Thursday, March 15, 2012

பணிவின் அடையாளம் ஃபாரடே.




மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம் போல் பாயக்கூடியது. தொலைக்காட்சி முதல் கொண்டு நாம் பயன்படுத்தும் மின்சார உபகரணங்கள் அனைத்தும் அந்தக் காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்படமால் இருக்கக் காரணம் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் மின்மாற்றி (Transformer) கருவிகள்தான். அந்த மின்மாற்ற கருவியை உருவாக்கிய அறிவயல் மேதை மைக்கேல் பாரடே (Michael Faraday).

மைக்கேல் பாரடே இங்கிலாந்தில் 1791 - ம் ஆண்டு பிறந்தார். எழ்மை அவரது பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்தியது. ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரே ஒரு ரொட்டியைத் தருவார். அதை 14 துண்டுகளாகப் பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார். அப்படியொரு வறுமை அவரை வாட்டிய போதும் அவருக்கு புத்தகங்கள் மீது ஆர்வம் அதிகம் .

பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று அவசர அவசரமாக புத்தகங்களைப் புரட்டுவார். கடைக்காரர்கள் அவரை விரட்டியடிப்பார்கள். சிலர் இரக்கப்பட்டு புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பார்கள். அதில் ஒரு கடைக்காரர் ஃபாரடேக்கு புத்தகம் பைண்டிங் செய்யும் வேலை கொடுத்தார். பைண்டிங்குக்கு வரும் பல அறிவியல் புத்தகங்களைப் படித்து அவர் தன் அறிவை வளர்த்துக் கொண்டார்.

மைக்கேல் ஃபாரடே மிகவும் நேசித்த ஒரு விஞ்ஞானி சர்.ஹம்ப்ரி டேவிட். ஃபாரடே ஹம்ப்ரி டேவிட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'தங்களுடைய ஆய்வு கூடத்தில் ஒரு எடுபிடி வேலை இருந்தால் கூட எனக்கு தாருங்கள்' என்று எழுத, ஃபாரடேயின் ஆர்வத்தைக் கண்டு அவரை தன்னுடைய உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.

படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்ட ஃபாரடே, வருடக்கணக்கில் ஆய்வுகள் மேற்கொண்டு தனது 40 வயதில் 'காந்தத்தினால் மின்சக்தியை உருவாக்க முடியும்' என்று நிருபித்தார். அதன் பின்பும் 25 ஆண்டுகள் கடுமையான ஆய்வில் ஈடுபட்டு, மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் டிரான்ஸ்ஃபார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டறிந்தார்.


டிரான்ஸ்ஃபார்மர் கருவி மின்சாரத்தைச் சீர்ப்படுத்த உதவும் என்றால், டைனமோ மின் உற்பத்திக்கே துணை செய்கிறது. இன்றுவரை மோட்டார் வாகன இயக்கத்துக்கு அடியப்படையாகவும் திகழ்கிறது.

இந்தக் கண்டுபிடிப்புகளால் மாமேதை விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடேவுக்கு 'சர்' பட்டம், ராயல் கழகத்தின் தலைவர் பதவி ஆகியவை தேடி வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன்' என்று கூறி, இரண்டையும் பணிவாக மறுத்துவிட்டார்.

ஃபாரடே 1867 - ம் ஆண்டு மறைந்தார். அப்போது புகழ் பெற்ற மேதைகளை லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் அடக்கம் செய்வதே பெருமையாகக் கருதப்பட்டது. ஆனால், மைக்கேல் ஃபாரடேவின் உடல், அவர் விருப்பப்படி ஒரு சாதாரண இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பிறகு அது சாதாரண இடுகாடா என்ன ?


(மைக்கேல் ஃபாரடேவின் கல்லறை)








தகவல் : சி.பரத்.
பட உதவி : விக்கிப்பீடியா.

1 comments:

Dee said...

arumayana seithi...Inspirational post.

Post a Comment