இதோ இந்தியாவின் அனைத்து மக்களின் பிரதிநிதிகள்' என்று இரண்டு தனி மனிதர்கள் கதாநாயகர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தனி மனிதர்கள் யார் என்பதே தமிழ் நாட்டுக்குத் தெரியாது. ஒருவர் கதர்குல்லாய் அணிந்திருக்கிறார் – பெயர் அன்னா அசாரே என்கிறார்கள். "பிரதமரே ஊழல் செய்தாலும் விடக் கூடாது; "லோக்பால்' என்ற அதிகாரம் கொண்ட அமைப்பை அமைத்தாலே ஊழல் ஒழிந்துவிடும்' என்கிறார்; ஊழல் குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்கிறார். தூக்குத் தண்டனையை காந்தியே எதிர்த்தவர்தான் என்பது, இந்த நவீன காந்திக்கு தெரியாமல் போய்விட்டது.
"உண்ணாவிரதம்' என்ற போராட்டத்தை அறிவித்தார், அவ்வளவுதான். பார்ப்பன தேசிய ஊடகங்கள் அவற்றை தேசியப் பிரச்சனையாகவே மாற்றின. சமரசம் பேச ஆட்சியாளர்கள் ஓடிவந்தார்கள். மணிப்பூர் மாநிலத்தில் கொடூரமான ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி, இரோம் ஷர்மிளா என்ற வீராங்கனை கடந்த 10 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார். மருத்துவமனையில் அவரை அடைத்துவைத்து ராணுவம் வலுக்கட்டாயமாக அவருக்கு மூக்கின் வழியாக உணவைத் திணிக்கிறது. ஷர்மிளாவின் பட்டினிப் போராட்டத்தை – ஒரு செய்தியாகக்கூட இந்த ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்றதில்லை.
அன்னா அசாரேயின் உண்ணாவிரத மேடையில் காந்தி படத்தை காணவில்லை. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே வணங்கிய "பாரத மாதா' படம்தான் அலங் கரித்துக் கொண்டிருந்தது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரங்கள் – அசாரேயின் படைத்தளபதிகள். அசாரே வுக்கு மிகவும் பிடித்தது, குஜராத்தின் மோடி ஆட்சிதான்; அங்கேதான் நல்லாட்சி நடக்கிறது என்கிறார்.
முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த "குஜராத் ராஜபக்சே'யின் ஆட்சியில் – 17 ஆயிரம் கோடி ரூபாய் குளம் வெட்டும் ஊழல், 260 கோடி ரூபாய் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழல், 600 கோடி ரூபாய் மீன் வளர்ப்பு திட்ட ஊழல் என ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன. கிராமங்களில் வறுமையின் கோராத்தாண்டவம்; மக்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு நகரங்களை நோக்கி ஓடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு – அவர்கள் விரும்புகிற இடங்கள் தாராளமாக ஒதுக்கப்படுகின்றன; அங்கே 5 ஆண்டுகளுக்கு எந்த வரியும் கிடையாது. அன்று மன்னர்கள் ஆட்சியில், இப்படித்தான் ஊர்கள் "தானமாக' (சதுர்வேதி மங்கலங்கள்) வழங்கப்பட்டன. அங்கே மன்னனின் எந்த வரி விதிப்பும் நடைமுறைக்கு வராது. அன்று சதுர்வேதி மங்கலங்கள்; இன்று அதற்குப் பெயர் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.
டாட்டாவின் "நா÷னா' கார் தயாரிப்புக்கு – உற்பத்தி செலவைவிட மோடி கூடுதல் மானியம் தருகிறார். நிலத்தைப் பறிகொடுத்த மக்கள், அரசிடமிருந்து இன்னும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று கதறுகிறார்கள். முஸ்லிம்கள் இனப்படுகொலை வழக்கில், மோடிக்கு "நீரோ மன்னர்' என்று பட்டம் சூட்டியது உச்ச நீதிமன்றம் (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்தவன் நீரோ). இதே நரேந்திர மோடி குஜராத்தில் "லோக் அயுக்தா' என்ற ஊழல் மீட்புக் குழுவை அமைக்க மறுத்து விட்டார் என்பது அசாரேவுக்கு தெரியாதுபோலும். ஊழலுக்காக உயிர் விடவும் தயாரான அசாரே, மராட்டியத்தில் தனது சொந்த கிராமத்தில் செயல்படுத்தி வரும் நல்வாழ்வுத் திட்டங்களில், சாதிப் பாகுபாடுகளை கைவிடத் தயாராக இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார், மதச்சார்பற்ற எழுத்தாளர் ராம்புனியானி.
கதாநாயகனாகக் களமிறக்கப்பட்டுள்ள மற்றொரு ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ். காவியுடையில் காட்சி தரும் "யோகா மாஸ்டர்'. பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இதுவரை இயக்கம் நடத்தியவர். இப்போது, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்கிறார். காவி உடை தரிக்கும் இவரின் சொத்து மதிப்பு 5,000 கோடி ரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 1,000 கோடி ரூபாய் என்றும் செய்திகள் கூறுகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் பதஞ்சலியில் மிகப் பெரிய யோக பீடம்; 300 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை; 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்; மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு; ஸ்காட்லாந்து நாட்டில் சொந்தமான தனித் தீவு என்று கொடிகட்டிப் பறக்கிறது இவரது சாம்ராஜ்யம்.
"பசுவதை'க்கு மரண தண்டனை கோரும், இவரது மருந்து நிறுவனத் தயாரிப்பில், விலங்குகளின் எலும்புகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்து, மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. பா.ஜ.க., பார்ப்பன இந்துத்துவ சக்திகள் புடை சூழ "ராம்லீலா' மைதானத்தில் இவர் "உண்ணாவிரத'த்தைத் தொடங்கினார். ஊழல் அரக்கனாக – 10 தலை ராவணன் உருவத்தை அமைத்து, "ராம ராஜ்ய' பெருமையைப் பறை சாற்றினார்கள்.
ஊழல் ஒழிப்பு பேரார்வம், திடீரென்று இவர்களிடம் பெருக்கெடுத்து ஓடியது ஏன்? காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக காமன் வெல்த் விளையாட்டு ஊழல்; ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்; 2ஜி அலைக்கற்றை ஊழல் என்று ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி – மக்களிடையே ஊழல் எதிர்ப்பு உணர்வு உருவானது. பாரதிய ஜனதா, இந்த உணர்வுகளை அறுவடை செய்ய திட்டமிட்டது. அவர்களின் திட்டமெல்லாம் 1975 ஆம் ஆண்டை மீண்டும் கொண்டு வரலாம் என்பதுதான். ஜெயப்பிரகாஷ் நாராயண், அப்போது – இந்திரா ஆட்சிக்கு எதிராக "முழுப் புரட்சி' இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், இந்துத்துவா சக்திகள் – ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதே நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே அத்வானிகளின் துடிப்பு.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள், மீண்டும் மக்கள் மன்றத்தில் கால் பதிப்பதற்கு – அவர்களிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. மீண்டும் "அயோத்தி ராமனிடம்' அடைக்கலம் புகுந்தால், மக்கள் ஆதரவு இருக்கப் போவது இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள்.
பா.ஜ.க. பரிவாரங்களின் இந்த சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டது. அன்னா அசாரே உண்ணாவிரதத்தைத் தொடங்கியவுடன் – அவரிடம் சமரசம் பேச காங்கிரஸ் ஓடியது. அவரது பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தது. பாபாராம்தேவை சரிகட்டுவதற்கு, நான்கு மத்திய அமைச்சர்கள் ஓடினார்கள்! ஆனால், காங்கிரசுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்தியாவின் பிரதமரை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது, ராம்தேவின் கோரிக்கைகளில் ஒன்று. கடந்த காலங்களில் பாரதிய ஜனதா முன்மொழிந்த கோரிக்கைதான் இது. நாட்டின் 125 கோடி மக்கள் தொடர்பான ஒரு பிரச்சனையில், ஒரு "யோகா மாஸ்டர்' முடிவெடுக்கும் அதிகாரத்தை தன்னிடம் எடுத்துக் கொண்டு விட்டார். அம்பேத்கர் போராடிப் பெற்ற – இரட்டை வாக்குரிமைக்கு எதிராக காந்தி தொடங்கிய உண்ணாவிரத சண்டித்தனத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு ?
ஊழல் – பதுக்கல் பணத்தை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இவர்கள், ஊழலின் வேகம் பாய்ச்சலாக மாறியதற்கான காரணத்தை கூறõமல் ஏன் மறைக்கிறார்கள்? ஒரு காலத்தில் – அரசு நிர்வாக மட்டத்தில் கையூட்டு பெறும் பழக்கம் இருந்தது. பெரும் தொழிலதிபர்கள் – தொழில் உரிமம் – தொழில் அனுமதி பெறுவதற்கு கையூட்டு தந்து வந்தார்கள். அப்போதெல்லாம் தொழில் கொள்கைகளை அரசுகள்தான் உருவாக்கின. ஆனால், 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு "சுனாமி வரத் தொடங்கியது. அது, "தாராளமயமாக்கல்' என்ற கொள்கை வடிவில் வந்தது. அதன் பிறகு அரசின் தொழில் கொள்கைகளை வடிவமைப்பதையே பெரும் முதலாளிகளும் – பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டன. வி.பி. சிங் மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியதும் அதே காலகட்டம்தான்.
அரசுத்துறை நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கத்தில் "அசைவு' தொடங்கியது. வடமாநிலங்களில் பார்ப்பன ஆதிக்க சாதி யினரே முதல்வர்களாக வந்து கொண்டிருந்த நிலையும் மாறத் தொடங்கியது. அப்போது பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியின்போது நிதியமைச்சர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த தாராளமயமாக்கல் கொள்கைதான் – அரசுத் துறைகளை, பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் பிடியில் கொண்டு போய் சேர்த்தது. முதலமைச்சர்களாக – பார்ப்பனரல்லாத – இதர சமூகப் பிரிவினர் வந்தாலும் – அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் விலை பேசி வாங்கி விட்டன. முதலமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர், அரசியல் கட்சிகளை பார்ப்பன – பன்னாட்டு நிறுவனங்களே இயக்கத் தொடங்கின.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை – தனியார் துறைக்கு விற்று விட்டால் சர்வதேசக் கடன்களை அடைத்துவிடலாம் என்ற ஆலோசனையை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரங்கராஜன் என்ற பார்ப்பனர் முன் வைத்தார். அவர் தலைமையிலேயே நரசிம்மராவ் ஒரு குழுவை நியமித்து, பொதுத் துறை பங்குகள் வேகம் வேகமாக விற்பனை செய்யப்பட்டன. முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் குழு (டிஸ்இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி) என்று அதற்குப் பெயர். தொடர்ந்து வந்த பாரதிய ஜனதாவின் ஆட்சியில் குழுவுக்கு பதிலாக, ஓர் அமைச்சரகத்தையே உருவாக்கினார்கள். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் அருண்ஷோரி தான் இந்தத் துறையின் அமைச்சர்.
இப்போது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் என்று சர்வதேச அளவில் ஆய்வுகளை மேற்கொண்ட தேவ்கர் குழு கூறுகிறது. தேவ்கர், சர்வதேச நிதி நிறுவனத்தில் பொருளாதார ஆய்வாளராகப் பணியாற்றியவர். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அதாவது, "தாராளமயமாதல்' கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகுதான், மேற்குறிப்பிட்ட தொகையில் 68 சதவிகிதம் (6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) வெளிநாட்டு வங்கிகளுக்கு திருட்டுத்தனமாகப் போயிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் மூளை பார்ப்பன அதிகார வர்க்கம். இவர்களின் கொள்ளைக்காக, வனச் சட்டங்கள், மின்சாரம், சுரங்கங்கள் மற்றும் தண்ணீர் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. அன்னியச் செலாவணி மோசடிகளை கிரிமினல் குற்றமாக்கிய "பெரா' சட்டங்கள் நீக்கப்பட்டன. மக்கள் நிலத்தை அபகரித்து, அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வரத் தொடங்கின. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் "கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை – 240 கோடி ரூபாய் என்றும்; இந்தத் தொகை அப்படியே வெளிநாட்டு வங்கிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது என்றும் வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் (Global Financial Integrity) கூறுகிறது.
2005 – 2006 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சி "கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி 3 லட்சத்து 74 ஆயிரத்து 937 கோடி ரூபாய் என்று ஒடுக் கப்பட்ட மக்களின் குரலை எதிரொலித்து வரும் கட்டுரையாளர் சாய்நாத் குறிப்பிடுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெறாத அரசியல் கட்சிகளே இல்லை; பொதுவுடைமைக் கட்சிகளும் இதில் அடக்கம். அண்மையில் "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு, இதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இப்படி பெரும் தொழில் நிறுவனங்களுக்கு "தானமாக'க் கொட்டி அழப்படும் பெரும் தொகை, ஊழல் தொகைதானே! ஊழல் எதிர்ப்பாளர்கள் ஊழலின் மூலத்தை ஏன் எதிர்க்கவில்லை? இவர்களின் உண்ணாவிரத நாடகச் செலவும் – கார்ப்பரேட் நிறுவனங்களின் "கணக்குப் புத்தகங்களில்' பதியப்படுவதாலா ?
2009 ஆம் ஆண்டு, இந்திய ஆட்சிகளின் "செல்லப்பிள்ளை' தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு முன் தேதியிட்டு 91 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகையை நிதி நிலை அறிக்கையில் ப. சிதம்பரம் அறிவித்தார். இந்த வரிச் சலுகையை "தேசிய நலன்' கருதி வரவேற்பதாக பாரதிய ஜனதாவின் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத்தில் பேசினார். அம்பானிகளைக் கொழுக்க வைப்பதில்தான் இவர்களின் தேசிய நலன்களே அடங்கியிருக்கின்றன.
இந்திய கிராமங்களில் நிலவும் தீண்டாமை குறித்து தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நூலாக வெளிவந்துள்ளது. அதில், “சமூகத்தில் ஏற்கனவே நிலவிவரும் சாதியப் பாகுபாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது தொழில் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களின் உழைப்பைச் சுரண்டி, குறைந்த கூலிக்கு ஒப்புக் கொள்ளச் செய்வதற்கு, சாதிய ஏற்றத்தாழ்வுகள் நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன'' என்று கூறுகிறது.
“பன்னாட்டு நிறுவனங்களிடம் பொருளாதார அதிகாரங்கள் மய்யம் கொண்டிருப்பது ஆபத்தானது. இதனால் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மாநிலங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து – சமத்துவமற்ற நிலை மேலும் மேலும் வளர்கிறது'' என ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினருமான திருமதி சோயா அசன் எச்சரித்துள்ளார்.
ஊழலுக்கு நீர் ஊற்றி வளர்த்து, நாட்டின் அரசியல் பொருளாதார அதிகாரங்களை தன் வசமாக்கிக் கொண்டு, வேகம் வேகமாக வளர்ந்து வரும் இந்த அதிகாரத் திமிங்கிலங்களை எதிர்க்காமல் – அவர்களின் மூகமூடிகள் ஊழலை எதிர்க்க வந்திருக்கிறார்கள். இப்போது, ஓர் அடிப்படையான கேள்வியை எழுப்ப வேண்டி யிருக்கிறது. ஊழல் ஒழிப்பு மட்டும்தான் இந்த நாட்டில் முதன்மையாக நிற்கும் பிரச்சனையா? ஊழலை மட்டும் ஒழிப்பது, இந்த சமுதாயத்தில் சாத்தியமா ?
இந்த சாதிய சமூக அமைப்பே ஊழலைவிட கொடூரமானது என்ற எதார்த் தத்தை, திட்டமிட்டு ஏன் மறைக்க வேண்டும்? இன்னும் இரட்டை டம்ளர்கள், இரட்டை சுடுகாடுகள், சேரிகள், சாதிய வன்கொடுமைகள், "கவுரவ'க் கொலைகள் – அதை அங்கீகரிக்கும் கட்டப் பஞ்சாயத்துகள், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் விலக்கப்பட்டு நிற்கும் தலித் மக்களின் பறிக்கப்படும் வாழ்வுரிமைகள் – இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? இவர்களின் இதயங்களைத் தொடவில்லையா ?
ஒரு மனிதனின் சமூக நிலையும் கவுரவமும் அவர் பிறவியிலேயே நிர்ணயிக்கப்படும் ஒரு நாற்றமெடுத்த சமூகம், உலகில் எந்தப் பகுதியிலாவது உண்டா? அரசியலும் பொருளாதாரமும் – சமூகம் பெற்றெடுக்கும் குழந்தைகள்தான். சமூகமே ஊழலாகிக் கிடக்கும்போது, இந்த ஊழல் நாற்றத்தைப் பாதுகாத்துக் கொண்டு, பொருளாதார ஊழல்களை மட்டும் ஒழித்துவிட இயலுமா?
அன்னா அசாரேயும், பாபாராம் தேவும் குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. உண்மையில், இந்த நாட்டின் மக்கள் அனைவரும் "சிவில் சமூகமாக' "குடிமக்கள்' என்ற உரிமைக்குரியவர்களாக வாழ்கிறார்களா? சட்டத்தின் அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் பொதுவாக சாதியச் சமூக அமைப்பு ஏற்றுக் கொண்டு விட்டதா?
ஒரு ஜனநாயக அமைப்பின் "சிவில் சமூகத்துக்கான இலக்கணம் என்ன? அம்பேத்கர் கூறுகிறார் : “சகோதரத்துவம் என்பது, ஜனநாயகத்தின் மற்றொரு பெயர்தான். ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல; முக்கியமாக அது, ஒரு கூட்டு வாழ்க்கை முறை. வழிவழியாக பெறப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. சாரத்தில் அது சமூக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கே ஆகும்.''
சமூக மனிதர்களுக்கு மதிப்பும், மரியாதையும் மறுக்கப்படுவதே இந்த நாட்டின் "பெருமை'. அதுவே இங்கு "தேசம்; தேசப்பற்று'. அதற்கே "புனிதம்' "தெய்வீகம்' "தார்மீகம் என்று பெருமைகள் எற்றப்படுகின்றன. "சாதி தர்மத்தை மீறாதே' என்பதே இங்கு சமூக ஒழுங்காக கட்டமைக்கப்படுகிறது. செய்த "பாவ'ங்களுக்கு லஞ்சம் கொடுத்து "புண்ணியம்' பெரும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ள சமூகம் இது. "வேண்டுதல்' "தட்சணை' "பாவவிமோசனம்' "பரிகாரம்' என்ற பெயர்களில் லஞ்சம் இங்கே புனித மகுடங்களை சூட்டிக் கொண்டு நிற்கிறது.
குறுக்கு வழியில் சட்ட மீறலில் நேர்மையற்ற முறையில் பயனடைவதுதான் "லஞ்சம் – ஊழல்' என்றால், அதே இலக்கணம் சாதியச் சுரண்டலுக்கும் அப்படியே பொருந்தும். சமூகத்தின் இந்த ஊழலை அப்படியே காப்பாற்றிக் கொண்டு, அந்த நச்சு மரத்தின் வேர்களுக்கு நீர் ஊற்றி வளர்த்துக் கொண்டு, துளிர்விடும் இலைகளான "பொருளாதார ஊழலை' மட்டும் வெட்டுவதற்கு "அரிவாள்' தூக்கிக் கிளம்புவோர் மக்களை திசை திருப்பும் மனிதர்களே !
அம்பேத்கர் கூறுகிறார் :
“நீங்கள் எந்தத் திசையில் சென்றாலும் சாதிக் கொடூரன் வந்து வழிமறிப்பான். இந்த சாதிக் கொடூரனை ஒழிக் காமல் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ அடையவே முடியாது.''
நன்றி : தலித் முரசு மற்றும் கீற்று இணையதளம்
0 comments:
Post a Comment