Wednesday, October 12, 2011

வீடு தேடி வந்த விண்கல்

இரவில் வீட்டின் கூரை மீது திடீரென கல் வந்து விழுந்தால் யாரோ ஏவல் செய்து விட்டார்கள் என்று தமிழகத்தின் கிராமப்புறங்களில் சொல்வார்கள். ஆனால் யாரும் ஏதும் செய்யாமலேயே ஒரு வீட்டின் கூரை மீது கல் வந்து விழலாம். பிரான்ஸ் நாட்டில் பாரிஸின் புற நகர்ப் பகுதியில் அண்மையில் ஒரு பெண்மணியின் வீட்டின் கூரை மீது கல் விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த அம்மையார் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிருந்தார். மழை பெயத போது வீட்டில் ஓர் அறையில் மழை நீர் ஒழுகுவதைக் கண்டார். கூரையில் ஓடு உடைந்திருக்கலாம் என்று கருதி ஓடு மாற்றுவதற்கான ஊழியரை வரவழைத்தார். இந்த ஓடெல்லாம் லேசில் உடையாதவை. சூப்பர்மேன் தான் வரவேண்டும் என்று கூறியபடியே அவர் உயரே ஏறினார். ஆனால் ஓடு உடைந்திருந்த்து. வானிலிருந்து ஏதோ வேகமாக வந்து விழுந்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னது சரியாக இருந்தது.

குளிர் பிரதேச நாடுகளில் கடும் குளிர் உள்ளே தாக்காதப்டி தடுக்கக் கூரையில் ஓடுகளுக்கு அடியில் இன்சுலேஷன் போடுவது உண்டு. உடைந்த ஓட்டை அவர் அகற்றிவிட்டுப் பார்த்த போது அந்த இன்சுலேஷனில் ஒரு கல் தென்பட்டது. அது சாதாரணக் கல் போல இருக்கவில்லை.


அந்த அம்மையார் விண்கல் நிபுணர் ஒருவரை வரவழைத்துக் காட்டினார். சுமார் 88 கிராம் எடை கொண்ட அது விண்கல் தான் என அவர் உறுதிப்படுத்தினார். அது மட்டுமல்ல அக் கல்லின் வயது 450 கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

விண்வெளியிலிருந்து அவ்வப்போது விண்கற்கள் பூமியில் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.விண்கற்கள் அபூர்வமாக வீடுகள் மீது வந்து விழும். 2009 ஆம் ஆண்டில் 14 வயது ஜெர்மன் சிறுவனின் கை மீது பயங்க்ர சத்தத்துடன் ஒரு விண்கல் விழுந்து அவன் கையில் மூன்று அங்குல காயம் ஏற்பட்டது. அந்த விண்கல் வெறும் பட்டாணி சைஸில் தான் இருந்தது. தலையில் விண்கல் விழுந்து யாரும் செத்துப் போனதாக வரலாறு இல்லை.

விண்கற்களில் பல வகைகள் உள்ளன. மிக அரியவை என்பதால் விண்கற்களுக்கு நல்ல விலை உண்டு. 60 கிராம் எடை கொண்ட ஒரு விண்கல்லின் விலை ரூ 5000 வரை இருக்கலாம். மேலை நாடுகளில் விண்கற்களை விலைக்கு வாங்குபவர்கள் நிறையப் பேர் உள்ளனர். இவற்றை ஏலம் விடுவதும் உண்டு. இவர்களுக்கென சங்கமும் உண்டு.தனது வீட்டின் கூரையில் வந்து விழுந்த விண்கல்லை அந்த அம்மையார் விலைக்கு விற்க விரும்பவில்லை.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையில் வெவ்வேறு சைஸ்களில் பல லட்சம் பாறைகளும் கற்களும் தனியே ஒரு சுற்றுப்பாதையில் அணிவகுத்து சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அஸ்டிராய்டுகள் என்று பெயர். சில சமயம் இவற்றில் சில ஒன்றோடு ஒன்று மோதி பல துண்டுகளாக உடையும். விண்கற்கள் இந்த அஸ்டிராய்ட் கூட்டத்திலிருந்து தான் வருவ்தாக நிபுணர்கள் கருதுகின்றனர். அஸ்டிராய்டுகள் சூரிய மண்டலத்து கிரகங்கள் தோன்றிய போதே உண்டானவை.

-தகவல் : அறிவியல்புரம் வலைப்பூ.(http://tamil-science.blogspot.com/)

0 comments:

Post a Comment