Wednesday, July 20, 2011



சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்... என்ற பாரதியின் பாடல் வரிகள் வில்லூர் பள்ளி மாணவர்களின் காதுகளுக்கு இன்னும் எட்டவில்லை. மாணவர்களின் மனங்களில் பாகுபாடு எண்ணம் பொதிந்து கிடப்பதால் இங்குள்ள தலித் மாணவர்கள் சிலர் வேறு பள்ளிகளுக்கு மாறிச் சென்றுள்ளது அதிர்ச்சி யூட்டுவதாக இருக்கிறது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் டி.கல்லுப்பட்டி செல்லும் சாலையில் உள்ளது வில்லூர் என்ற கிராமம். தனிப்பஞ்சாயத்தான இக்கிராமத்தில் சுமார் 225 தலித் குடும்பங்களும் சுமார் ஆயிரம் ஆதிக்க சாதி இந்துக்கள் குடும்பங்களும் உள்ளன. கடந்த மே 1 ஆம் தேதி, இந்தக் கிராமத்தில் நடந்து கொண்டிருந்த தீண்டாமைக் கொடுமை யின் அவலநிலை உலகத்தின் வெளிச்சத்திற்கு பட்டவர்த்தனமாக வெளிவந்தது.

இந்தக் கிராமத்தில் தலித்துகள் மையப்பகுதியிலும் சுற்றிலும் சாதி இந்துக்களும் உள்ளனர். இதனால் ஆதிக்க சாதி இந்துக்களின் தெருக்கள் வழியேதான் இவர்கள் வெளியிடங் களுக்குச் செல்ல முடியும். அப்படி தெரு வழியே செல்லும்போது இரு சக்கர வாகனங்களில் யாரும் ஏறி அமர்ந்து கொண்டு ஓட்டிச் செல்லக் கூடாதாம். கைலியை இறக்கிவிட்டு தான் நடக்க வேண்டுமாம். ஊரிலுள்ள ஹோட்டல்களில் தலித்துகள் பெஞ்சின் மீது அமர்ந்து உணவு உண்ணக்கூடாது; கீழே உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். இரட்டைக் குவளை முறை, பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் அமரும் இடத்திலும் இவர்கள் அமரத் தடை. ஊரிலுள்ள குளத்தில் இவர்களுக்கு தனி படித்துறை என தீண்டாமையின் பல்வேறு வடிவங்கள் இன்றும் இங்கே புழக்கத்தில் உள்ளன. ஊர்க் கமிட்டி தேர்ந்தெடுக்கும் ஒரு தலித் குடும்பத்தினர் வருடம் முழுவதும் இடுகாட்டுப் பணிகளைச் செய்யவேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. மறுத்தால் ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுவார்களாம். இந்த வரிசையில் பள்ளியிலும் பாகுபாடு கொடுமை அரங்கேறியிருப்பது தலித் மாணவர்களின் இடப்பெயர்வால் வெளியே வந்துள்ளது.


இதுகுறித்து தசஇயிடம் பேசிய அந்த ஊரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஜி.முருகன், “கடந்த மே 1ந் தேதி நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். எனது தம்பி தங்கப்பாண்டியன் கோவிலுக்கு இரவில் வருவதாக என்னிடம் தெரிவித்திருந்தார். அப்போது வீட்டிற்கு வந்துவிட்டு திரும்பியவர் செல்போனை மறந்து வந்துவிட்டார். இதனால் அவசரத்தில் டூவீலரிலேயே தெரு வழியே வந்துவிட்டார். இதைப் பார்த்து ஆதிக்க சாதியினர் அவரைத் தாக்கியுள்ளனர். இதனால் அவர் போலீசில் புகார் செய்தார்.


இதனையறிந்த எஸ்.பி. ஆஸ்ராகர்க் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் ஊருக்கே வந்து மக்களிடம் பேசினார். அப்போது பிரச்னை பெரிதாகி துப்பாக்கிச் சூடு நடந்தது. பிறகு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டது. நீண்ட ஆண்டுகளாகவே நாங்கள் அவர்கள் தெரு வழியே இருசக்கர வாகனங்களில் அமர்ந்து செல்லக்கூடாது. இதனால் எங்கள் ஆட்கள் பல பேர் ஊரைச் சுற்றி பின்பக்கமாக தான் வண்டிகளில் வருவோம்’’ என்றவர், “இந்தப் பிரச்னையால் பள்ளிக் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாவது படிக்கும் எனது மகள் பாலாமணியை இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அருகிலுள்ள கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றியுள்ளேன். ஏனெனில் இந்தப் பிரச்னையை மையமாக வைத்து மாணவர்கள் சிலர் உன் அப்பாவால் தான் பிரச்னை எனச் சொல்லி அடிக்கடி மிரட்டவும், அடிக்கவும் செய்கின்றனர். அதனால் பள்ளியை மாற்றிவிட்டேன்” என்கிறார்.


இந்தக் கிராமத்தில் ஆதிக்க சாதி இந்துக்கள் பிள்ளைகளை தலித்துகள் அனைவரும் ‘அய்யா' என்றுதான் அழைக்க வேண்டுமாம். பெரியவர் களாக இருந்தாலும் அவர்களும் அய்யா என்றே அழைக்கவேண்டும். “நாங்கள் பள்ளியில் அவர்கள் வீட்டு ஆண் பிள்ளைகளை ‘அய்யா’ன்னு தான் கூப்பிடணும். தப்பித் தவறிக் கூட வாடா போடான்னு சொன்னால் அவ்வளவுதான். எல்லா பசங்களும் சேர்ந்து அடிப்பாங்க. டீச்சர்ட்ட போய் சொல்வோம். டீச்சரும் அவங்களை கண்டிச்சி அடிப்பாங்க. ஆனா ஸ்கூல் விட்ட பிறகு காத்திருந்து எங்களை அடிப்பாங்க. அவங்க பெண் பிள்ளைகள் யாரும் எங்களை திட்டக் கூட மாட்டாங்க. எங்களை அடிச்சா கூட அந்தப் பிள்ளைங்க கேட்பாங்க. உடனே அவங்க பள்ளப் பிள்ளைகளுக்கு ஏண்டி வக்காலத்து வாங்குறீங்கன்னு சொல்லி சண்டை போடுவாங்க” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இடம்பெயர்ந்த பள்ளி மாணவி ஒருவர். “இப்போது சேர்ந்திருக்கும் பள்ளியில் எந்தப் பாகுபாடும் பார்க்கறது இல்லை. சந்தோஷமா இருக்கு” என்கிறார் அந்த மாணவி மேலும்.


எனது மூன்று மகன்களையும் கோவில்பட்டி அருகேயுள்ள ஆதிதிராவிட நலத்துறைக்குட்பட்ட பள்ளியில் விடுதியில் தங்கிப் படிக்குமாறு செய்துள்ளேன்” என்கிறார் வார்டு கவுன்சிலராக இருக்கும் வீ.முருகன். “இங்கே தொடர்ந்து பிரச்னை யாகவே உள்ளது. அதான் அவர்களை விடுதியில் தங்கிப் படிக்குமாறு செய்து விட்டேன்” என்கிறார் அவர். விவசாயம் செய்துவரும் ராமகிருஷ்ணன் தனது மகளை கள்ளிக்குடி பள்ளியில் 12 ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார். இதுபோல் ஊரில் 15 மாணவர்கள் இந்தப் பள்ளியில் இருந்து வெளிப்பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ‘சமூக நீதி' என்ற மனித உரிமை அமைப்பின் தலைவர் ஆறுமுகம் தசஇயிடம் குறிப்பிடுகையில், “பிரச்னை நடந்த மறுநாள் நாங்கள் அங்கே சென்றோம். அந்த ஊரில் கட்டப் பஞ்சாயத்து முறை உள்ளது. கட்டப் பஞ்சாயத்துகள் இருக்கக்கூடாது என்று ஒரு வழக்கின் விசாரணையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. எனவே அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் மாணவர்களிடையே சாதிப் பிரச்னை எழுந்தபோது கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஒரு பயிற்சி வகுப்பினை நடத்தினர். இதில் யோகா, ஒருமைப்பாட்டை வலியுறுத்தல், ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செய்தனர். அதே போல் இந்தக் கிராமத்திலும் கல்வித் துறை அதிகாரிகள் செய்து மாணவர் களிடையே ஒற்றுமையுணர்வை ஏற்படுத்தி பாகுபாட்டினைக் களைய வேண்டும். அதேநேரத்தில் எஸ்சி&எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில் மாவட்ட கண்காணிக்கும் குழு அமைக்கப்பட்டு தீண்டாமை உள்ள கிராமங்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்தக் குழு சரியாகச் செயல் படவில்லை. இந்தக் கமிட்டியை சரி செய்ய வேண்டும்” என்கிறார் அவர். பிஞ்சுமனங்களில் நஞ்சு வேண்டாமே ?

நன்றி : நிருபர் பேராச்சி கண்ணன் மற்றும் தி சண்டே இந்தியன்

0 comments:

Post a Comment