Friday, March 2, 2012

ஒளரங்கசீப்


மொகலாயப் பேரரசர்களில் ஒளரங்கசீப்பைப் பற்றி மிகக் கடுமையான சில விமர்சனங்கள் உண்டு. திறனாய்வாளர்கள் அக்பரைப் பாராட்டுவார்கள். ஷாஜகானையும், ஜஹாங்கீரையும் கூடக் கூடுதலாகக் குறைச் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஒளரங்கசீப், மிக மோசமான மத வெறியன், இசைக்கும், கலைக்கும் எதிரி என்பன போன்ற விமர்சனங்கள் எப்போதும் உண்டு.

ஆனால், ஒளரங்கசீப்பின் அரச முறையை, அவருடைய எளிமையை, அவருடைய வாழ்க்கை வகையை நாம் கண்டு அறிந்தால், இந்த விமர்சனங்கள் ஒரு பக்கச் சார்ப்பு உடையவையோ என நமக்குத் தோன்றும். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆண்ட மன்னராக ஒளரங்கசீப் இருந்தார். அவருடைய காலத்திலேதான் மராட்டிய மன்னன் சிவாஜிக்கும், அவருக்கும் பெரும் பகையும், போரும் மூண்டது என்கிற காரணத்தினாலேயும், சிவாஜிக்கு ஆதரவாளர்கள் எல்லோரும் ஒளரங்கசீப்பை மிகக் கடுமையாக விமர்சனம் செய்வது உண்டு.


உண்மை என்ன என்பதை வெர்னியர் குறிப்புகள் (François Bernier) என்கிற ஒரு வெளிநாட்டுப் பயணியின் பயணக் குறிப்புகளைப் பார்க்கிற போது, நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. ஷாஜகான் மிக ஆடம்பரமாக வாழ்ந்தவர். அவருக்கு நேர்மாறாக ஒளரங்கசீப் மிக எளிமையாக இருந்தவர். ஷாஜகானுக்கும், ஒளரங்கசீப்புக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாடு அது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப தலைநகரைக் கூட மாற்றியவர் ஷாஜகான்.

1638 - ல் இருந்து 1648 - வரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரம் மாற்றப்பட்டது. அதோடு மட்டுமன்று டெல்லிக்குப் பெயரே ஷாஜகான் பாத் என மாற்றப்பட்டது. அப்படித் தன்னுடைய பெயரைச் சூட்டுவது, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப ஆடம்பரங்களில் ஈடுபடுவது ஷாஜகானின் வழக்கம்.

நடனத்திலும், கலையிலும், ஓவியத்திலும் ஜஹாங்கீருக்கும், ஷாஜகானுக்கும் அதிகமான ஈடுபாடு உண்டு. அதற்காக அவர்கள் செலவழித்த தொகையானது மிகக் கூடுதலாகும். ஒளரங்கசீப் இவைகளை எல்லாம் மறுத்தார். கலைக்கும், இசைக்கும் ஓரளவுதான் செலவழிக்க வேண்டும், மக்கள் நலனுக்குத்தான் கூடுதலாகச் செலவழிக்க வேண்டும் என்பதிலே ஒளரங்கசீப் மிக உறுதியாக இருந்தார்.

பல்லக்கிலே பயணம் போவதைக் கூட அவர் மறுத்தார். அவருடன் இருந்த அமைச்சர்கள் எல்லாம், மன்னர் நடந்து போவது சரியாக இருக்காது என்று அவரிடத்திலே அறிவுறுத்தி, அவருடைய விருப்பத்திற்கு மாறாகத்தான் பலவற்றை அவரிடத்திலே திணித்தார்கள். அவர் சொன்னார், 'இதென்ன பழக்கம் பல்லக்கில் செல்வது. ஆறுபேர் பல்லக்கைச் சுமக்க, மன்னரோடு அவருடைய பணியாட்கள் இருவரும் அதில் அமர்ந்து செல்ல, அம்மூவரையும் அவர்கள் சுமக்க வேண்டும்.

தங்கள் வாயின் துர்நாற்றம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, எப்போதும் வாசனைப் புகையிலை மென்று கொண்டிருக்கிற மன்னர்கள், அவற்றைத் துப்புவதற்காக வெள்ளியிலோ, பீங்கானிலோ ஆன கிண்ணம் ஒன்று அந்த பல்லக்கிலேயே இருக்கும். பல்லாக்குத் தூக்கிகள் கால் வலிக்க
இவர்களை தூக்கிச் செல்ல வேண்டும். இதெல்லாம் என்ன பழக்கம்' என்றார்.


இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று ஒளரங்கசீப் நினைத்தார். மன்னர் உட்காருகிற மயில் சிம்மாசனமே இவ்வளவு பெரியதாக இருக்க வேண்டுமா என்று ஒளரங்கசீப் கேட்டார். மற்றவர்கள் எல்லாம் சொன்னார்கள் ' நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உங்களுடைய அரண்மனையில் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தர்பாரில் இருக்கிறபோது மயில் சிம்மாசனத்தில்தான் இருக்க வேண்டும்'.

மயில் சிம்மாசனம் என்பது இரண்டடி உயரமுள்ள நான்கு கால்கள், அதன் மீது ஒரு விதானம், அந்த விதானத்தின் மீது 12 சின்ன சின்னத் தூண்கள், அந்த 12 தூண்களிலும் ஒன்றில் மரகத மாலை, ஒன்றில் வைர மாலை, இன்னொன்றிலோ சிவப்புக் கல் மாலை, ஒன்றிலே வாள் போன்ற வடிவம், இன்னொன்றிலே வில் போன்ற வடிவம் இத்தனை அழகான வேலைப்பாடுகளோடு அமைக்கப்பட்டது.


அதற்கு மேலே ஒரு நாற்காலி போல் இல்லாமல், படுக்கை போல அமைந்திருப்பதுதான் அன்றைய மொகலாய சாம்ராஜ்யத்தினுடைய சிம்மாசனம்.

அந்த சிம்மாசனம் டெக்ரான் ஷாவினுடைய அரண்மனையிலே அருங்காட்சியத்திலே இன்றைக்கும் உள்ளது என்று கூறுகிறார்கள்.

அதனுடைய குறைந்தபட்ச மதிப்பே 26 லட்சம் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.

இவ்வளவு ஆடம்பரமாக, இத்தனை பெரிய செலவுகளை மன்னர்கள் செய்து கொண்டிருக்க வேண்டுமா என்கிற கேள்வி ஒளரங்கசீப்புக்கு இருந்து கொண்டே இருந்தது. அதை மெல்ல மெல்லத்தான் அவரால் மாற்ற முடிந்தது. முதல் பத்தாண்டுகள் ஏறத்தாழ முழுக்க முழுக்க ஷாஜகானினுடைய ஆட்சியின் தொடர்ச்சியாகத்தான் அவரால் ஆட்சியை நடத்த முடிந்தது. ஏனென்றால் அந்த மாற்றங்களை எல்லாம் ஒரு பேரரசனாக இருந்தபோதும்கூட, உடனடியாக அவரால் கொண்டு வரமுடியவில்லை. சில மாற்றங்களைச் செய்தார். அவை போற்றப்பட வேண்டியவனாக இருந்தன.

ராஜா ஜெய்மாலினுடைய சிலையையும், சித்தூர் அரசர் சிலையையும் மன்னருடைய மாளிகைக்கு முன்னால், இரண்டு யானைகளின் மேல் இருப்பது போல அமைத்தார். பொதுவாகச் சிலைகளின் மீதும், கலைகளின் மீதும் ஆர்வமில்லாத ஒளரங்கசீப் இரண்டு கருங்கல் யானைகளைச் செய்யச் சொல்லி அவற்றின் மீது ராஜா ஜெய்மாலின் சிலையும், சித்தூர் அரசர் பட்டாவின் சிலையையும் வைக்க சொல்கிறாரே என்கிற வருத்தம் பலருக்கு இருந்தது.

அதற்கு காரணம், அந்த இரண்டு அரசர்களும் மொகலாய வம்சத்தில் வழி வந்தவர்கள் இல்லை. அக்பரின் காலத்தில் அவரை எதிர்த்து கடுமையாக போர் புரிந்தவர்கள்.

தங்களுடைய மொகலாய சாம்ராஜ்யத்திற்கு எதிராகப் போரிட்ட அரசர்களை எதற்காக இவர் மேன்மைப்படுத்துகிறார் என்றால், ஒளரங்கசீப் சொன்னார் 'அவர்கள் நம்மை எதிர்த்து போரிட்டு இருக்கலாம். ஆனாலும், களத்தில் கடைசிவரைக்கும் நின்று கலங்காமல் போரிட்ட மாவீரர்கள் அவர்கள். எதிரிகளாக இருந்தாலும் வீரர்களை மதிக்க வேண்டும்' என்று சொன்ன மிகப் பெரிய பண்பை ஒளரங்கசீப் பிடத்திலேதான் பார்க்க முடிந்தது.


எனவே ஒளரங்கசீப் மற்ற நாட்டுக்காரர்களை வெறுக்கிறவர், மற்ற மதத்துக்காரர்களை எல்லாம் வெறுக்கிறவர், அவர்களையெல்லாம் அடியோடு ஒழித்தவர், இந்துகளின் மீது கடுமையான வரிகள் விதித்து அவர்களை இன்னலுக்கு உள்ளாக்கியவர் என்றெல்லாம் வரலாற்று ஆசிரியர்கள் எழுதி உள்ளனர். ஆனால், உண்மையை புரட்டி பார்க்கும் போது
அவர் பல வரிகளை இந்துகளுக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கும் சேர்த்துதான் விதித்து இருக்கிறார்.

வரி விதிக்காமல் நாட்டை ஆள முடியாது. வரி வருவாயின் மூலம்தான் நாட்டைச் செம்மையாக ஆள முடியும் என்று அவர் கருதியிருக்கிறார். இந்துக்களையே முழுமையாக அழிந்துவிட வேண்டும் என்று கருதியிருந்தால், குமரகுருபரர் காசியிலே கட்டியிருந்த மடத்திற்கு ஒரு பெரிய தொகையை ஒளரங்கசீப் கொடுக்க வேண்டிய தேவையில்லை.


இன்றைக்கும் அந்த பதிவு காசி மடத்தில் இருக்கிறது. குமரகுருபரர் கட்டிய அந்த மடம் ஒன்றும் இஸ்லாமிய மடம் அன்று. இந்து மதம் சார்ந்த சைவ மதம் சார்ந்த ஒரு மடம். அந்த மடத்திற்கு ஒரு பெரும் தொகையை உதவியாகக் கொடுத்தவர் ஒளரங்கசீப்.

சில இடங்களிலே அவர் கடுமையாக இருந்திருக்கலாம். இசைவாணர்கள் சிலர் இடத்திலே அவர் கோபம் கொண்டார் என்பது உண்மைதான். ஒருமுறை அந்த இசைவாணர்கள் எல்லாம் ஒரே ஒப்பாரியோடு வரிசையாக போனார்கள். எங்கே போகிறீர்கள் என்று ஒளரங்கசீப் கேட்டபோது 'நீங்கள் இசைக்கு இடம் இல்லை என்று சொல்லிவிட்டதால், இசைக் கருவிகளை எல்லாம் புதைக்கப் போகிறோம்' என்று சொன்னார்கள். உடனே ஒளரங்கசீப் 'கொஞ்சம் ஆழமாகக் குழி தோண்டி புதையுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்.

அவர் இசைக்கும், கலைக்கும் எதிரி இல்லை. நாம் இசை கேட்டு கொண்டிருக்க பிறந்தவர்கள் இல்லை. செய்வதற்கு ஏராளமான வேலைகள் உள்ளன என்பதாக கருதியவராக இருந்திருக்கிறார்.

ஒளரங்கசீப்பிற்கு இரண்டு பக்கங்கள் இருந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் ஒரு பக்கத்தை மட்டுமே சொல்லி கொண்டிருப்பதில் நியாயமுமில்லை.






நூல் : ஒன்றே சொல், நன்றே சொல்
ஆசிரியர் : ஐயா, சுப,வீரபாண்டியன்.

4 comments:

தடம் மாறிய யாத்ரீகன் said...

நானும் கூட நிறைய இவரைப்பற்றி படித்திருக்கிறேன், வரலாற்றில் இவர் பெயர் கொஞ்சம் தவறாக பத்யப்பட்டு இருக்கிறதோ எனக்கூட எனக்கு தோன்றுகிறது. ஷாஜஹானை இவர் சிறையில் அடைத்து அரசு கஜானாவில் இருந்த அளவுக்கு அதிகமான பணத்தை கொட்டி எதற்கு இவர் தேவை இல்லாமல் தாஜ் மகாலை கட்டினார் என்ற காரணத்தினால்தான். இவரே தன் கையால் குல்லா நெய்து அதை விற்று தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வாராம். இவருக்கு திறமை இருந்தும், கொஞ்சமும் அறிவுத்திறன் இல்லாத இவரது சகோதரன் தாராவுக்கு முடி சூட்டுவதை எதிர்த்தார். இன்னும் நிறைய இருக்கிறது., பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

histories are written by the winners, not by the defendant, like wise who supports the arts and entertainers they are the big and good rulers. now a days the politicians in tamilnandu are come from the entertainment industry.

Siraju said...

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி நண்பர்களே !

Anonymous said...

naudunilayana karuthu..... varalarai thiruthum neram vanthu vittathu... we need leader like azeeb to solve all political issues.. ahamed

Post a Comment