கும். ஒரு சதவிதம் பூமியின் எடை கூடியிருந்தால் கூட பூமியின் சுழலும் வேகம் குறைந்திருக்கும் என்கிறார். இதனால் நீண்ட பகலும், நீண்ட இரவும் ஏற்பட்டிருக்கும்.


நிலவின் எடை இப்போது உள்ளதை விட குறைவாக இருந்தாலும் பூமியின் சுழலும் வேகம் அதிகரித்திருக்கும். இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திருக்கும். டேவ் சொன்னபடி 50 டிகிரி வரை சாய்வு கோணம் அதிகரித்திருந்தால் பருவ காலங்களில் மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்.

அது மனிதன் மட்டுமல்ல, பூமியில் எந்த உயிரினமும் வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். அதேபோல் பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் பகலுக்கும், இரவுக்குமான வெப்பநிலை மிக அதிகமாக வித்தியாசப்படும். மேலும் துருவப்பகுதிக்கும், பூமத்திய ரேகைப் பகுதிக்கும் இடையே உள்ள வெப்பநிலை வித்தியாசம் குறைவாக காணப்படும். அதனால் துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் இருப்பது சந்தேகமே.

ஒருவேளை பூமியின் சுழலும் வேகம் அதிகரித்தால் அதிகமான அழுத்தத்தோடு காற்று வீசும். பகலுக்கும், இரவுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வித்தியாசம் குறைவாக இருக்கும். துருவப்பகுதிம், பூமத்திய ரேகைப் பகுதிக்கும் இடையே உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்.


இதன் காரணமாக துருவப்பகுதிகளில் குளிர் அதிகமாகி கரியமில வாயு உறையும் நிலைக்கு சென்று விடும். இப்படி உறைவதால் காற்றில் கரியமில வாயுவின் அளவு குறையும். இந்த வாயு வெப்பத்தை தன்னுள் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதன் அளவு வளி மண்டலத்தில் குறைவதால் பூமி மேலும் குளிர்வடைந்து ஒரு பனிப்பந்தாக மாறிவிடும்.

நிலவின் தோற்றம் எதிர்பாராத ஒரு விபத்து என்றாலும், அது உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாக பூமியை மாற்றியுள்ளது. இந்த இயல்பான சூழ்நிலையே மனிதன் உருவானதற்கு காரணம். ஒரு வேலை நிலவு மட்டும் இல்லையென்றால் பூமியின் முதல் நிலை உயிரினங்களான பூச்சிகள், நுண்ணுயிரிகள் மட்டுமே தோன்றியிருக்கும். மனிதன் தோன்றியிருக்க மாட்டான். எனவே மனிதன் உருவாக நிலவுதான் காரணம்.


தகவல் : தினத்தந்தி .

0 comments:

Post a Comment