Wednesday, July 20, 2011

பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம் -XI

முங்நெர்... மகாராட்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் சட்டீஸ்கரின் எல்லையோர வனப்பகுதி கிராமம். மடியாகோண்டு பழங்குடி மக்கள் அதிகம் வாழும் இப்பகுதி, மழை வளமின்றி வேளாண்மை நசிந்த பகுதி. கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதியில் மூங்கில் மரங்களை வெட்டி வரும் வனத் துறை, இப்பழங்குடி மக்களுக்குத் தரும் கூலியோ நாளொன்றுக்கு ஒரு ரூபாய்தான். தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் ஒப்பந்ததாரர்களோ, நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் கூலியை இம்மக்களுக்குத் தருவதில்லை. ஏப்ரல் 6, 2009 அன்று, இக்கிராமத்தின் அருகில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நாள் முழுவதும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், மூன்று காவல் துறையினர் கொல்லப்பட்டதிலிருந்து, இக்கிராமம் மிகுந்த நெருக்கடிக்குள்ளானது. அன்றிலிருந்து தொடர் தாக்குதலுக்கும் தேடுதல் வேட்டைக்கும் இக்கிராமம் இலக்காகிப் போனது. இக்கிராமம் மட்டுமல்ல, பிப்ரவரி 1, 2009 அன்று, ஒரு துணை ஆய்வாளர் உட்பட 15 காவல் துறையினரும், மர்கேகான் என்னுமிடத்தில் மே 17, 2009 அன்று 16 காவல் துறையினரும், லஹேரி காவல் நிலையம் அருகில் அக்டோபர் 8, 2009 அன்று 18 காவல் துறையினரும் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட பிறகு, கட்சிரோலி மாவட்டம் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த இன்னொரு தளப்பகுதியாக மாறியிருக்கிறது.

முன்னாசிங் தாகுர்... 1988 சூலை 8 அன்று, மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் உயிர் நீத்த லால்பாபு சிங் என்னும் காவலரின் இளைய சகோதரர். காவல் துறைப் பணியில் சேர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக நக்சல் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றி வருபவர். கட்சிரோலி மாவட்டத்தில் 2009 இல் காவல் துறையினருக்கு நேர்ந்த கடும் இழப்புகளுக்குப் பின், காவல் படைப் பிரிவின் கமாண்டராகப் பணியாற்றி வரும் இவர், பணிமாற்றம் செய்யப்பட்டு, நாக்பூரில் இருக்கிறார். மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் பலமுறை காயமடைந்துள்ள தாகுர், “எனது குழந்தைகள் வளர்ந்து விட்டனர். நானும் காயமடைந்து மிகவும் களைப்படைந்து விட்டேன். என்னுடன் பணியாற்றிய பலர் கொல்லப்பட்டும் விட்டனர். இந்நிலையில் என் குடும்பத்தினரை எண்ணும்போது, நான் இனியும் ஆபத்தில் இறங்க விரும்பவில்லை'' என அச்சம் தெரிவிக்கிறார் ("தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', அக்டோபர் 3, 2010). ஆனால், இவரது அச்சம் மனமாற்றத்தை உள்ளடக்கியதல்ல என்பதை கீழ்வரும் பகுதி நமக்கு உணர்த்தும்.

கட்சிரோலி மாவட்டத்தில் இவர் பணியிலிருக்கும்போது, பவெர்வால் எனும் கிராமத்தில் மார்ச் 4, 2009 அன்று காவல் துறை தேடுதல் வேட்டை நடத்தியது. இரவு முழுவதும் அக்கிராமத்திலேயே தங்கியிருந்த காவல் துறையினர், மறுநாள் காலை ஆறு பேரைக் கைது செய்து அழைத்து வந்து, சந்திரபூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையிலடைத்தனர். அவர்களில் 13 வயதேயான சிறுமியும் ஒருவர். இவர் மீது 307 (கொலை முயற்சி), இ.பி.கோ. பிரிவுகள் 143, 147, 148, 149 மற்றும் பிரிவு 3, 25 ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு புனையப்பட்டது.

(சட்டீஸ்கரில் மத்திய ரிசர்வ் படையினர் இப்பழங்குடிப் பெண்களின் வீட்டை எரித்து, பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி, மூன்று பழங்குடி ஆண்களையும் கொன்றுள்ளனர். தி இந்து - 23.3.2011)

இந்திய மக்கள் வழக்குரைஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இச்சிறைச்சாலை கைதி ஒருவரின் தகவலின் பேரில், இச்சிறுமியின் பிறந்த நாள் (மார்ச் 20, 1996) ஆவணத்தின் மூலம் சிறார் நீதிமன்றத்தில் இச்சிறுமிக்கு பிணை பெற்றனர். இதைவிடக் கொடுமை என்னவெனில், காவல் துறையினர் அக்கிராமத்தில் தங்கியிருந்த அன்று இரவு, அச்சிறுமியை வன்புணர்ச்சி செய்திருப்பதுதான். "பெண்களின் மீதான வன்முறைக்கு எதிரான குழு' ஒன்று தீவிர விசாரணை நடத்தி, இக்குற்றச் செயலில் தொடர்புடைய காவலர்கள் மீது வழக்குத் தொடுத்தது.

சீருடை மிருகங்களின் வன்முறை வெறிக்கு, அச்சிறுமி மயங்கி விழ, தண்ணீர் தெளித்து எழுப்பியிருக்கின்றனர். அச்சிறுமியின் நிர்வாண உடல் மீது ஒரு மிருகம் சிறுநீர் கழித்து வஞ்சம் தீர்த்திருக்கிறது. தன்னை பலாத்காரம் செய்த முதல் நபரை அச்சிறுமி அடையாளம் காட்டினாள். அவன் வேறு யாருமல்ல. நக்சலைட்டுகளை ஒழிப்பதே தன் லட்சியம் என, தேடுதல் வேட்டையில் எப்போதும் முனைப்புக் காட்டிய முன்னாசிங் தாகுர்தான். 2006 இல் தாகுர் தலைமையிலான இது போன்றதொரு தேடுதல் வேட்டையில் தனது சிறுவயது மகனைப் பறி கொடுத்திருக்கும், பவெர்வால் கிராமத்தைச் சேர்ந்த மாணிக் ஜங்கி – "முன்னாசிங் தாகுரை தூக்கிலிட வேண்டும்' என கோபம் கொப்பளிக்கக் கூறுகிறார் ("தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', அக்டோபர் 3, 2010). ஆனால், அந்த காவல் துறை மிருகத்திற்குக் கிடைத்த உடனடி தண்டனையோ பணி இடமாற்ற உத்தரவு மட்டுமே!

அரசின் கொலைக் கரங்களில் சிக்கி, பாதிப்புக்குள்ளாகும் எண்ணற்ற பழங்குடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கிராமம் முங்நெர் எனில், அதிகார வர்க்கத்தின் எண்ணற்ற கொலைக் கரங்களில் ஒன்றாக, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடும் கரம்தான் முன்னாசிங் தாகுர். தனது குடும்பம் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை குறித்து கவலை தெரிவிக்கும் இவனுக்கு, அறியாமையும் வறுமையும் கொத்தித் தின்ன, இருள் வாழ்க்கையில் உழன்ற அச்சிறுமியின் உயிர்வதையை உணர்த்துவது யார்? "நக்சலைட்டுகள் வெறிச் செயல்', "மாவோயிஸ்டுகள் அட்டூழியம்' என அதிகார வர்க்கத்தின் கொலைக் கரங்களை முறித்துப் போட, அவ்வப்போது ஆயுத நடவடிக்கைகளில் இறங்கும் மாவோயிஸ்டுகளைப் பற்றி செய்திகள் வெளியிடும் ஊடகங்களுக்கு, பழங்குடி மக்களின் நியாயங்களை உணர்த்துவது யார்?

பருவமெய்தாத ஒரு சிறுமியின் பாலுறுப்பின் மீது சிறுநீர் கழிக்கும் ஒரு மிருகம்தான், இந்நாட்டின் பாதுகாப்புப் படைப் பிரிவின் மாவீரன் எனில், அந்த படைப் பிரிவின் இருப்பை நியாயப்படுத்த முனைவீர்களா? 13 வயது சிறுமி யின் மீது பாலியல் வன்கொடுமையும், இந்தியக் குற்றவியல் பிரிவின் நம்பத்தகாத வழக்குகளும் சுமத்தப்படுöமனில், இச்சிறுமிக்காகவும் இவரை யொத்தவர்களுக்காகவும் ஆயுதம் ஏந்தியிருக்கும் மாவோயிஸ்டுகளைக் குற்றம் சாட்ட இங்கு எவருக்கும் யோக்கியதை இல்லை.

தண்டேவாடா பகுதியின் உண்மை நிலையறிந்து அறிக்கை தர வேண்டுமென உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவில் ஒருவரான ஹர்ஷ் மந்தர், "தி இந்து' (மே 8, 2011) நாளிதழில், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர், “நான் இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்த நாளானது, தற்செயலாக கடந்த ஆண்டு 76 துணை ராணுவப் படையினர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு நாளாகவும் இருந்தது. அந்நிகழ்வு, அக்கிராமத்திற்குச் சற்று அருகில் தான் நடந்தது. அக்கிராமத்தில் மாவோயிஸ்டுகள் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பி இருந்தனர். ராணுவத்துடனான சண்டையின்போது கொல்லப்பட்ட 8 மாவோயிஸ்டுகளின் பெயர்கள் அந்த நினைவுத் தூணில் இந்தியில் பொறிக்கப்பட்டிருந்தன.

“மக்கள் விடுதலை கெரில்லாப் படை' இக்கிராம மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாக என்னுடன் வந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நான் உலங்கு வானூர்தியில் வந்த போதே, பல வீடுகளின் கூரைகள் எரிந்த நிலையிலும், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டும் இருப்பதைப் பார்த்தேன். பாதுகாப்புப் படையினரின் துணை யோடு, சல்வா ஜுடுமின் ஆயுதம் தரித்த குடிமைப் படையினர் தங்களைத் தாக்கியதாக அக்கிராமத்தினர் என்னிடம் தெரிவித்தனர். அம்மக்கள் கருத்தியல் ரீதியாகவோ, அச்சம் மற்றும் ஆதரவற்ற நிலையிலோ மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனாலேயே கிராமத்தின் பலர் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என்ற கருத்தின் அடிப்படையில், தீவிரவாத எதிர்ப்பு மற்றும் மாநில ஆயுதச் சட்டங்களின் கீழ் கடுமையாக ஒடுக்கப்பட்டு, நீண்ட நாட்களாக சிறையில் வாடுகின்றனர். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மற்றும் மனித உரிமைகளின் பின்புலத்திலும் பினாயக் சென் போன்றவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு, இம்மக்களை விடுவிப்பதில் கிடைப்பதில்லை.

“பாதுகாப்புப் படையினர் இக்கிராமங்களில் முகாமிடும்போது, இம்மக்களை தங்களுக்காக சமைக்கவும் பறிமாறவும் மிரட்டி வேலை வாங்கிக் கொள்கின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிராகச் சண்டையிடும் சல்வா ஜுடும் போன்ற குடிமைப் படையினர், இக்கிராம மக்களை அச்சமூட்டி வைக்கும் எண்ணத்தில் அடிக்கடி இவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் செல்கின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள ஓர் ஆண் சல்வாஜுடுமில் இருந்தால், அதே குடும்பத்தைச் சேர்ந்த அவரது சகோதரி மாவோயிஸ்டு படையில் இருப்பதை யும் கேள்வியுற்றேன். ஆனால், இந்த இரு தரப்பினரின் வன்முறைக்கும் அவர்களின் வயதான பெற்றோர் இலக்காக நேர்கின்றனர். சல்வாஜுடும் போன்ற வன்முறைக் குழுக்களுக்கு மாநில பா.ஜ.க. அரசு ஆதரவு அளித்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசும் முரண்நகையாக அதே ஆதரவைத் தெரிவித்து வருகிறது. இக்குழுக்களுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டும் வருகின்றன.

“மாநில அரசின் அனைத்து மட்ட நிர்வாக எந்திரமும் இப்பகுதியில் இயங்குவது நிறுத்தப்பட்டு, இம்மக்களின் வாழ்நிலை மென்மேலும் சீர்குலைந்துள்ளது. பொது விநியோகத் திட்டம் உட்பட அனைத்து பொதுச் சேவைகளும் இக்கிராமங்களுக்கு கிடைப்பதில்லை. 2007இல் இக்கிராமத்தின் பள்ளிக்கூடம் மாவோயிஸ்டுகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்ட பிறகு, இக்கிராமங்களின் குழந்தைகளுக்கு கல்வி இல்லாமல் போனது. ஆரம்ப சுகாதார மய்யம் இயங்கவில்லை. ஊட்டச்சத்து குறைபாட்டுடன் என்னைச் சூழ்ந்து நின்றிருந்த குழந்தைகள் இருப்பதை நான் கண்ணுற்றேன். "மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்' பற்றி இக்கிராம மக்கள் அறிந்திருக்கவில்லை. கிராமப் பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் இக்கிராமத்திற்கு வந்து நான்கு ஆண்டுகளாவதாக அறிந்தேன். பள்ளிக்கூட ஆசிரியர், ஆரம்ப சுகாதார மய்யப் பணியாளர் ஆகியோர் இக்கிராமங்களில் பணி புரியாமலேயே தங்கள் ஊதியத்தை மட்டும் பெற்று வருகின்றனர். எனது ஆய்வுக்கு உட்பட்ட தெற்கு பஸ்தார் மாவட்டங்கள், பொருளாதார மற்றும் சமூக அளவீடுகளில் கடைநிலையில் இருப்பதையும், இந்நாட்டின் மிகவும் ஏழ்மையான பகுதி என்பதையும் நான் கண்டுகொண்டேன்.

“மேலும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரப்படி, தேசிய மற்றும் மாநில மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், இம்மாவட்டங்கள் மிகவும் கீழ்நிலையில் இருக்கின்றன. 22.6 சதவிகிதம் என்ற மாநில சராசரியோடு கணக்கிட்டால், தண்டேவாடாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதம் மட்டுமே. பிஜப்பூரில் இது 8 சதவிகிதமே. சண்டைகளில் கொல்லப்பட்டும் வறுமை மற்றும் நோய்களில் இறந்தும் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே இந்த விகிதாச்சார வேறுபாடு. மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள், இவர்களின் எண்ணிக்கையைக் கண்டு கொள்ளவும் இல்லை. சீருடை அணிந்த நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையின் வீரர்களிடமும் நான் உரையாடினேன். அவர்கள் தேவையான வசதிளின்றியும், பாதுகாப்பற்ற மன நிலையுடனும் உள்ளூர் மக்களுடன் உரையாடுவதில் மொழிச் சிக்கலுடனும் இருப்பதாகக் கூறினர்.

“உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதேயன்றி, அவர்களுடன் சண்டையிடுவதல்ல என்றும் வறுமையின் குருதி தோய்ந்த சூழலில் உழலும் அவர்களை மனிதாபிமானத்துடன் அணுகுவதன்றி, அவர்கள் மீது ஒடுக்குமுறையும் வன்முறையும் பயன்படுத்தக் கூடாதெனவும் அப்படை வீரர்களுக்கு உணர்த்த முயன்றேன். ஆயுதம் தாங்கிய கமாண்டோக்களின் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரின் வெற்றி என்பது, குருதி தோய்ந்ததாக இல்லாமல் பள்ளிக்கூடங்கள், உடல் நல மய்யங்கள், பொது விநியோகத் திட்டங்கள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கித் தருவதில் தான் இருக்க முடியும்'' என அப்பகுதி மக்களின் நிலைமையை எடுத்தியம்புகிறார்.

ஹர்ஷ் மந்தர் சுட்டிக்காட்டும் பழங்குடி மக்களின் நிலைமை, அவர் ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்துப் பழங்குடிப் பகுதிகளின் நிலையும் அதுவே. சட்டீஸ்கரின் பிஜப்பூர் – தண்டேவாடா மாவட்டங்களிலிருந்து உள்நாட்டிற்குள் இடம் பெயர்ந்திருக்கும் அகதிகளாக, ஆந்திராவின் கம்மம் மாவட்ட வனப் பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கும் பழங்குடிகள் பற்றி முன்னரே குறிப்பிட்டிருக்கிறோம். அக்டோபர் 25, 2010 அன்று இம்மாவட்டத்திலுள்ள பத்ராசலம் ஊட்டச்சத்து மற்றும் மறுவாழ்வு மய்யத்திற்கு சிகிச்சைக்காக வந்த 8 குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது ("தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', நவம்பர் 14, 2010). காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பட்டியல் பழங்குடியினருக்கான குழு, "பழங்குடியல்லாத மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வராத குடும்பங்களுக்கு மருத்துவ சேவை அளிக்கக் கூடாது' என அறிவுறுத்தியிருப்பதன் பேரில், "ஒருங்கிணைந்த பழங்குடிகள் வளர்ச்சி ஆணைய'த்தின் திட்ட அதிகாரி இம்மறுப்பைச் செய்திருக்கிறார்.

கோட்டிகோயா மற்றும் முறியா பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இக்குழந்தைகள், பழங்குடியினர்தாம் என்பதற்கான ஆவணங்களைக் காட்டவில்லை என இக்கொடுமை நிகழ்ந்துள்ளது. சல்வாஜுடும் மற்றும் காவல் துறையின் வன்முறைக்கு இலக்காகி உயிர் தப்பிப் பிழைக்க ஓடி வந்திருக்கும் இம்மக்கள் உரிய ஆவணங்களை எங்கிருந்து கொண்டு வர முடியும்? பழங்குடியினருக்கான சட்டமன்றக் குழுவும், பழங்குடியினர் வளர்ச்சி ஆணையமும் – பழங்குடி மக்களுக்கு எதிராகவே செயல்பட முடியுமெனில், இந்த அரசாங்கங்கள், கட்சிகள் இம்மக்களுக்கானதா? அது மட்டுமல்லாமல், ஆந்திர மாநில வனத் துறையினரோ, 203 தற்காலிகக் குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு அகதிகளான இம்மக்களை, சட்டீஸ்கரின் சல்வாஜுடும் முகாம்களுக்கே திருப்பி அனுப்பவும் முயல்கின்றனர். 2007இல் மனித உரிமைப் போராளியான பாலகோபால், கோட்டிகோயா பழங்குடிகளின் குடிசைகளை ஆந்திர வனத்துறை அப்புறப்படுத்துவதைத் தடுக்கும் முகமாக, நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார். இதனை எதிர்த்து உயர் நீதி மன்றத்திற்குச் சென்ற வனத்துறையினர், கோட்டிகோயா அகதிகள் உள்ளூர் மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும், வனங்களை சேதப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர் என வாதாடினர். ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி. ராமுலு, வனத்துறையினரின் தடையாணையை நீக்கும் பிரேரணையைத் தள்ளுபடி செய்ததோடு, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இப்பழங்குடி மக்கள் வாழ உரிமையுண்டு எனத் தீர்ப்பு வழங்கினார்.

மேலும், கோட்டிகோயா பழங்குடியினர் வன நிலங்களை ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டி, அவற்றை "வனப் பாதுகாப்பு' என்ற பெயரில் அழிக்கவும் வனத் துறையினர் முற்பட்டனர். கம்மம் மாவட்டத்தின் இவ்வனப் பகுதியில் தங்கள் உணவுத் தேவைக்காக மட்டுமே, சிறு நிலப்பகுதியில் இம்மக்கள் பயிரிட்டு வந்தனர். இந்நிலப்பகுதிக்கு நீர்ப்பாசன வசதிகூட கிடையாது. வளமான, நீர்ப்பாசன வசதியுள்ள, பெரிய நிலங்களில் வேளாண்மை செய்து வருபவர்கள் உள்ளூர் ரெட்டி சாதியினரே. இவர்கள் இந்நிலங்களுக்கு பட்டா வைத்துள்ளனர். ஆனால், பாரம்பரியமாக இப்பகுதியில் வாழ்ந்து வரும் கோயா மற்றும் மூத்த முறியா பழங்குடி மக்களோ, நீண்ட காலமாகத் தாங்கள் அனுபவிக்கும் நிலங்களுக்குப் பட்டா பெற போராடி வருகின்றனர். சாதி இந்துக்களை நிலவுடைமையாளர்களாக வைத்திருக்கும் ஆளும் வர்க்கம், தலித் மற்றும் பழங்குடியின மக்களை எக்காலத்திலும் நிலமற்றவர்களாகவே வைத்திருந்து, உழைப்பைச் சுரண்டவே விரும்பும். இடம் பெயரும் மக்களையோ, உதிரிக் கூலிகளாக ஒடுக்கிச் சுரண்டும். அரை நிலப்பிரபுத்துவ – அரை முதலாளித்துவ – சாதி மேலாதிக்க ஆளும் வர்க்கத்தின் அரசமைப்பு இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலேய காலனியாதிக்க வனத்துறைச் சட்டம் சந்தால்கள், கோண்டுகள், முறியாக்கள், கோயாக்கள் மற்றும் பைகாக்கள் என்ற பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை, அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விலக்கி வைக்க வழிவகை செய்கிறது. ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தைக் கைமாற்றியிருக்கும் இந்திய ஆளும் வர்க்கமோ, இந்த வன வளங்களை சுரங்க நிறுவனங்களுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்த்து விட்டு, பழங்குடி மக்களை நிரந்தரமாக, அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்து வருகிறது. 1980 முதல் 1977 வரை சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், 34,527 ஹெக்டேர் வன நிலங்களை 317 சுரங்கங்களுக்கான குத்தகை உரிமையாகத் தாரை வார்த்தது. 1997 – 2005இல், இந்த எண்ணிக்கை 60,476 ஹெக்டேராகவும், 881 சுரங்கக் குத்தகை உரிமைகளாகவும் வளர்ந்திருக்கிறது.

கம்மம் மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர், “பழங்குடி மக்களையோ, வன வளங்களையோ இரண்டில் ஒன்றைத் தான் நீங்கள் பாதுகாக்க முடியும்'' என பத்திரிகையாளர் ஒருவரிடம் ஆணவமாகச் சொல்கிறார். வன வளங்களைப் பன்னெடுங்காலமாகப் பாதுகாத்தும், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியோடு பின்னிப் பிணைந்தும் இருப்பவர்கள் பழங்குடி மக்களே. வன வளங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கமோ, அவர்களின் எடுபிடி அதிகாரிகளோ அல்லர். பழங்குடி மக்களை வேட்டையாடி அழித்துவிட்டு, வன வளங்களைக் கொள்ளையடித்து, நவநாகரிக உலகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதாகப் பித்தலாட்டம் செய்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கப் போகிறீர்களா? அல்லது வனங்களின் பாரம்பரிய வனப்பைப் பாதுகாக்க, பழங்குடி மக்களின் போராட்டங்களுக்குத் துணை நிற்கப் போகிறீர்களா?

"நக்சலைட்டுகளின் பிரச்சனைகளை துப்பாக்கிக் குண்டுகளால் மட்டுமே தீர்த்துவிட இயலாது' என உணர்ந்திருக்கும் துணை ராணுவப் படை அதிகார வர்க்கம், மக்கள் குறைதீர் பணிகளிலும் ஆர்வம் செலுத்தி வருவதாகக் காட்டிக் கொள்கிறது. மேற்கு பஸ்தார் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அய்ந்து பட்டாலியன்கள் உள்ளூர் நிர்வாகத்தினருடன் இணைந்து இலவச கணினிப் பயிற்சி, மருத்துவ முகாம்கள், வேளாண் இடு பொருட்கள் மற்றும் உரங்கள் விநியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடும் எல்லைப் பாதுகாப்புப் படையின் டி.அய்.ஜி.யான ராம் அவ்தார், “நாங்கள் இங்கு வந்தபோது, அரசின் நிர்வாக எந்திரம் முற்றாக முடங்கிப் போயிருந்தது. கடும் வறுமை, எழுத்தறிவின்மை மட்டுமல்ல உடல்நலம், சாலை வசதி மற்றும் மின்சாரம் என அனைத்து அடிப்படைத் தேவைகளும் இன்றி, இப்பழங்குடி மக்களின் நிலை மிக மோசமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம்'' என தனது பட்டாலியன் முகாம் ஒன்றைப் பார்வையிட வந்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார் ("தி இந்து', ஏப்ரல் 28, 2011).

ஒருபுறம் மக்களைக் கரிசனத்துடன் அணுகுவதாகக் காட்டிக் கொள்ளும் பாதுகாப்புப் படையினர் அல்லது ராணுவத் துருப்புகள் அல்லது அரசின் கொடும் கரங்கள், உண்மையில் தங்களைக் கூர் தீட்டி வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராய்ப்பூரிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள கன்கெரில் அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசின் "தீவிரவாத எதிர்ப்பு மற்றும் வன போர்ப் பயிற்சி கல்லூரி'யில், சட்டீஸ்கர் மற்றும் பிற மாநிலங்களின் காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளை எதிர்கொள்வதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. "கெரில்லாக்களை எதிர் கொள்ள ஒரு கெரில்லாவாக இரு' என்பதுதான் இக்கல்லூரியின் குறிக்கோளாக முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு காவலருக்கும் ஒரு கமாண்டோவுக்கு நிகரான பயிற்சி அளிப்பதே தங்கள் திட்டமென தெரிவிக்கிறார், ஏப்ரல் 2005 இல் இக்கல்லூரியை நிறுவிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.கே. பொன்வார். ஒவ்வொரு 45 நாட்களிலும் ஏறத்தாழ 600 காவலர்களுக்குப் பயிற்சி அளித்து வருவதாக, அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். காடுகள், பாறைகள் மற்றும் கடினமான நிலப் பகுதியை உள்ளடக்கி சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் இப்பயிற்சிக் கல்லூரி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

"பசுமை வேட்டை' மாவோயிஸ்டுகளை நேரடியாக அழித்து ஒழிக்கும் ஒரு ராணுவ செயல்திட்டம் மட்டுமே என, நாம் நம்ப வைக்கப் பட்டிருக்கிறோம். "பார்ப்பன – இந்துத்துவ அதிகார வர்க்கத்தின் பசுமை வேட்டை எனும் இந்த ராமலீலாவின் கொடுங்காதையில், மாவோயிஸ்டுகளும் பழங்குடி மக்களும் ராவணன்களாக காட்சிப்படுத்தப்படுகின்றனர். ஆனால், பசுமை வேட்டைக்கும் நமக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என வேடிக்கை பார்க்கும் ஒருவர், துரோகத்தனமாக வாலியைப் போல வதம் செய்யப்படலாம் அல்லது பிறந்த மண்ணுக்குத் துரோகம் இழைக்கும் சுக்ரீவனாக இருக்க நேரலாம். நீங்கள் நினைப்பது போல ராமராஜ்ஜியம் என்பது, சுதேசி அரசமைப்பு அல்ல. பன்னாட்டு மூலதனங்களின் கொலைக்களத்தில், ராமன்கள் ஏந்தி நிற்பது கனரக ஆயுதங்களையே. பாரம்பரிய வில்லும் அம்பும் தாங்கி மண்காப்புப் போரில் நிற்பவர்கள் நம் பழங்குடி மக்களே !


நன்றி : ஆசிரியர் இளம்பரிதி, தலித் முரசு இதழ் மற்றும் கீற்று இணையதளம்

0 comments:

Post a Comment