நாடு எதிர்நோக்கியிருக்கும் அபாயகரமான பிரச்சனைகளில் முதன்மையானது நக்சலைட் அச்சுறுத்தலே'' என்ற அதிகார வர்க்கக் கூக்குரலின் "பிரசங்கி'களாகவலம் வரும் தேசிய ஊடகங்கள், நக்சலைட் அச்சுறுத்தலைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, கடந்த சில மாதங்களாக "பரிபூரண' உள்ளுணர்வுடன் புதிய அச்சுறுத்தலை ஆளும் அரசுக்குத் தந்து வருகின்றன. அந்த அச்சுறுத்தலின் பெயர் "அகிம்சை'. மாவோயிஸ்டுகளின் வார்த்தைகளில் இந்த அரசு ஓர் "அடக்குமுறை அரசு' எனில், இதற்கெதிரான அச்சுறுத்தலின் உருவம் "அண்ணா ஹசாரே'வாக இருந்தாலும் அதன் பெயர் அகிம்சைதானே?
இந்தியப் பழங்குடி மக்களின் மீதான அதிகார வர்க்கத்தின் போர்க்களக் காட்சிகளின் துண்டுப் பகுதிகளைக் கூட தவறியும் ஒளிபரப்பிவிடாத தேசிய ஊடகங்கள், அகிம்சையின் அச்சுறுத்தலை இடைவெட்டு யின்றி, இருவார காலத்திற்கு நேரடி ஒளிபரப்பு செய்தன. இந்த அச்சுறுத்தலுக்கு "இரண்டாம் சுதந்திரப் போராட்டம்' என அண்ணா ஹசாரே "நாமகரணம்' சூட்டியிருந் தார். அவர் கூறியிருப்பது போல, இப்போராட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லைதான்.
அவரை காந்தியின் உண்மையான வாரிசு என ஒரு பிரிவினரும் அவரின் ஊழல் எதிர்ப்பிலும் "ஜன்லோக்பால் சட்ட வரை'விலும் தங்களுக்கு நம்பிக்கையில்லை என இன்னொரு பிரிவினரும் வாதிட்டு வருகின்றனர். ஆளும் காங்கிரசு அரசுக்கு இத்தனை அச்சுறுத்தலைத் தருபவர், நிச்சயம் உண்மையான காந்தியவாதியாகத்தான் இருக்க வேண்டும். “ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமார், ஒரு சுனார், ஒரு கும்ஹர் இருக்க வேண்டும். அவர்கள் தமது பாத்திரம் அறிந்து தங்கள் வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் தற்சார்புள்ளதாக இருக்கும்'' என வர்ண பேதத்தை தெளிவுபடுத்தும் அவர், ஒரு சுயம்சேவக் அல்லது காந்தியன் என இருவரில் ஒருவராகத்தானே இருக்க வேண்டும்?
மணிப்பூரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் "ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்ட'த்தை எதிர்த்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக – வலுக்கட்டாயமாக திரவ உணவு தரப்படுவதால் உயிரோடிருக்கும் – உண்ணா நிலை மேற்கொண்டிருக்கும் இரோம் சர்மிளாவைக் கண்டு கொள்ளாத ஊடகங்கள், அண்ணா ஹசாரேவுக்கு சாட்டிலைட் உபகரணங்கள் வழியே "ஒளிவட்டம்' உருவாக்கித் தருவதில் நாம் அதிர்ச்சி கொள்ள ஏதுமில்லை.
ஹசாரே ஆளும் கட்சியின் அரசுக்கு எதிராகப் போர் முழக்கம் செய்கிறார். இம்முழக்கத்தில் எழும் நிபந்தனைகளின் ஊடே அதிகார வர்க்கத்தை செம்மைப்படுத்த விழைகிறார். தாம் ஒழிக்க விரும்பும் ஊழலை உற்பத்தி செய்து வரும் அதிகார வர்க்கத்தை அவர் சீர்படுத்த முனைகிறார். அது, "கொசு மருந்து அடிப்பது போல, பயனற்றும் போய்விடலாம். ஆளும் (கட்சி) அரசை மாற்று வதற்கு அவரது போராட்டம் உதவலாம். அது புதிய கொசு மருந்து அடிக்கும் உபகரணம் வாங்குவது போல நடந்தேறலாம். ஆனால், கொசுக்கள் பல்கிப் பெருகுவதை அவராலும் அவரது லோக்பால் சட்டவரைவாலும் ஒழித்துவிட முடியாது.
அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்கள் என அறியப்படுகிறவர்களிலும் விமர்சிப்பவர்கள் என பெருமிதம் கொண்டிருப்பவர்களிலும் பெரும்பான்மையினர் இத்தகைய கொசுக்களே. முதல் வகையினர் படித்த "மேன்மக்கள்' எனில், இரண்டாம் வகையினர் மேன்மக்களாக வாய்ப்பற்ற படித்த பிரிவினர். ஹசாரேவை முன்வைத்து இவர்கள் தத்தமது கட்சி(கள்) கட்டி நிற்கின்றனர்; ஆனால் ஆளும் அரசை மட்டுமல்ல, அதிகார வர்க்கத்தையே தூக்கியெறியப் போராடி வருபவர்கள் மாவோயிஸ்டுகள். அண்ணா ஹசாரேவுக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வரும் அதிகார வர்க்கம், மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்களான பழங்குடி மக்களுக்கோ முதன்மையான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
ஹசாரேவுக்கும் அரசுக்கும் இடையிலான போராட்டம், மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டம், இவற்றில் அச்சுறுத்தல் என்ற வகையினத்துள் அடங்குவது அகிம்சையா? ஆயுதமா? என்பதல்ல கேள்வி. மாறாக, அது எதிர்கொள்பவர்களின் அரசியல் உள்ளுணர்வு சார்ந்ததாக இருக்கிறது. “ஹசாரேவின் நிபந்தனைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டிருந்தாலும், நிலைக்குழு விவாதங்களில் அவை நிராகரிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது'' என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெய்ட்லி அச்சம் தெரிவித்திருக்கிறார். நிபந்தனைகளை உருவாக்குவது, நிலைக் குழுக்களில் விவாதிப்பது, தேவைப்படின் நிராகரித்துக் கொள்வது ஆகிய வாய்ப்புகள் அகிம்சையின் அச்சுறுத்தலுக்கு, அரசியல் சட்டப்பிரிவுகளின் வழி வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், சாமானிய மக்களின் கோரிக்கைகளோ, தேவைகளோ, உரிமைகளோ இங்கு நிபந்தனைகளாக கொள்ளப்படுவதில்லை. அவை விவாதங்களுக்கு உட்படுத்தப்படும்முன்னரே நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. இத்தகைய சூழலில்தான் அச்சுறுத்தலுக்கான வடிவத்தை மாவோயிஸ்டுகள் போன்றோர், அகிம்சையாக வரித்துக் கொள்ள முடிவதில்லை. மேலும், பழங்குடியினர் போன்ற சாமானிய மக்களின் மீதான அச்சுறுத்தலையும் அதிகார வர்க்கம் அகிம்சையின் மொழியில் செய்வதில்லை.
இந்திய ஆளும் வர்க்கத்தின் பண்பாக அகிம்சை ஒருபோதும் இருந்ததில்லை. அதனால்தான், தமது வாழிட உரிமைகளுக்காகவும் வாழ்வாதார நலன்களுக்காகவும் போராடி வரும் பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் மீது, அதாவது சொந்த மக்களின் மீதே அறிவிக்கப்படாத போரை நிகழ்த்தி வருகிறது. தமது போர்த் திட்டத்தின் ஒரு பகுதியாக , போராடும் மக்களுக்கு எதிராக, அம்மக்களில் ஒரு பிரிவினரையே பயிற்றுவித்தும் வருகிறது. அவ்வகையில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராகக் களம் இறக்கி, சல்வாஜுடுமையும் சிறப்புக் காவலர் பிரிவினரையும் பயன்படுத்துகிறது. இவர்கள் பாதுகாப்புப் படையினர் அல்லது அதிகார வர்க்கத்தின் பழங்குடி முகமாகச் செயல்படுகின்றனர்.
மாத்கம் மோரியா (வயது 21), சட்டீஸ்கரிலுள்ள 6,500 சிறப்புக் காவலர்களில் ஒருவர். பஸ்தாரின் உள்ளடர்ந்த வனக் கிராமம் ஒன்றிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பே, பலவந்தமாக இக்காவலர் பிரிவில் சேர்க்கப்பட்டவர். 2005 இல் இவரது கிராமம் சல்வாஜுடும் குண்டர்களால் தாக்கி, எரியூட்டப்பட்ட பிறகு, அரசின் நிவாரண முகாமில் இருந்த நிலையில் மூளைச் சலவை செய்யப்பட்டு, பின் அரசின் கூலிப் படைப் பிரிவில் இணைக்கப்பட்டவர். மாத்கம் முன்னா (வயது 18), நக்சல் ஒழிப்புத் திட்டத்தில் சிறப்புக் காவலர் பிரிவுக்கும் சற்று மேலான "கோயா கமாண்டோ' குழுவில் இருப்பவர். SLR, LMG, AK 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ரகப் பயிற்சிகளும் இவரைப் போன்றவர்களுக்குத் தரப்படுகின்றன. சல்வா ஜுடும், சிறப்புக் காவலர்கள், கோயா கமாண்டோக்கள் என பல்வேறு பெயர்களில் இயங்கினாலும் இவர்களின் ஒரே குறி நக்சலைட் ஒழிப்பு என்பதே ("தெகல்கா', 16 சூலை, 2011).
பஸ்தாரின் அடர்ந்த வனப்பகுதியில் பிஜப்பூருக்கும் கங்காலூருக்கும் இடையில் அமைந்திருக்கும் பழங்குடி கிராமம் இருளிப்பள்ளன். 2005 அக்டோபரில் சல்வாஜுடும் குண்டர்களால் இக்கிராமம் தீக்கிரையாக்கப்பட்ட நாள் முதல், கிராம மக்கள் 10 கி.மீ. தொலைவிலுள்ள அரசின் அகதிகள் முகாமில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். “தீக்கிரையாக்கப்பட்ட பின்னரும் எனது கிராமத்தை விட்டு வெளியேற மறுத்தேன். காவல் துறையினர் என் கைகளைக் கட்டி, ஒரு மரத்தில் தலை கீழாக தொங்க விட்டனர். நாங்கள் கிராமத்திலிருந்து அகதி முகாம்களுக்குச் செல்லவில்லையென்றால், நக்சலைட்டுகளாகத்தான் கருதப்படுவோம் என காவல் துறையினர் கூறினர்'' என வாக்குமூலம் தந்த (15 மே, 2006, "அவுட்லுக்') இக்கிராமத்தைச் சேர்ந்த மர்விந்தா என்பவரின் கூற்று, அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலை உறுதிப்படுத்தியது.
அரசுக் கட்டுப்பாட்டு எல்லைகளைத் தாண்டியோ, அகதி முகாம்களை விட்டு விலகியோ செல்ல முயன்றவர்கள் என, கடந்த 2005 மே முதல் நவம்பர் வரை 90 பழங்குடியினர் சல்வாஜுடும் மற்றும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இதே கால கட்டத்தில் சல்வாஜுடும் ஆதரவாளர்கள் என 64 பழங்குடியினரை மாவோயிஸ்டுகள் கொன்றனர் என, தண்டேவாடா மாவட்ட அரசு நிர்வாகம் கூறியது. சூன் 2005 வரை, பழங்குடி மக்களைக் கொடுமைப்படுத்தும் காவலர்கள், வனத்துறையினர், கிராமத் தலையாரிகள், கூலி தராமல் ஏய்க்கும் ஒப்பந்ததாரர்கள் போன்றவர்களை மட்டுமே குறிவைத்து தாக்கிய மாவோயிஸ்டுகளுக்கு, 2005 இல் தொழிலாளர் தினத்தன்று (!) தொடங்கப்பட்ட சல்வாஜுடும் கைக்கூலிகளையோ, அவர்களுக்குத் துணை போகின்றவர்களையோ குறி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தண்டேவாடா மாவட்ட ஆட்சியராகயிருந்த கே. ஆர். பிஸ்தா என்பவர், “நீங்கள் நக்சலைட்டுகள் இல்லையெனில், சல்வாஜுடும் ஆகத்தான் இயங்க வேண்டும். மூன்றாவது வாய்ப்பு இங்கு இல்லை'' எனக் கூறியுள்ளது (15 மே, 2006, "அவுட்லுக்'), அதிகார வர்க்கத்தினரின் அச்சுறுத்தலுக்கும் இந்திய இறையாண்மையின் ஆன்மாவான அகிம்சைக்கும் இடையிலான உறவுக்கு வலுசேர்க்கிறது.
2009 இல் தங்கள் நில உரிமைகளுக்காக பழங்குடி மக்களால் தொடங்கப்பட்ட சாஷி முலியா ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த 150 பேர் இன்று சிறைக் கொட்டடியில் இருக்கின்றனர். ஒரிசாவின் நாராயண்பட்னா ஒன்றியத்தில் புதிதாகக் களம் இறக்கப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர், இச்சங்கத்தின் பொறுப்பாளர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு, அவர்களின் வீடுகளை தமக்கான தங்குமிடங்களாக ஆக்கிரமித்துள்ளனர். சாஷி முலியா ஆதிவாசி சங்கம் ஏறக்குறைய ஒரு தலைமறைவு இயக்கமாகவும் அதன் ஆதரவாளர்கள் தேடப்படும் குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர் ("தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 2011 பிப்ரவரி 6). போஸ்கோ மற்றும் பன்னாட்டுச் சுரங்க நிறுவனங்களுக்கான நிர்மானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒரிசா பழங்குடி மக்களின் அகிம்சை வழியிலான போராட்டங்கள் அனைத்தும் பயங்கரவாத அச்சுறுத்தலாக அதிகார வர்க்கத்தினரால் அணுகப்படுகின்றன.
2011 மார்ச் மாதத்தின் முதல் வாரம். தண்டேவாடாவிலுள்ள சிந்தால்நர் காவல் துறை முகாமிலிருந்து 2 மணி நேர நடைப் பயணத்தில் வந்துவிடும் "மோர்பள்ளி' எனும் கிராமத்தில் மாவோயிஸ்டுகளின் ஆயுதத் தொழிற்கூடம் ஒன்று இயங்கி வருவதாக, சரணடைந்த நக்சலைட் ஒருவரின் மூலம் கிடைக்கப் பெற்றதாகச் சொல்லப்பட்ட செய்தியின் அடிப்படையில், சி.ஆர்.பி.எப். மற்றும் கோப்ரா படையணிகள் வனப் பகுதியினுள் தேடுதல் வேட்டைக்குச் சென்றிருக்கின்றனர். அவர்கள் 5 நாட்கள் கழிந்து தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிய நிலையில், மூன்று கிராமங்கள் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. 300 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. மூன்று பழங்குடியினர் கொல் லப்பட்டும், மூன்று பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டும் கொடுமைகள் அரங் கேறியிருந்தன. இவை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு நேரடி சாட்சியங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன'' என்கிறது "இந்து' நாளிதழ் (மார்ச் 23, 2011).
“மார்ச் 11 அதிகாலையில் 4 மணியளவில் பழங்குடி இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோயா கமாண்டோக்கள் 200 பேரும் கோப்ரா படைப் பிரிவினர் 150 பேரும் அந்த ஆயுதத் தொழிற்கூடத்தை அழித்தனர்'' என காவல் துறை வட்டாரம் தெரிவித்தது. ஆனால், “8 மணியளவில் மோர்பள்ளி கிராமத்தைச் சுற்றி வளைத்த படையினர் வானத்தை நோக்கி சுடத் தொடங்கியதும், நாங்கள் காடுகளுக்குள் ஓடி ஒளியத் தொடங்கினோம்'' என்கிறார், நுபோ முட்டா எனும் அக்கிராமவாசி. மாதவி ஹங்கி என்பவரின் கணவர் அவரது கண் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். தடுக்க முயன்ற அவரை நிர்வாணப்படுத்தியிருக்கின்றனர். அய்ம்லா கங்கி (வயது 45) என்பவரை நிர்வாணப்படுத்தி, அவரது இரண்டு மகள்களின் கண்ணெதிரே ராணுவப் படையினர் வன்புணர்ச்சி செய்திருக்கின்றனர். ஒரு துணியில் மறைத்து அவரது இடுப்பில் கட்டியிருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் அவர்கள் திருடிக் கொண்டனர் என, "இந்து' பத்திரிகையாளரிடம் அவர் முறையிட்டுள்ளார்.
மாவோயிஸ்டுகளுக்கு உளவு சொல்பவர் எனக் குற்றம் சாட்டி, மாதவி கங்கா (வயது 45), அவரது மகன் பீமா மற்றும் மகள் ஹர்ரே (வயது 20) ஆகியோரை நண்பகல் வரை அக்கிராமத்தை வேட்டையாடிய படையினர் இழுத்துச் சென்றிருக்கின்றனர். சிந்தால்நர் காவல் நிலையத்தில் ஹர்ரேயை மட்டும் நிர்வாணப்படுத்தி தனிச் சிறையில் அடைத்திருக்கின்றனர். இரவு முழுவதும் அவரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியிருக்கின்றனர். மாதவி மற்றும் பீமா ஆகியோர் மோர்பள்ளி கிராமத்திற்கு மாவோயிஸ்டுகள் அடிக்கடி வந்து போவதாக வாக்குமூலம் தரச் சொல்லி, இரவு முழுவதும் அடித்துக் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். மோர்பள்ளி கிராமத்தில் ஆயுதத் தொழிற்கூடமோ, மாவோயிஸ்டுகளோ இருக்கவில்லை எனவும் கடந்த 2010 ஏப்ரலில் கொல்லப்பட்ட 8 மாவோயிஸ்டுகளின் நினைவாகக் கட்டப்பட்டிருக்கும் 15 அடி உயர நினைவுத் தூண் மட்டுமே இருந்ததெனவும் மற்றொரு காவல் துறை செய்தி கூறுவதாக "இந்து' பதிவு செய்திருக்கிறது.
தமது தேடுதல் வேட்டையின் தொடர்ச்சியாக, மார்ச் 13 அன்று, அடுத்த தாக்குதலுக்காக கோயா மற்றும் கோப்ரா கமாண்டோக்கள் திமாபுரம் என்ற இடத்தில் தங்குகின்றனர். இவர்கள் எதிர்பார்த்திருந்தது போலவே, மார்ச் 14 அதிகாலையில் சுமார் 70 மாவோயிஸ்டுகள் இவர்களின் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இரண்டு மணி நேர சண் டைக்குப் பிறகு, மூன்று கோயாக்கள் கொல்லப்பட்டிருந்தும் ராணுவத்தினர் காயமுற்றிருந்தும், மறுநாள் உள்ளூர் செய்தித்தாள்கள் 37 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்திகளை வெளியிட்டன. காயமுற்றவர்களை அழைத்துப் போக வரும் ராணுவ வண்டிகளுக்காக, அன்று இரவும் அக்கிராமத்திலேயே அவர்கள் தங்க நேரிட்டது. அடி பட்ட ஆத்திரத்தில் சுமார் 50 வீடுகளுக்குத் தீயிட்டும், பர்சே பீமா என்பவரைக் கிராமத்தினர் முன்னிலையில் கோடாரியால் வெட்டிக் கொலை செய்தும் கோயா – கோப்ரா படைகள் நர வேட்டையாடியிருக்கின்றனர்.
தொடர்ந்து இப்படைகள் மார்ச் 16 அன்று, தர்மெட்லா எனும் கிராமத்தை முற்றுகையிட்டு, வீடுகள், தானியக் குழுமங்கள் ஆகியவற்றை தீயிட்டு அழித்துள்ளனர். மாதவி ஹண்டா, மாதவி அய்டா என்ற இருவரைக் கொலை செய்திருக்கின்றனர். மாதவி ஹித்மி எனும் பெண்ணை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்து வன்புணர்ச்சி செய்து கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இக்கொடுமையில் அவரது கண் பார்வையும் பறி போயுள்ளது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இத்தொடர் கொடுமைகள் பற்றிய உண்மையறிய, தண்டேவாடா மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பிலிருக்கும் பிரசன்னா, வட்டாட்சியர் தலைமையில் ஒரு குழுவை நியமித்திருக்கிறாராம். ஆனால், அக்குழுவின் விசாரணைக்கு காவல் துறையினர் எவ்வித ஒத்துழைப்பும் தருவதில்லை என மாவட்ட நிர்வாகம் அலுத்துக் கொள்கிறது.
சல்வா ஜுடும் மற்றும் சிறப்பு காவலர் பிரிவினரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து, பேராசிரியர் நந்தினி சுந்தர், இ.ஏ.எஸ். சர்மா மற்றும் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா ஆகியோர் தொடுத்த பொதுநல வழக்கின் மீது கடந்த சூலை 5, 2011 அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், “போதிய கல்வியறிவு பெறாத பழங்குடி இளைஞர்களை சிறப்புக் காவலர்களாகப் பயிற்றுவிப்பது – சட்டவிரோதமானதும், பிற்போக்குத்தனமானதும், கண்ணியக் குறைவானதும் ஆகும். இது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21 வழங்கியுள்ள சட்ட சமத்துவம், சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமையை பறிப்பதாகும்'' என கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.
“சட்டீஸ்கர் மாநில அரசு உடனடியாக சிறப்புக் காவலர்களை பாதுகாப்புப் படைகளின் கவசங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டு, நேரடியாகவோ மறைமுகமாகவோ நக்சலைட்டுகளுக்கு எதிரான மோதல்களில் அவர்கள் ஈடுபடுவதைத் தடுத்து, அவர்களிடம் வழங்கப்பட்டிருக்கும் நவீன ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்'' எனவும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்திய அரசும் சட்டீஸ்கர் மாநில அரசும், இந்திய காவல் துறைச் சட்டம் மற்றும் சட்டீஸ்கர் காவல் துறைச் சட்டம் – 2007, இத்தகைய தற்காலிகப் பதவிகளை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்வதாக வாதிட்டு வருகின்றன.
கடந்த சனவரி 2009 இல் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நக்சலைட்டுகள் பரவியுள்ள ஏழு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்தில், “சிறப்புக் காவலர்களின் பணி பயன்மிக்கதாக இருக்கிறது. தேவையான பகுதிகளிலெல்லாம் இத்தகையவர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்'' எனக் கூறியிருந்தார். 5 மாநிலங்களில் 12,000 சிறப்புக் காவலர்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் உள்துறை அமைச்சகம் 2010 இல் வழங்கியிருக்கிறது. மாதம் ஒன்றுக்கு சிறப்புக் காவலர் ஒருவருக்கு, 2,150 ரூபாய் வழங்கப்படுவதாக மாத்கம் மோரியா "தெகல்கா' பத்திரிகையாளரிடம் (சூலை 16, 2011) உறுதி செய்திருக்கிறார். அது தற்போது 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2005 இல் நக்சலைட்டுகளுக்கு எதிராகப் போராடும் தன்னார்வக் குழு என்ற அடையாளத்துடன், ஆயுதமும் பயிற்சியும் தந்து சல்வாஜுடும் கூலிப்படையை உருவாக்கிய சட்டீஸ்கர் அரசாங்கம், கடந்த ஏப்ரல் 2008 இல் உச்ச நீதிமன்றம், குடிமக்கள் பிரிவினருக்கு ஆயுதம் வழங்குவதோ கொலை செய்ய அனுமதிப்பதோ, சட்ட விரோதம் என அறிவித்ததற்குப் பிறகும், "சட்டபூர்வமாக' சிறப்புக் காவல் பிரிவினரை உருவாக்கியது.
ஆனால், இதையும் சட்டவிரோதம் என அண்மையில் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 2010இல் "தெகல்கா' வார இதழின் (சூன் 24) கட்டுரை (The line of No Control) ஒன்று, சல்வா ஜுடும் சட்ட விரோதமாகத் தொடர்ந்து இயங்கி வருவதை அம்பலப்படுத்தியது. சல்வா ஜுடுமிலிருந்து அரசின் நிவாரண முகாம்களுக்குச் சென்ற பலர், சிறப்புக் காவலர்களாக மறு உருப் பெற்றிருக்கின்றனர் என்பதே இங்கு கவனிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றம், சிறப்புக் காவலர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
இத்தீர்ப்பில் மிக முக்கியமாக, இந்தியாவின் வளர்ச்சி மாதிரியின் அடிப்படைகள் குறித்து கேள்வியெழுப்பியிருக்கும் உச்ச நீதிமன்றம், “நவீன தாராளவாத பொருளாதாரக் கொள்கையின் மூலம் அமைதி யற்ற தன்னலப் போக்கும், சமச்சீரற்ற சமூக நோக்குமான பண்பாடு வளர்ந்து வருகிறது. தனியார் துறைக்கு அரசுகள் வழங்கிவரும் வரிச் சலுகைகளினால், சமூக நலத் திட்டங்களின் மூலம் ஏழை மக்களுக்குச் சேர வேண்டிய பயன்களுக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, ஏழை மக்களின் ஒரு பிரிவினருக்கு ஆயுதம் வழங்கி, அவர்களுக்குள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது முற்றிலும் சட்டவிரோதமாகும்'' என நடுவண் அரசின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
“புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த 20 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சி என்பதன் பெயரிலான சட்டவிரோத, மனிதத் தன்மையற்ற அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகள் மீது கடுமையான கண்டனத்தை உச்ச நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய முக்கிய தீர்ப்புகளில் இது குறிப்பிடத்தகுந்தது'' என்கிறார் மூத்த வழக்குரைஞரான காலின் கான்சால்வ்ஸ். இந்த வழக்கில் மட்டுமல்ல, ராம் ஜெத்மலானி மற்றும் பிறர் எதிர் நடுவண் அரசு, நொய்டா பெருநகர குழுமம் சீராய்வு மனு ஆகிய சமீபத்திய வழக்குகளிலும் அரசின் நவ தாராளவாத அணுகுமுறைகள் மற்றும் சாமானிய மனிதரின் உரிமைகள் குறித்து கண்டிப்பான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
1991 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாகத் தான் ஊழல் ஊதிப் பெருத்துள்ளது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலாளித்துவ பொருளாதார விமர்சகரான குருசரண்தாஸ் என்பவர், “சீர்திருத்தங்கள் பற்றிய எதிர்ப்பாளர்களின் கண்ணோட்டம் தவறானது. ஊழலின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்றால், பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்பதே பொருள். ஒவ்வொருவரும் செல்வந்தர்களாக மாறியிருக்கிறார்கள். வறுமைக்கான ஒரே தீர்வு வளர்ச்சியே'' என முதலாளித்துவத்தின் சகிக்க முடியாத வளர்ச்சியை நியாயப்படுத்துகிறார் ("அவுட் லுக்' சூலை 25, 2011).
ஆனாலும் ஊதிப் பெருத்திருக்கும் ஊழல், சமச்சீரற்ற முதலாளித்துவ வளர்ச்சி, தாராளவாத சீர்திருத்தம், புதிய பொருளாதாரக் கொள்கைகள் என, ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் சங்கிலியில் ஒரு கண்ணியை மட்டும் லாவகமாகக் கழற்றிவிடலாம் என எண்ணுகின்றனர், அண்ணா ஹசாரேவும் அவரின் பின்னே அணிவகுத்து நிற்கும் – அரசியல் வெறுமையில் நீந்தும் – படித்த மேட்டுக்குடி வர்க்கமும். "நவ தாராளவாத சீர்திருத்தங்கள் ஊழலை மிகைப்படுத்தியிருக்கின்றன, என்பதை ஏற்றுக் கொள்ளும் தில்லி அம்பேத்கர் பல்கலைக் கழகப் பேராசிரியர் சுராஜித் மஜும்தார், “பொருளாதாரத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணை உற்பத்தி செய்யும் கேந்திரமாக அரசாங்கத்தின் தலையீடு இருந்த நிலையை சீர்திருத்த நடவடிக்கைகள் மாற்றியுள் ளன. மாறாக, எதிர்தரப்பினர் (தனியார் துறையினர்) அவ்விடத்திற்கு வந்திருக்கின்றனர்'' என்கிறார்.
அமெரிக்காவின் "போர்ப்ஸ்' பத்திரிகை (2011) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் வரிசையில் 50 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20 சதவிகிதத்தைத் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர் என்பதை ஒப்பு நோக்கினால், (இந்திய) அரசாங்கம் என்பதே தனியார் பெருமுதலாளிகள்தான் என்ற உண்மை உறைக்கும். “இப்போது அரசு நடத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதா தென்று, இன்னொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் சட்டவரைவு உருவாக்க நினைக்கிறது'' என எழுத்தாளர் அருந்ததிராய் குறிப்பிடுவதும் இதைத்தான்.
சீர்திருத்தங்களின் அடிப்படைக் கொள்கை என்பது ஊழல் அல்ல; விரைவான வளர்ச்சி, தேவையான பணியிடங்கள், உயரும் வருமானம், சேமிப்பு விகிதம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்கின்றனர் தனியார் துறையினர். தகுதிக்கும் வேலைப் பளுவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் சிறு வர்க்கப் பிரிவினரைக் காட்டி, தமது பொருளாதாரக் கொள்கையை இவர்கள் நிலைநாட்டி வருகின்றனர். இவ்வர்க்கப் பிரிவினரே அண்ணா ஹசாரேவின் கருத்தியல் அணியாகவும் வலம் வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இடதுசாரி கருத்தியலுக்குக் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிடும் சல்வா ஜுடுமிற்கு எதிரான வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான ராமச்சந்திர குகா, “முடிவு எத்தகை யதாக இருப்பினும் சொந்த மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், அது அரசாங்கமே ஆயினும், சட்டவிரோதமாகவே கருதப்படும். சமூக, பொருளாதாரக் கொள்கைகளில் மக்களின் நலன் தவிர்த்த அரசின் தனிப்பட்ட விருப்பங்களைத் திணிக்கக் கூடாது என்பதே தீர்ப்பின் மய்யக் கருத்தாக இருக்கிறது'' என்கிறார்.
சல்வா ஜுடும் மற்றும் சிறப்புக் காவலர் பிரிவினரைத் தடை செய்ய ஆணையிட்டிருக்கும் உச்சநீதிமன்றம் சட்டவிரோத, வன்முறை சாமானியர் உரிமை ஊழல் மற்றும் கருப்புப் பணம் தாராளவாத பொருளாதார கொள்கைகள் என கண்ணிகளை இணைத்தே தனது தீர்ப்பைப் பின்னியிருக்கிறது. தனியார் துறையினரின் தங்கு தடையற்ற வர்த்தகக் கொள்ளைக்குத் துணை புரியும் நோக்கில்தான் வரிச்சலுகைகள், பொதுத் துறையின் பங்குகளை விற்றல், அரசு சொத்துகளை தாரை வார்த்தல் என ஆளும் வர்க்கம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பரிவர்த்தனையின் விளைவே ஆகப் பெரும் ஊழல்கள். இவற்றில் குவியும் கருப்புப் பணத்திற்காகவே, காவு கொடுக்கப்படுகின்றன எளிய மக்களின் உரிமைகள். பறிபோகும் உரிமைகளுக்காகப் போராடும் மக்களை ஒடுக்கவே, அரசாங்கங்களின் சட்டவிரோத வன்முறை என, முதலாளித்துவ அதிகார வர்க்கத்தின் முகமூடியை அம்பலப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
அவ்வகையில் அரசியல் கட்சிகள், பெரு வணிகக் கழகங்கள், அரசாங்க எந்திரத்தின் உறுப்புகள் ஆகியன கூட்டு சேர்ந்து இயங்கும் மக்கள் விரோத அரசமைப்பின் ஒரு செயல்திட்டமே – பசுமை வேட்டை பயங்கரவாதம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நாட்டின் மூலதனத்தில் தமக்கான பங்கு ஊழலால் பறிபோகிறதெனும் பதற்றமே, நடுத்தர வர்க்கத்தை "ராம் லீலா மைதானம்' முதல் மெரீனா கடற்கரை வரை குழும வைத்தது. ஆனால், அபகரிக்கப்படும் மூலதனமாக நாடே கரைந்து வருகிறதே எனும் ஆவேசமே, பழங்குடி மக்களையும், தேசிய இன உரிமைப் போராளிகளையும், ஏழை விவசாயிகளையும் நிரந்தர அரசு எதிர்ப்பாளர்களாக உருவாக்கி வருகிறது. பங்கு கோரும் உரிமைக்கான முன்னவர்களின் எதிர்ப்புக்கு அடிபணியும் அதிகார வர்க்கம், நாடு விற்கப்படுவதையே தடுத்து நிறுத்த விழையும் மக்களையோ அச்சுறுத்தி முடக்குகிறது. இந்தப் பேர விளையாட்டில் அகிம்சையின் பாத்திரம் என்னவென்பதை உங்களால் அளவிட இயலுமா?
நன்றி : ஆசிரியர் இளம்பரிதி, தலித் முரசு மற்றும் கீற்று இணையதளம்.
இதன் முன் பதிவுகள் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் உள்ளது.
0 comments:
Post a Comment