தான் பொறுப்பிலிருந்தபோது, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தை அதிகம் கவனம் பெற வைத்தவரான மணிசங்கர் (அய்யர்), அறிக்கையில் நீக்கப்பட்ட பகுதி குறித்து கேள்வியெழுப்பி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, தற்போதைய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் சி.பி. ஜோஷி ஆகியோருக்கு கடிதங்கள் எழுதினார். ஆனால், “நான் எழுதிய கடிதங்களுக்கு பிரதமரிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. இது தொடர்பாக நான்கு முறை பிரதமர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்ட பிறகும், சாதாரண அரசு அலுவலகம் ஒன்றின் நடைமுறையைப் போலவே என்னையும் தட்டிக் கழித்தனர்'' என அவர் குற்றம் சாட்டுகிறார். நீக்கப்பட்ட இப்பகுதியின் நகல் பிரதிகள், அதில் திரட்டப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களின் முக்கியத்துவம் கருதி, அதிகார உயர் மட்டங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஒரு பிரச்சனையாக இது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால், திட்டக்குழுவின் துணைத் தலைவரான மாண்டேக்சிங் அலுவாலியா, தனக்கும் ஒரு பிரதி தேவையென கேட்டுப்பெற வேண்டியதாகிவிட்டது. எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு அறிக்கையில் நீக்கம், திருத்தம் ஆகியவற்றை அமைச்சக அதிகாரிகளே இறுதி செய்தனர் என்று ஒதுங்கினார், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர். அமைச்சக அதிகாரிகளோ "இது பற்றி அறிக்கை தயாரித்த நிறுவனத்தைதான் கேட்க வேண்டும்' என கை காட்டினர். இப்படியாக, இவ்வறிக்கையின் நீக்கப்பட்ட பகுதிகள் பற்றிய விவாதம் நாளடைவில் மறைந்து போனது. பழங்குடிகள் மீதான அக்கறையும் எழுத்தளவில் கூட இல்லாமல் ஆக்கப்பட்டது!
1. நான்கில் மூன்று பகுதி மக்கள் கடைநிலை வாழ்க்கைத் தரத்திலேயே இருக்கின்றனர் 2. பெண் கல்வி விகிதம் தேசிய சராசரிக்கும் கீழ் கடைநிலையில் உள்ளது. 3. மூன்றில் ஒரு பங்கு மக்களே மழை, வெயில் பாவாத வீடுகளிலும் மின்சாரமும் பெற்றிருக்கின்றனர் என பழங்குடி மக்களின் வாழ் நிலையை சாராம்சமாக பட்டியலிடும் இவ்வறிக்கை, “பழங்குடி மக்களின் இந்நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் மாவோயிஸ்டுகள், அவர்களின் நில மற்றும் வன உரிமைகள், நியாயமற்ற அடிமாட்டுக் கூலிமுறை, அடிப்படை உரிமைகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். அம்மக்களை சமூகத் தொழிலாளர்களாக ஒருங்கிணைத்து கிராம மேம்பாடு, கூட்டுப்பண்ணை உழைப்பு, மழைநீர் சேகரிப்பு, தரிசு நில மேம்பாடு என்ற வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். தங்கள் அரசியல் மற்றும் ராணுவ நோக்கங்களுக்கான (ஆயுதம் வாங்குவது உள்ளிட்ட) செலவினங்களை சுரங்க நிறுவனங்களை மிரட்டி பெற்று வருகின்றனர்.
“மாவோயிஸ்டுகளின் செல்வாக்கைப் பெற்றிருக்கும் கிராமங்கள் தேடுதல் வேட்டையில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வரும்போது, அரசாங்கத்தின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக, மாவோயிஸ்டுகளுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான மோதல் அல்லது சட்டப்படியான அமைப்பாக இல்லாத சல்வா ஜுடுமின் பலப்பிரயோகங்களினால், அம்மக்கள் வன்முறைகளையும் இடப்பெயர்வுகளையும் சந்திக்க நேர்கிறது. இப்படித்தான் தெற்கு சட்டீஸ்கரிலிருந்து 600 கிராம மக்கள் ஆந்திராவுக்கும், ஒரிசாவுக்கும் உயிர்பிழைக்க இடம்பெயர்ந்து சென்றனர். ஆந்திராவின் கம்மம் மாவட்டத்திலும் ஒரிசாவின் மல்காங்கிரியிலும் வாழ்ந்துவரும் இவர்கள் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என்ற நிலையில்தான் நடத்தப்பட்டு வருகின்றனர்.
“இடம் பெயர்க்கப்பட்ட அக்கிராமங்களின், பஞ்சாயத்து ஒன்றின் உறுப்பினராகயிருந்த ஒருவர் IRMA களப்பணியாளரிடம் ஆய்வின் போது, "சல்வாஜுடும் எங்கள் குடிசைகளைத் தீயிட்டு எரித்தனர். அப்போது நக்சலைட்டுகளை இன்னும் சில மாதங்களில் ஒழித்துக் கட்டுவோம் என்றனர். ஆனால், நக்சலைட்டுகள் அங்கு இருக்கின்றனர். பாதுகாப்புப் படையினரும் அங்கு இருக்கின்றனர். எங்கள் வாழ்க்கைதான் முற்றாக அழிக்கப்பட்டது' என்றார். அனைத்து மட்ட நிலங்கள் கையகப்படுத்துதல் சட்டங்களையும் விட, அதிகாரமுள்ள புதிய அரசமைப்புச் சட்டமாக பஞ்சாயத்து ராஜ் (பழங்குடியினர் விரிவு) சட்டம் இருக்கிறது. ஆனால், அரசுகளோ இச்சட்டத்தை மேலாதிக்கம் செய்யும் வகையில், மத்திய நிலங்கள் கையகப்படுத்துதல் சட்டத்தைப் (1894) பயன்படுத்தி, பழங்குடியினரின் நிலங்களை அபகரித்துக் கொள்கின்றனர். இச்சட்டத்தை மீறுவதில் முதன்மையான அமைப்பாக அரசாங்கமே இருக்கிறது.'' எனும் விமர்சன நோக்கில் பதிவு செய்யப்பட்டிருப்பதால்தான் இப்பகுதி நீக்கப்பட்டிருக்கிறது.
மேலும், “கிராம சபைகளின் அனுமதி பெறாமல் அரசாங்கம் நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது. கிராம சபைகளின் அனுமதி பெறாமல் பழங்குடியினரின் நிலங்களை அரசு சுரங்க உரிமைகளுக்கு வழங்கக் கூடாது'' என்றும் “பழங்குடியினரின் கிராமங்களில், அதன் உண்மையான பொருளில் பஞ்சாயத்து ராஜ் (பழங்குடியினர் விரிவு) சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்'' என்றும் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது. “கஉகுஅ சட்டப்படி, பழங்குடியினரால் பாதுகாக்கப்படும் வன வளங்களினால் பெறப்படும் பயனில், உரிய பங்கை அப்பழங்குடி மக்களுக்கு அல்லது அவர்களின் கிராம சபைகளுக்குத் தர வேண்டும்'' எனவும் இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.
ஆனால் முரண்நகை என்னவெனில், “நவீன பொருளாதார வளர்ச்சியின் உரிய பங்கை பழங்குடி மக்களுக்கு, அவர்களின் வாழிடப் பகுதிகளுக்குள்ளேயே கிடைக்கச் செய்வதில் நாம் நடைமுறையில் தோல்வியடைந்துள்ளோம்'' என்ற மன்மோகன்சிங்கின் கூற்றை முன்மொழிந்துதான், இந்த ஆய்வறிக்கையின் அத்தியாயம் தொடங்குகிறது. சட்டீஸ்கரிலிருந்து விரட்டப்பட்டு, ஆந்திராவின் கம்மம் மாவட்ட வனப்பகுதிகளில் தஞ்சம் அடைந்திருக்கும் இம்மக்களைத்தான், பொலாவரம் அணைக்கட்டுத் திட்டத்திற்காக ஆந்திர அரசு "நீரில் மூழ்கும் அபாயப் பகுதிகள்' என அறிவித்து, அந்த இடங்களிலிருந்தும் விரட்டியடிக்கத் தொடங்கியுள்ளது. இது, உலகில் தொல்குடி மக்களுக்கு மட்டுமே நேரக்கூடிய கொடுமையிலும் கொடுமை என்பதை நாம் உணர வேண்டும். ஆனால், அதிகார வர்க்கத்திற்கும் (பழங்குடி) மக்களுக்கும் இடையிலான முரண்நகை என, இதை எளிதாகக் கருத முடியாது. அதிகாரம் பெற்றிருக்கும் சமூகங்களும் அவர்களின் பிரதிநிதிகளும் கல்வி அறிவும் சமூக விழிப்புணர்வும் பெறாத அடித்தள மக்களின் மீது நிகழ்த்தும் வன்கொடுமை என்பதால், இதைப் பகைமுரண் என்றே கொள்ள வேண்டும்.
வன வளங்களின் பயன்களைக் குறிப்பிடும் இடத்தில் இவ்வறிக்கை, “எடுத்துக்காட்டாக, ஒரு டன் இரும்புத் தாது வெட்டியெடுக்கப்படும் போது, சுரங்க நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு தரும் பங்குத் தொகையானது 26 ரூபாய் மட்டுமே. ஆனால், ஒரு டன் இரும்புத் தாதுவின் இன்றைய விலை மதிப்போ 3,000 ரூபாய். அதாவது, 100 மடங்கிற்கும் மேல்'' என சுட்டிக்காட்டுகிறது. ஆக, அரசாங்கத்திற்கே சர்க்கரை மடிக்கப்பட்ட காகிதம் மட்டுமே கிடைக்கிறது (ஒட்டியிருப்பதை நக்கிக் கொள்ளலாம்) எனும் போது, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் (காவலில்) வைக்கப்பட்டிருக்கும், காலடியில் கிடத்தப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட மக்களோ பங்கு கேட்க எங்கே வழியிருக்கிறது? உரிமைகள் எனச் சொல்லப்படுபவை எல்லாம் எழுதப்பட்ட காகிதக் குப்பைகள். உரிய பங்கு என்பதோ, அனுபவித்துக் கொண்டிருக்கும் அடி உதைகள் மட்டுமே. பஞ்சாயத்து ராஜ் (பழங்குடிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டதாம்!) சட்டமாவது, வெங்காயமாவது.
"உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்' என்ற பட்டு பீதாம்பரம் போர்த்திய இந்திய அரசியலமைப்பு எனும் யானை ஒன்றை உருவகப்படுத்திக் கொள்வோம். ஆப்பிரிக்க யானை இன்றளவும் கட்டுக்கடங்காத ஒரு காட்டு விலங்கு – ஆப்பிரிக்க பழங்குடி மக்களைப் போல. மனித முகம் தரித்த வெள்ளையின மிருகங்கள் இப்பழங்குடி மக்களை கருப்பின அடிமைகளாகப் பழக்கப்படுத்த கையாண்ட வழிமுறைகளை, ஆப்பிரிக்கக் கண்டத்தின் அரசியல் வரலாறு, உலகக் கறுப்பின மக்களின் இலக்கியங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தன் வரலாறு இவற்றினூடே நாம் அறிய முடியும்.
இன்றைய அமெரிக்கக் கறுப்பினத்தவர் ஒவ்வொருவரின் முப்பாட்டனும், கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு, யாரோவொரு வெள்ளையனின் வீட்டுக் கொட்டடியிலும் பண்ணைத் தொழுவத்திலும், அடிமையாகக் கிடத்த பயிற்றுவிக்கப்பட்டவனே. ஆப்பிரிக்க யானையின் மூர்க்கம் அப்படி. ஆனால் நாம் உருவகப்படுத்திக் கொள்வது, இதிகாசங்களிலும், புராணங்களிலும், பழங்கதைகளிலும் வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் இந்திய யானை என்பது நினைவில் இருக்கட்டும். இந்த யானை மண்மூடிப் போன இந்தியப் பேரரசுகளின் மகுடங்களாக நிலைப் பெற்றிருக்கும், வைதீகப் பேராலயங்களின் ஆகம விதிகளுக்கு ஏற்ப தலையசைக்கவும், நடை பயிலவும், துதிக்கை உயர்த்தவும் ஆயிரம் ஆண்டுகளாகப் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கின உருவத்திலிருக்கும் ஒரு "ஜந்து'. இதன் பேரணிகலனான "உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்' என்ற பீதாம்பரம், சிங்கம், புலி, மான், கரடி, காட்டுப்பன்றி என அய்வகை தோல்களின் மேல் பட்டு இழைகள் கொண்டு நெய்யப்பட்ட இந்தியப் பாரம்பரிய வகையைச் சேர்ந்தது.
பஞ்சலோகம், பஞ்சசீலம், பஞ்ச மிருக வனப்பு. இந்த வனப்பைப் பறைசாற்ற முகலாயர்களின் பஞ்ச திரவிய வாசனைப் பூச்சு வேறு. நாம் உருவகப்படுத்திக் கொள்ளும் இந்த யானையின் வால்முடிகூட உன்னதமானது. தந்தங்களோ உலகச் சந்தைகளின் உயரிய விலை மதிப்பிலானது. இது உலா வரும் அழகில், குடிமக்களாக வரம் பெற்றவர்கள் ஊர் கூடி லயிக்கலாம். வாய்ப்புள்ளவர்கள் துதிக்கை ஆசி பெறலாம். அரசர்களும், அவர்களின் குடும்பத்தினரும், முடிசூட்டும் அதிகாரம் பெற்றவர்களும், கடவுளுக்கு நிகரானவர்களும் மட்டுமே இதில் ஏறி பவனி வரலாம். அதற்குக் கொடுப்பினை வேண்டும்.
வெள்ளை ஒளியில் கொள்ளை கொள்ளும், இருண்மையான இதன் பேரழகுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், பிறப்பிலேயே அமைந்திருப்பவைதான் அடிப்படை உரிமைகள், குடிமக்கள் உரிமைகள், எழுத்து – பேச்சு மற்றும் கருத்துரிமைகள், வாக்குரிமை, சொத்துரிமை, பாலியல் உரிமை, பண்பாட்டு உரிமைகள் மற்றும் இன்னபிற மனித உரிமைகள் என்னும் வெண்ணிற நகக் கண்கள். நிலவொளி சிந்தாத இருள் கவிந்த நேரத்திலும், சாம்பல் பூத்த இந்நகக் கண்களைக் கண்ணுற்றோ அல்லது தொட்டுத் தடவியோதான், "சாது'வான இந்த யானை குறித்த மிரட்சியில் நாம் வாழ்கிறோம் அல்லது பக்திப் பரவசத்தில் திளைக்கிறோம்.
அரசனின் விருப்பத்திற்கொப்ப, இந்நகக் கண்கள் பாகனால் தேவையான தருணங்களில் சீர்செய்து வடிவுபடுத்தப்படவும், நோய்த் தொற்றால் சீழ் பிடிக்காதவாறு பாதுகாக்கப்படவும் ஆவன செய்யப்படும். யானையின் கால்களுக்கு பிறப்பிலேயே வாய்த்த அணிகலன்கள் அதன் நகக் கண்கள்; அவ்வளவுதான். குடிமக்களுக்கும் யானையின் அந்நகக் கண்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்வது, அவரவர்க்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள். சட்ட உரிமைகள், மனித உரிமைகள், வாழ்வாதார உரிமைகள் என ஆராய்ச்சியில் இறங்கும் அரைவேக்காடு ஜனநாயகவாதிகளுக்கும், குடிமக்களின் துரோகிகளுக்கும் இறுதியாகச் சொல்ல ஒன்று இருக்கிறது. ஆப்பிரிக்க யானையை அடக்கத் தேவைப்பட்ட அங்குசம், இந்திய யானையைப் பயிற்றுவிக்கவோ பழக்கப்படுத்தவோ போதுமானதுதான். ஒற்றுமை என்னவெனில், இந்த அங்குசம் இரண்டு கண்டங்களிலும் வந்தேறிகளால் கொண்டுவரப்பட்டதுதான். இந்த வந்தேறிகள் அல்லது மேலாதிக்கவாதிகள் ஆரிய – வெள்ளை இனவெறியர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஒடுக்குமுறை, சுரண்டல், பண்பாட்டு அழிப்பு ஆகியவற்றையே இவர்கள் ஊடுறுவும் நிலங்களுக்கேற்ப, சிந்தனை முறைமைகளாக வார்த்தெடுத்து வருகின்றனர்.
இம்முறைமையை நவகாலனிய அரசியல் வடிவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எனலாம். பொருளியல் வடிவில் பன்னாட்டு நிதி மூலதனம் எனலாம். நம் வனத்தில் பிறந்த யானையாக இருக்கலாம். ஆனால், அது நமக்கானதாக இல்லை. பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு விற்கப்பட்டு விட்ட, ஆரிய – வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அங்குசத்திற்கு அடிபணிந்து கிடக்கிற, நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற ஜந்து அது. தொட்டுத் தடவிப் பார்த்து யானைதானா என, உறுதிப்படுத்திக் கொள்ள விழைபவர்கள் முயலட்டும். வனங்கள், வன உரிமைகள், வனவாழ் பழங்குடிகள் என எழுதிக் கொண்டிருப்பதாலோ என்னவோ, வனத்திலிருந்து ஒரு யானை உருவகம் பெற்று எழுந்து வந்திருக்கிறது.
இக்கதையாடலுக்கும் இதுவரை எழுதிய மற்றும் இனி எழுதப் போகும் உண்மை நிகழ்வுகளுக்கும் இடையிலான தொடர்புகள் கோட்பாட்டு ரீதியிலானவை என்பதை நாம் புரிந்து கொள்வோம். சட்டங்கள், அறநெறிகள், உரிமைகள் என்ற சொற்கள் அனைத்தும் உலகின் பல்வேறு நிலப்பகுதிகளில், ஒன்று பேணப்படும் அல்லது அப்பட்டமாக மீறப்படும். ஆனால், வைதீக இந்திய மரபிலோ, இவை சூழ்ச்சிமிக்க மந்திரங்களாக உச்சரிக்கப்படுகின்றன. நடைமுறையில் இவை மோசடித்தனமானவையன்றி வேறல்ல. குடிமக்களின் கோபமும் போராட்டங்களும் எல்லை மீறிவிடாமலும் அல்லது போர்க்குணத்தை மடைமாற்றி "பூர்வஜென்ம' கழிவிரக்கத்தில் கரைந்துருகச் செய்தும், உரிமைகளுக்கும் அறநெறிகளுக்கும் இடையிலான வேற்றுமைகளைக் குழப்பியும் தனது இருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது, இந்திய அரசியலமைப்பு எனும் யானையின் உயிரான பார்ப்பனியம். மூல முதற் கடவுள் – கணபதி ஹோமம் – விநாயகர் சதுர்த்தி என இந்த உருவக யானை கடந்து வந்திருக்கும் பரிணாமக் குறியீடுகளைக் கால அளவீடு செய்தால், இதன் உயிர்ப்பு வியப்புக்குரியதல்ல.
யானையை இனம் கண்டறிய இன்னும் தடவிக் கொண்டிருப்பவர்களுக்கு அது ஆன்மிகத்தின் உறைவிடம். யானையில் பவனி வர வரம் பெற்றவர்களுக்கு அது கடவுளின் அவதாரம். யானையை வேடிக்கை மட்டுமே பார்ப்பவர்களுக்கு அவரவர் "தலைவிதி'யை மெச்சிக்கொள்ளும் வரம் அல்லது சாபம். அது யானை அல்ல, நஞ்சு பருகிய சக மனிதரைக் கொல்லத் துணிந்த ஜந்து என கண்டறிந்தவருக்கோ, அது அச்சமூட்டும் எதிரி. அச்சத்தின் விளைவாக எதிர்க்கத் துணியும் யாரொருவரின் உணர்வும் அறிவும், மற்றெவருக்கும் பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம். ஆக, பொது அமைதி அல்லது நன்மை கருதி யானை தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் தேடி அழிக்கும். அது சட்ட உரிமைகளுக்கோ, அறநெறிகளுக்கோ அப்பாற்பட்டது என அனைவரும் ஒப்புக் கொள்வோம்.
சாந்தே ராஜ்மவுலி (எ) பிரசாத் : சூன் 22, 2007 அன்று ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் ரயில் நிலையத்தின் அருகில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1982இல் நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்த இவர் மீது 120 வழக்குகள் ஆந்திரா, ஒரிசா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நிலுவையில் இருந்தன. இம்மாநில அரசுகளால் தேடப்படும் முக்கிய நபராக, குறிப்பாக கடந்த அக்டோபர் 2003 இல் கண்ணிவெடி விபத்தில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்லத் திட்டமிட்டது உள்ளிட்ட, பல்வேறு வழக்குகளில் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இவரை போலி மோதலில் கொன்ற, ஆந்திர காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், இவருடைய மனைவி சுஜாதாவை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தனது உயிருக்குப் பாதுகாப்பு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய சுஜாதாவை பின் தொடரவோ, மிரட்டவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம், ஆந்திர காவல் துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு சூலை 14, 2010 அன்று உத்தரவிட்டது. ("நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', சூலை 15, 2010).
ஆந்திர மாநிலத்தை அடித்தளமாகக் கொண்ட மகளிர் அமைப்பு ஒன்றில் தன்னை இணைத்துக் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் வசித்து வரும் சுஜாதா, மாவோயிஸ்டு இயக்கத்துடன் நேரடியாக எவ்விதத் தொடர்பும் அற்றவர். ஆள் கடத்தல், பாலியல் மற்றும் வரதட்சணைக் கொடுமைகளுக்கு பெண்களைப் பலியிட்டு வரும் சமூக விரோத குண்டர்களுக்கு எதிராக, இவரும் இவர் சார்ந்த மகளிர் அமைப்பும் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஒரு நக்சல்பாரியின் மனைவி என்ற அடையாளத்துடன், ஏதேனுமொரு நாள் இவரும் போலி மோதலில் கொல்லப்படும் வாய்ப்புள்ளது.
சிறிமாஜி பலேகா : 2008 இல் ஒரிசா மாநிலத்தின் ரயாகடா மாவட்டத்தில் பிருபாய் எனும் கிராமத்தில் காவல் துறையுடனான மோதலில் கொல்லப்பட்டதாகப் புனையப்பட்ட இவரது மரணத்தின் மீது விசாரணை நடத்திய ஒரிசா மனித உரிமை ஆணையம், காவல் துறை ஒப்புவித்த ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் நம்பத்தகுந்தவையல்ல என நிராகரித்துள்ளது. இம்மோதலில் ஈடுபட்ட 50 பேர் கொண்ட காவல் துறையினரின் குழுவில் ஒருவருக்குகூட காயம் ஏற்படவில்லை என்பது சந்தேகத்திற்கிடமானது என்று கேள்வியெழுப்பியுள்ள ஆணையம், பலேகாவின் மனைவியான மல்லி என்பவருக்கு மாநில அரசு உடனடியாக 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. இதேபோல் டிசம்பர் 2008இல் கஜபதி மாவட்டத்தில் போலி மோதலில் கொல்லப்பட்ட "ஜுனேல் பதாரைடா' என்பவரின் மரணம் குறித்தும் ஆணையம் தனது விசாரணையை முடித்துள்ளது ("தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', சனவரி 9, 2011).
மே 12, 2010 அன்று ஒரிசா – ஜார்க்கண்ட் எல்லையோர சுந்தர்கார் மாவட்டத்தின் டிகா எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பழங்குடியினர், அருகிலுள்ள ஒரு கிராம சபையின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருக்கும் வழியில் பாதுகாப்புப் படையினரால் வழிமறித்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். விசாரணை என்ற பெயரிலான கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு, மூவர் விடுவிக்கப்பட்டு, 30 வயதேயான மாதியஸ் ஹோரா எனும் இளைஞர் மட்டும் மாநில எல்லை கடந்து ஒரிசாவின் காருவகோச்சா எனும் அடர்ந்த வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால், காவல் துறையுடனான நக்சலைட்டுகளின் மோதலில் மாதியஸ் கொல்லப்பட்டதாக, ரூர்கேலா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் திப்தேஷ் பட்நாயக், உயிருள்ள சாட்சியங்களாக உடன் சென்றவர்கள் இருக்க, உண்மையை குழிதோண்டிப் புதைத்தார். நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டு 72 மணி நேரத்திற்குப் பிறகே, ஹோராவின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரது படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி கிராம மக்கள் மே 29, 2010 அன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்திருந்தனர். ஆனால், காவல் துறையோ சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டுமென 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தி, அம்மக்களின் போராட்டத்தை நசுக்கியது.
சட்டீஸ்கரின் கன்கெர் மாவட்டத்திலுள்ள பச்சாங்கி, அலூர் எனும் இரு கிராம மக்கள் மீது 5.9.2010 ஆசிரியர் தினத்தன்று, எல்லைப் பாதுகாப்புப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அலூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் புன்னிம் என்பவரின் மகள்களான சுனிதா, சரிதா உள்ளிட்ட 17 பேர்களை துர்க்கொண்டல் எனும் இடத்திலுள்ள ராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றனர். கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கதறி அலறுவது மற்றவர்க்கு கேட்கும் வகையில், ஒவ்வொருவர் உடலிலும் மின்சாரம் பாய்ச்சி வதை செய்திருக்கின்றனர். 19 வயதுக்குட்பட்ட ஆறு பெண்கள் உள்ளிட்ட இவர்கள் அனைவரும் "தங்களை மாவோயிஸ்டுகள் எனவும், ராணுவப் படையினருடன் நடந்த சண்டைகளில் முன்னர் பங்கேற்றிருப்பதாகவும்' ஒப்புதல் வாக்குமூலம் தர நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். நான்கு நாட்கள் கடும் சித்தரவதைக்குப் பிறகு, சுனிதா துலவி(19) மட்டும் உடல் நலம் குன்றியதால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மற்றவர்கள் மாவோயிஸ்டுகள் என்ற முத்திரையுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனிதா உள்ளிட்ட 5 கிராம மக்களின் மூலம் கொடுமை வெளி உலகுக்குத் தெரியவந்தது ("தி இந்து' 11, 13.9.2010).
மாதவ் சிங் தாகுர் : டிசம்பர் 28, 2010 அன்று ஒரிசா – சட்டீஸ்கர் எல்லையோர பார்கர் மாவட்டத்தின் போரசம்பர் வனப்பகுதியில் தனது நண்பரான ரமேஷ் சாகுவுடன் பிணமாகக் கண்டறியப்பட்டார். மாதவ், தனது கிராமமான தெம்ரியை உள்ளடக்கிய பகுதியின் பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தார். அவர் பிணமாகக் கண்டறியப்பட்ட டிசம்பர் 28 அன்று, மாவட்ட தலைநகரத்தில் நடைபெறவிருந்த அவரது கட்சியின் பேரணி ஒன்றுக்கான இறுதிக்கட்ட வேலைகளில், கொல்லப்படும் முதல் நாள் இரவு வரை அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பார்கர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், சட்டீஸ்கரிலிருந்து ஊடுருவிய இரண்டு நக்சலைட்டுகள் மாநில எல்லையில் "நக்சல் ஒழிப்பு சிறப்பு அதிரடிப் படை'யினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பத்திரிகைகளிடம் தெரிவித்தார். தெம்ரி கிராம மக்களõல் அடையாளம் காட்டப்பட்ட பிறகு, காவல் துறையின் வேடம் கலைந்தது. 2003 இல் ஒரிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரில் ஏறத்தாழ 3000 பேர் பங்கேற்ற எதிர்ப்புப் பேரணி ஒன்றின் பிரதிநிதித்துவக் குழுவில் ஒருவராக மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்தபோது, மாதவ் சிங் பழங்குடி மக்களின் அடையாளமான வில் – அம்பு ஒன்றையும் அவருக்குப் பரிசளித்திருக்கிறார் ("தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', சனவரி 9, 2010).
ஒரு பிரபலமான கட்சி ஊழியராக, பொது மக்களால் நன்கு அறியப்பட்டவராக இருந்த ஒருவரையே அடையாளம் தெரியாத நபர் என, காவல் துறை சுட்டுக் கொல்கிறது எனில், ஏனைய பழங்குடி மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பலாங்கிர் மாவட்டத்தின் காந்தமார்தன் மலைப் பகுதியில் பாக்சைட் சுரங்கங்கள் அமைக்க Continental Resources Ltd என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாதென, 15 ஆண்டுகளாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் "காந்தமார்தன் பாதுகாப்பு இயக்க'த்தின் முக்கியப் பொறுப்பாளராகவும் மாதவ் இருந்து வந்துள்ளார். டிசம்பர் 27, அன்று மாலை 3 மணி முதல் 7 மணிவரை போரசம்பர் வனப்பகுதியில் நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக காவல் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டது. ஆனால், இச்சம்பவம் குறித்து விசாரித்த உண்மை அறியும் குழு, துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான சுவடே அவ்வனப் பகுதியில் காணப்படவில்லை என்று அறிக்கை தந்துள்ளது.
“காந்தமார்தன் பாதுகாப்பு இயக்கத்தை முடக்கவும், அதில் தீவிரமாகப் பணியாற்றுவோரை மிரட்டவும்தான் மாதவ் சிங்கின் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது'' என சுரேஷ் பூஜாரி என்ற பா.ஜ.க. தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். "ஒரிசா மனித உரிமை ஆணையம்' மாதவ் படுகொலை மீதான விசாரணயை தானே முன்வந்து தொடங்கியுள்ளது. மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்திருக்கும் மாநிலங்களில் – பகுதிகளில் கொல்லப்படுபவர் மாவோயிஸ்டு ஆதரவாளராக இருக்க வேண்டுமென்பது அவசியமல்ல. கனிம வளங்களையும், வன – மலை வாழ்வாதாரங்களை, வன வாழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பவராக, பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்ப்பாளராக மட்டுமே இருந்தால் போதுமானது.
நன்றி : ஆசிரியர் இளம்பரிதி, தலித் முரசு இதழ் மற்றும் கீற்று இணையதளம்
0 comments:
Post a Comment