தமிழகத்தில் கூட, வீரப்பனையும் அவரது கூட்டாளிகள் சிலரையும் பிடிப்பதற்கு அல்லது கொல்வதற்கு பெறப்பட்ட சிறப்பு அதிகாரத்தை வைத்துக் கொண்டு, காவல் துறையின் அதிரடிப்படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொன்றும், சில நூறு மக்களை காணாமல் ஆக்கியும், பாலியல் கொடுமைகள் மற்றும் உடல் வதைகளில் உச்ச நிலைகளைக் கையாண்டும் நிகழ்த்திய மனித விரோத செயல்களை நாமறிவோம். மிகச் சமீபமாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மக்களின் நிராயுதபாணியான போராட்டங்களின் மீது, ராணுவப் படையினர் நிகழ்த்திய ஒடுக்குமுறையில் ஒரே வாரத்தில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆக, தரப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கும் இடப்படும் ஆணைகளுக்கும் முகங்கொடுக்க ராணுவ சிப்பாய்கள் மட்டுமல்லர், மக்களும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசும் அதிகார வர்க்கமும் விரும்புகின்றன. ஆனால், ஆளும் வர்க்கத்தின் இவ்விருப்பத்தைக் காறி உமிழ்வது போல, தண்டேவாடாவில் பணியிலிருக்கும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு ராணுவ சிப்பாய் "தெகல்கா' (மே 8, 2010) பத்திரிகையாளரிடம், “நான் எப்பொழுதும் எனது நாட்டிற்காக தியாக உள்ளத்துடன் பணிபுரியவே விரும்புகிறேன். ஆனால், ஒன்றுமில்லாததற்காக நான் சாகப் போவதாகத்தான் இப்பொழுது உணர்கிறேன். பல்வேறு சட்டவிரோத நிகழ்வுகளை நான் இங்கு பார்த்து வருகிறேன். கண்மூடித்தனமாக நாங்கள் கட்டளைகளைப் பின்பற்றுகிறோம். தேடுதல் வேட்டைக்குச் செல்லும்போது, மாவோயிஸ்டுகள் எவர் என்பதை அறிய முடிவதில்லை. ஏழை பழங்குடியினர் தாக்கப்படுவதும், ஒன்றுமறியாதவர்கள் கொல்லப்படுவதும்தான் நடக்கிறது.
“ஒருவரை மாவோயிஸ்ட் என நீங்கள் முடிவெடுத்தால், அவரைக் கொன்றுவிடலாம் என்றுதான் எங்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்காக நான் செய்து கொண்டிருப்பது ஒன்றுமல்ல என்றுதான் நான் உணர்கிறேன். எனது நாட்டுப் பற்று இறந்து விட்டது என்பதையே சொல்லவும் விரும்புகிறேன்'' – என ராணுவ மொழியில் கூறுவதானால் "நெற்றிப் பொட்டில் சுட்டாற்' போல கூறியுள்ளார். இது ஒரு வகையில் ராணுவ முகாமிற்குள்ளிருந்து எழும் அபயக் குரல்; ஒப்புதல் வாக்குமூலம்; மனித முகமும் கூட.
“பெரும்பாலான ராணுவ சிப்பாய்கள் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். மேலும், அவர்களில் சிலர் பழங்குடியினரும் கூட. ஆனால், ராணுவப் படையினர் என்ற வகையில் அவர்கள் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தும் கொடுமைகளைக் கணக்கிடும் போது, அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள். அவர்களுக்குப் பாடம் புகட்டவே சிந்தால்நர் மற்றும் சிந்தாகுபா பகுதிகளில் நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம்'' என ஒரு தொலைபேசி உரையாடலின்போது "தெகல்கா'விடம் குறிப்பிட்டவர் வேறு யாருமல்லர், பஸ்தார் மண்டலத்தின் மாவோயிஸ்ட் கட்சி குழுவின் செயலாளரும், தண்டேவாடா தாக்குதல் திட்டத்தின் வடிவமைப்பாளருமான ராமண்ணா (எ) ராவுல சீனிவாஸ் (வயது 44) தான். இவர், ஆந்திராவில் ஒரு பண்ணைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, 30 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப உறவுகளிலிருந்து விலகி, சட்டீஸ்கர் சென்று விட்டவர். சட்டீஸ்கர் அரசாலும் ராணுவத் துருப்புகளாலும் தேடப்படுவோர் பட்டியலில் முதன்மை இடத்தில் இருப்பவர்.
ராமண்ணா மட்டுமல்லர், நக்சல்பாரி அரசியலின் தத்துவ அடிப்படைகளைக் கற்ற எவரும் ராணுவம் மற்றும் காவல் துறையின் கடைநிலை துருப்புகள் குறித்த கண்ணோட்டத்தில் இத்தகைய கரிசனத்தையே கொண்டுள்ளனர். அதனால்தான் சீருடை தரித்த இப்படையினரை, அரசாளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவிகள் என வகைப்படுத்துகின்றனர். ஆனால், ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான சமூக – அரசியல் கண்ணோட்டத்துடனேயே பயிற்றுவிக்கப்படும் ராணுவம் மற்றும் காவல் துறையினர், பார்வையாளராக இருக்கும் ஏனைய பிரிவினரை விட, ஒடுக்குமுறையில் பங்கேற்கும் வகையினர் என்ற அளவில் – ஒவ்வொரு நிகழ்வு குறித்துமான நேரடி சாட்சியாகவும் இருக்கிறார்கள். இருந்தும் மிகச் சிலரே, மிகச் சில தருணங்களில் மட்டுமே தமது மனித முகங்களை வெளிப்படுத்தி நிற்கின்றனர். ஆனால் மிருக பலம் கொண்ட ஆளும் வர்க்கத்தின் கருணையற்ற விசாரணைகளின் முன்பு, இம்முகங்கள் பலவீனமானவையே.
கடந்த பத்தாண்டுகளில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் பிரச்சனை என்ற வகையில், மாவோயிஸ்டுகளின் போராட்டங்களுக்கு நியாயம் கற்பிக்கும் அல்லது பழங்குடி மக்களின் சார்பில் பேசத் தலைப்படும் பலமான முகங்களையும் நாம் கவனம் கொள்ள வேண்டியதிருக்கிறது. “மாவோயிஸ்டு பிரச்சனை குறித்து பேச முற்படும் எவரும், அதை ஓர் "அபாயம்' என்ற அளவில் மட்டுமே குறிப்பிட விரும்புகின்றனர். நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த உள்நாட்டு "அபாயம்' 5ஆம் அட்டவணை (பழங்குடியினர் வாழும்) பகுதிகளில் மட்டும் ஏன் இத்தனை வலிவுடன் நிலவுகிறது என்ற கேள்வியை நமக்குள் எழுப்ப வேண்டும். மிக நீண்டகாலமாக, நமது வளர்ச்சித் திட்டங்களின் கருத்துகள் அனைத்தும் வேதாந்தா, போஸ்கோ, டாடா, எஸ்ஸார், மிட்டல் போன்றவர்களின் லாப நோக்கங்களுக்காக, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டுவதற்குத்தானே முன்வைக்கப்படுகின்றன. பங்கேற்புடன் நிகழும் முன்னேற்றத்திற்கும், ஆக்கிரமிப்பில் நிகழும் முன்னேற்றத்திற்கும் இடையிலான வேற்றுமைகளை நாம் விளக்க முற்பட வேண்டும்'' என்கிறார், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் (அய்யர்).
இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் 243ஜி மற்றும் 243 இசட்.டி. ஆகியவற்றில் செய்யப்பட்ட 73ஆவது திருத்தங்களைச் சுட்டிக் காட்டும் மணிசங்கர், “அனைத்து மாநில அரசுகளும் "பழங்குடி மக்களுக்கான பஞ்சாயத்துராஜ் விரிவு சட்டம்' – PESA 1996 இன் அடிப்படையில், பழங்குடியினரை அவர்கள் வாழும் வனப்பகுதிகளின் முழு உடைமையாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பழங்குடி கிராமத்திலும் அங்கு வாழும் வயதுவந்த ஒவ்வொரு மனிதரையும் உறுப்பினராகக் கொண்ட கிராம சபாக்களின் முழு ஒப்புதலோடு மட்டுமே, அக்கிராமத்தின் வளங்களோ, விளை பொருட்களோ, நிதி ஆதாரமோ, இதர சேமிப்புகளோ கையாளப்பட வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்திச் சொல்கிறது. ஊழல் மயப்பட்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து விலக்கி, பழங்குடியினரின் வாழ்க்கை உத்தரவாதம், நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் அனைத்தும் அம்மக்களிடமே இருக்க வழிவகை செய்யும் இது போன்ற சட்டத் திருத்தங்களால் மட்டுமே, ஜனநாயகம் மிக உயர்ந்த கட்டத்தில் நிலைபெறும்'' என்கிறார்.
மேலும் அவர், “மாவோயிஸ்டுகளின் பிடியிலிருக்கும் பகுதிகளில் மட்டுமல்ல, அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். டாடா, அம்பானி போன்றவர்களிடம் குவிந்துள்ள உபரி நிலங்களை அரசு புனிதமாகக் கருதிக் கொண்டிருந்தால், பெரும் சமூகப் பயன்பாட்டிற்கு அவற்றை எப்படி அரசால் கையகப்படுத்த முடியும்? நினைவுக் கெட்டிய காலம் முதல் பழங்குடியின மக்களே வனப்பகுதிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ளனர். தண்டகாரண்ய காடுகளில் பிரிட்டிஷ் படைகள் நுழைந்ததுதான், அம்மக்களின் பாரம்பரியத்தை தொந்தரவு செய்த முதல் நடவடிக்கை எனலாம். காலனி ஆட்சி வெளியேறியபிறகு, அம்மக்களிடமே அவர்களின் வனப்பகுதிகளை திருப்பித் தருவதுதானே, ஜனநாயக இந்தியா செய்திருக்க வேண்டிய முதல் கடமை. இந்திய நடுத்தர வர்க்கத்தினர் இன்றைய பெரு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைத்திருக்கின்றனர். ஆனால், நிலங்களின் உரிமையாளர்களான பழங்குடி மக்களோ, இந்நிறுவனங்களின் இத்திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதேன்?'' என்று கேள்வியெழுப்புகிறார்.
நேற்றைய மத்தியப் பிரதேச மாநிலத்திலும் இன்றைய சட்டீஸ்கர் மாநிலத்திலும் அமைந்துள்ள பஸ்தார் மாவட்டத்தின் ஜகதல்பூரில், 1955 இல் அகிய இந்திய பழங்குடியினர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, “உங்கள் வாழ்விடங்களில் உங்களுக்கு விருப்பமான வாழ்க்கை முறையிலேயே நீங்கள் இருக்கலாம்'' என உறுதியளித்திருந்தார். இந்த உறுதி அளிப்பின் நீட்சியாகவே 1996 இல் பழங்குடிப் பகுதிகளுக்கும் விரிவு செய்யப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம் (PESA) கொண்டு வரப்பட்டது.
பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்ட கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று, “1894 இல் கொண்டு வரப்பட்ட மத்திய நில கையகப்படுத்தும் சட்டம், PESA சட்டத்துடன் இன்றுவரை இணைக்கப்படவில்லை. மேலும், இது தொடர்பாக புதிய சட்டமுன்வரைவுகளும் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை. இந்நிலையில் காலனியாதிக்க காலத்திய நில கையகப்படுத்தும் சட்டம், பரவலான அளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பலவந்தமாக தனிநபர் மற்றும் சமுதாய நிலங்கள் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. பல நேரங்களில் மாநில அரசுகளே இதைச் செய்கின்றன'' என்கிறது. குறிப்பாக, ஜார்கண்ட் அரசு பன்னாட்டு நிறுவனங்களோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்காக, நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தை வைத்துக் கொண்டு, அரசு தொழில் நிறுவனங்களுக்கென முதலில் வளைத்துக் கொண்ட பிறகு, இந்நிலங்களை தனியார் பெரு நிறுவனங்களுக்கு "பொது மக்களின் நலன்' என்ற வார்த்தைகளில் நீண்டகால குத்தகைக்கு விற்றுவிட்டது.
ஏறத்தாழ அனைத்து மாநில அரசுகளுமே இது போன்ற சட்ட மீறல்களைத் தான் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மேற்கொள்கின்றன. 1990 – 95 வரையான ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் மதுரை – தேனி மாவட்டங்களில் பரந்துள்ள மேகமலை வனப்பகுதிகளில், ஏறத்தாழ 7,106 ஹெக்டேர் காட்டு நிலங்கள் சட்டவிரோதமாக, ஒரு குடும்பத்தின் சொத்தாக மாற்றப்பட்டிருந்த திருட்டுத்தனத்தை, 1996 இல் மாநில ஊழல் கண்காணிப்பு இணை ஆணையராகப் பொறுப்பிலிருந்து உமாசங்கர் அய்.ஏ.எஸ். கண்டறிந்து அரசுக்குத் தெரிவித்திருந்தார். இன்றுவரை அந்த சட்ட விரோத செயலின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள், இப்படித் தனிநபர்களால் சட்டவிரோதமாக மட்டுமல்ல, சட்டபூர்வமாகவும் களவாடப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதற்காக, வளர்ந்து கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு இடையில் நிலங்களைக் கையகப்படுத்துவதில், மற்றவர்களுக்கு சளைத்தவர்களில்லை என்ற அளவில் போட்டியே நடக்கிறது. காடு – மலைகள் சூழ்ந்த மாநிலங்களில் வனப்பகுதிகளும் சமவெளிப் பகுதிகள் நிறைந்த மாநிலங்களில் விளைநிலங்களும் அந்தந்த மாநில அரசுகளாலும், ஊழல் அரசியல்வாதிகளாலும் தொடர்ந்து களவாடப்பட்டுவருகின்றன. ஆனால் "கிராம சபா'க்கள் என அழைக்கப்படும் உள்ளூர் மக்களின் நிர்வாகம் மட்டுமே, அந்தந்தப் பகுதி நிலங்களுக்கு முழு உரிமையுடையன என உத்தரவாதமளிக்கும் PESA சட்டம் போன்றவையோ, வெறும் ஏட்டுச் சுரைக்காய் போல, எழுதப்பட்டவர்களாலேயே, எப்பொழுதோ அழிக்கப்பட்டும் விட்டன.
ஆனாலும் முதல் இந்தியப் பிரதமரின் உறுதி அளிப்பு முதல் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள்சார் அறிவாளிகளின் ஒத்துழைப்பு வரையான துணைக் கருக்களுடன், பழங்குடி மக்கள் காலனி ஆட்சிக்காலம் தொட்டு, தம் வாழ்விட உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டேயிருக்கின்றனர். ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஒரிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டத்தின் நாராயண்பட்டினத்தில் "ஜாசி முலியா ஆதிவாசி சங்க'த்தைச் சேர்ந்த சுமார் 150 பழங்குடி மக்கள், தங்கள் நில உரிமைகளுக்காக, நிராயுதபாணியாக கடந்த நவம்பர் 20, 2009 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவோயிஸ்டு தேடுதல் வேட்டைக்காக, நாராயண்பட்டினத்தில் சி.ஆர்.பி.எப்.இன் கம்பெனி ஒன்று முகாமிட்டுள்ளது. இவர்களும், உள்ளூர் காவல் துறையும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த பழங்குடியினர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமுற்றனர். ஆண்கள் அனைவரையும் தாக்கி, கைது செய்தனர். அதற்குப் பிறகும் நவம்பர் 28, 2009 அன்று காலை 7 மணியளவில் ஜங்திவல்சா என்ற கிராமத்தைச் சுற்றி வளைத்து, ஆதிவாசி சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் கடுமையாகத் தாக்கினர். இக்கிராமம் நாராயண்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலேயே இருந்ததால், துணை ராணுவப் படையினரின் காலை நேர கொலைவெறி சோம்பல் முறிப்புக்கான களமாக மாற்றப்பட்டது ("தெகல்கா' ஏப்ரல் 17, 2010).
இக்கிராமத்தில் மாவோயிஸ்டுகளின் உறுப்பினர்கள் வெடிகுண்டுகள் மற்றும் இதர ஆயுதங்களோடு தங்கியிருப்பதாகவும், அருகிலுள்ள காவல் நிலையத்தை தாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததால், அக்கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும், அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் தப்பித்துச் சென்றதாகவும், அவர்கள் தப்பித்துச் செல்ல உதவியவர்கள் மற்றும் மாவோயிஸ்டுகளோடு தொடர்புடையவர்கள் என 15 பேர் கைது செய்யப்பட்டதாகவும் – இக்கொலை வெறித் தாக்குதலின் பிறகு புனையப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டது. "அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்' என்ற குறிப்புடன் 13 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். மிகச் சிறுவனாகயிருந்த புலா பீமா (வயது 13)வைத் தவிர, மற்ற சிறுவர்கள் அனைவரும் மாவட்ட பொதுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வயது வந்தவர்கள் மற்றும் கடும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள பொதுச் சிறைகளில், வயது வராத சிறுவர்களை சிறைப்படுத்தக் கூடாது எனும் சிறார்கள் நீதிச் சட்டம், பழங்குடியினர் வழக்குகளில் சாதாரணமாக மீறப்படும் மற்றுமொரு வன்கொடுமையாக நடைமுறையில் இருக்கிறது. இவ்வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட 13 சிறுவர்களின் பிறப்புச் சான்றிதழோடு, அவர்கள் சிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்குரைஞர் சுட்டிக் காட்ட வேண்டிய அவலம் நேர்ந்தது. பல நேரங்களில் காவல் துறையினரின் சட்ட மீறல்களுக்கு நீதித் துறையும் ஒத்துழைப்பதை நாம் அறியாதவர்கள் அல்லர்.
கடந்த ஆகஸ்டு 2007இல் ஆந்திர மாநிலம் அய்தராபாத், ராம்நகரைச் சேர்ந்த பத்மாக்கா, க/பெ. பாலகிருஷ்ணா என்பவர், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பிஜப்பூரில் கைது செய்யப்படுகிறார். அவர் மீது இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 302, 149/IPC, 21(1)/ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு புனையப்பட்டது. ஆனால், வழக்கில் எவ்வித ஆதாரங்களும் காட்டப்படாததால், ஆகஸ்ட் 10, 2009 அன்று பிலாஸ்பூர் உயர் நீதிமன்றம், அவரை ராய்ப்பூர் மத்திய சிறையிலிருந்து விடுவிக்க ஆணை பிறப்பித்தது. அவரை அழைத்து வர அடுத்த நாள் அவரது வழக்குரைஞர் சிறைக்குச் சென்றபோது, ஆகஸ்டு 12 இல் விடுவிப்பதாக சிறை நிர்வாகம் கூறியது. தமது கட்சிக்காரரின் உயிருக்கு ஆபத்து நேர்வதை உணர்ந்த வழக்குரைஞர் உடனடியாக, ஆட்கொணர்வு மனு ஒன்றை சட்டீஸ்கர் அரசுக்கு எதிராகத் தொடுத்தார்.
ஆனால் சிறைக்கு உள்ளேயே குற்றவியல் நடைமுறை 147, 148, 307/IPC மற்றும் 25, 27/ஆயுதச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவரை மீண்டும் கைது செய்திருப்பதாகக் கூறி, நீதிமன்ற விசாரணைக்கு காவல் துறை உட்படுத்தியது. பிஜப்பூர், போபால்பட்டிணத்தை வாழ்விடமாகக் கொண்டிருந்த பத்மா, க/பெ. ராஜனா கடந்த 2001 அக்டோபர் 15 அன்று, போலி மோதலில் காவல்துறையால் கொல்லப்பட்டிருந்தார். ஆனால், அறியப்பட்டிருந்த மாவோயிஸ்டு உறுப்பினராயிருந்த பத்மா க/பெ.ராஜனாவின் மீது புனையப்பட்டிருந்த இரு முக்கிய வழக்குகளை பத்மாக்கா, க/பெ. பாலகிருஷ்ணாவின் வழக்கில் இணைத்திருந்தனர். தகுந்த ஆதாரங்களோடு பத்மாக்காவின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் இதை நிரூபித்தார் ("தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', ஆகஸ்டு 14, 2010).
இப்படியாக, அனைத்து வகைகளிலும் நீதிமன்றங்கள் காவல் துறையினரின் அயோக்கியத் தனங்களுக்கு வெளிப்படையாகவே துணை நிற்கின்றன. மாவோயிஸ்டுகளைக் காரணம் காட்டி, பழங்குடியின மக்களின் மீதான ஒடுக்குமுறைகளிலோ – நீதிமன்றங்கள் ஈவிரக்கமற்ற நிறுவனங்களாக அநீதியுடன் செயல்படுகின்றன என்றே குற்றம் சுமத்த இயலும். பழங்குடி மக்களுக்காகப் பேச விழையும் குறைந்த எண்ணிக்கையிலான அறிவாளிகளையும், பத்திரிகையாளர்களையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும், பினாயக் சென் போன்ற மருத்துவர்களையும், ஹிமான்சுகுமார் போன்ற காந்தியவாதிகளையும், ராமச்சந்திர குகா, சாய்பாபா போன்ற பேராசிரியர்களையும் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என காவல் துறை எளிதாக முத்திரை குத்தி விடுகிறது. தேவையெனில், வழக்கும் சிறைவாசமும் பூட்டிவிடும். நீதிமன்றங்கள் கைவிலங்குகளைத் தந்து வேடிக்கை பார்க்கும்.
நிகரகுவாவை பிறப்பிடமாகக் கொண்டவரும், பிரபல ராக்பாடகர் மைக் ஜாக்கரின் மனைவியுமான பியான்கா ஜாக்கர், அய்ரோப்பிய கவுன்சிலின் தூதுவராக அண்மையில் ஒரிசாவின் நியாம்கிரி மலைப்பகுதிக்கு வருகை தந்திருந்தார். இவர், மனித உரிமையாளராக, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலராக சர்வதேச அரங்கில் அறியப்படுகிறவர். அவர் அங்கு வேதாந்தா நிறுவனத்தின் சுரங்க வேலைகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்நிலையையும் நேரில் கண்டறிந்தார். அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஆக்ஷன் எய்டு, சர்வைவல் இன்டர்நேஷனல் மற்றும் இந்தியத் தொண்டு நிறுவனங்கள் பலவும், வேதாந்தா நிறுவனத்தின் முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி தன்னிடம் முறையிட்டதைத் தனது நேர்காணலில் ("தெகல்கா', 1.5. 2010) தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டுகளுக்கு வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பதிலேதும் சொல்லவில்லை என்பதால், லண்டனிலிருந்து வெளிவரும் "தி கார்டியன்' பத்திரிகையில் இவர் இதுபற்றி கட்டுரைகள் எழுதுவதாகவும் கூறுகிறார்.
“வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருப்பவள் என்ற வகையில் நானும் லண்டனில் பங்குதாரர்கள் கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்த நேரத்தில், "ஆக்ஷன் எய்டு' நிறுவனம் என்னை சந்தித்தது. "சீதாராம் குலிசிகா' என்ற பழங்குடித் தலைவரை எனக்கு அறிமுகம் செய்தனர். அவரைச் சந்தித்த பிறகு, வேதாந்தா நிறுவனம் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகளின் பின்னே எழுந்திருக்கும் பிரச்சனைகளை அவர்கள் மூடி மறைப்பதை உணர்ந்து கொண்டேன். மற்ற பங்குதாரர் களும் வேதாந்தா நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டு மென ஆதரவு திரட்டுவேன். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியாவில் வேதாந்தா நிறுவனத்தின் பங்கு முதலீடு, 25 சதவிகிதம் அளவுக்கு ஓரிசாவில்தான் செய்யப்பட்டுள்ளது. இம் மாநில அரசு வேதாந்தா நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது'' என கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார்.
நியாம்கிரி மலைப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களை சந்தித்த பிறகு, “இம்மலையில் வாழும் கோண்டு இன மக்களுக்கு மட்டுமல்ல, மழைவளம் மிக்க வனப்பகுதி என்ற வகையில் இந்திய மக்கள் அனைவருக்கும் இப்பகுதி முக்கியமானது. இயற்கை வாழ்வாதாரங்களுடன் தற்சார்பு மிக்க, தன்னிறைவு பெற்ற வாழ்க்கை முறையை கோண்டு இன மக்கள் பெற்றிருக்கின்றனர். உப்பு மற்றும் பெட்ரோல் மட்டுமே, அவர்களுக்குத் தேவையான வெளிஉலகப் பொருட்கள். ஒரு மூத்த பழங்குடி மனிதர் என்னிடம் சொன்னார், “எங்கள் நீர்நிலைகளில் வாழும் மீன்கள் கூட வெளி உலக நீர்நிலைகளில் வாழ முடிவதில்லை எனும் போது, நியாம்கிரி மலைக்கு வெளியே எங்களாலும் வாழ முடியாது'' என்று. இம்மலையில் செறிந்திருக்கும் பாக்சைட் படிமங்களால் நீராதாரம் அதிக அளவில் சேகரமாகின்றது. இது, மலையின் கீழ்ப்பகுதியில் வாழும் மக்களுக்கும் தேவையான நீர்வளத்தை இங்கிருக்கும் இரண்டு பெரிய ஏரிகளின் மூலமாகக் கொண்டு சென்று சேர்க்கிறது.
“தனிச்சிறப்புள்ள மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல், வளரும் நாடுகள் சர்வதேச மதிப்புயர்வுக்காக, பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும், சில தனிப்பட்ட செல்வந்தர்களை உயர்த்துவதற்கும், நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. மக்களின் பங்களிப்பும் முன்னேற்றமும் உள்ளடங்கிய, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் செய்யப்படும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமே நமக்குத் தேவையானவை'' என ஆக்கப்பூர்வமாகத் தனது கருத்துகளை பியான்கா முன்வைக்கிறார்.
உலக அளவில் சுரங்கங்கள், மக்களின் இடப்பெயர்வு, அரசு ஒடுக்குமுறைகள், புரட்சிகள் ஆகியவை பற்றி கேள்வியெழுப்பிய போது, “போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் மக்களுடன் பணிபுரிந்த அனுபவத்தில் சொல்கிறேன். மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டி, இயற்கை வளங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் உள்நாட்டுக் கலவரங்கள் வெடிக்கின்றன. வாழ்விடங்களிலிருந்து மக்களை அப்புறப்படுத்தி, அவர்களின் பாரம்பரிய நிலங்களை அபகரித்து, அடிப்படை மனித உரிமைகளைச் சிதைத்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய கேள்விகள் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
கோண்டு இன மக்கள் கேட்பது போல, அவர்களின் நிலங்களுக்குப் பதிலாகத் தரப்படும் பணம் ஒருபோதும் அவற்றை ஈடுசெய்ய முடியாது. ராணுவத்தைக் குவித்து, மக்களின் மீது தாக்குதல் நடத்தும் உள்நாட்டுப் போரை இந்திய அரசு தவிர்க்க வேண்டும். நிகரகுவா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, வளரும் நாடுகள் அனைத்திலும் மக்களின் மரணங்கள் மீதுதான் சுரங்கங்கள் தோண் டப்படுன்றன. கவுதமாலா, எல். சால்வடார், நிகரகுவா மற்றும் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட உள் நாட்டுக் கலவரங்கள் மற்றும் புரட்சிகள் பலவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மக்களுக்குத் துரோகம் இழைப்பவையாகவே முடிந்து போயின. இந்தப் படிப்பினைகளின் அடிப்படையில், இந்திய அரசும் அரசியல்வாதிகளும் மக்களின் குரல்வளையை மிதித்து முன்கொண்டு செல்லப்படும் இந்த வளர்ச்சி குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்'' என அக்கறையுடன் பதிலளிக்கிறார் பியான்கா ஜாக்கர்.
நன்றி : ஆசிரியர் இளம்பரிதி, தலித் முரசு இதழ் மற்றும் கீற்று இணையதளம்
0 comments:
Post a Comment