வனமும் வளம் சார்ந்த வாழ்வுமே இயற்கையிலாளருமான முகமது அலியின் அடையாளம். 'காட்டுயிர்' என்ற மாத இதழையும், 'அழியும் பேருயிர்: யானைகள்' என்ற புத்தகம் மூலமும் சூழலியல் பிரச்சனைகளை உணரவைத்தவர். 'இயற்கை வரலாறு' அறக்கட்டளை' யின் நிறுவனர்களில் ஒருவர். இங்கே தனது ஊரான மேட்டுப்பாளையம் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.
(கண்கண்ணாடியும், பைனாகுலருமாக முகமது அலி)
"தெற்கு நீலகிரியின் அடிவாரத்தில் முல்லைக் காடுகள் சூழ்ந்த மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றங்கரையோர வலையர் தெருவில் ஒரு கூரை வீட்டில் பிறந்தேன். பிறப்பில் இருந்து இறப்பு வரை கூடவே வருவதால், மேட்டுப்பாளையத்து மனிதர்களுக்கு காடுகள் மீது எப்போதும் அச்சம் இருந்தது இல்லை.
மேட்டுப்பாளையத்தின் இயற்பெயர் 'சிக்கதாசம்பாளையம்'. உதகை இருப்பு பாதை இந்தக் குக்கிராமம் வழியாக போடப்பட்ட பின்புதான் மேட்டுப் பாளையமாக மாறியது. 1895-ல் இங்கு தொடங்கப்பட்ட லண்டன் சி.எஸ்.ஐ. மிஷன் ஸ்கூல், சுதந்திரத்திற்க்கு பிறகு, சி.எஸ்.ஐ. பள்ளி என்று பெயர் மாற்றம் பெற்றது. உதகை முதன்மை சாலையில் இருக்கும் அந்தப் பள்ளிக்கு நான் சிறுவனாக இருந்த போது, பிரதமர் நேருவின் ஊட்டி வருகையை ஒட்டி நீண்ட காலத்துக்கு பிறகு வர்ணம் அடிக்கப்பட்டது. நேருவின் வருகைகாக, மாணவர்களாகிய நாங்கள் சாலையின் இருபுறமும் அமரவைக்கப்பட்டது மனக்கண்ணில் இப்போதும் மின்னி மறையும் காட்சி !
மேட்டுப்பாளையத்தின் மேற்கு பகுதியில், தாழ்வான கண்டியூர் மலைத்தொடர்களும், வடக்கு பகுதியில் நீலகிரித் தொடரும் அமைந்திருக்க... இவற்றின் இடையேதான் வானியாறு எனப்படும் பவானி ஆறு, ஜீவ நதியாக வளைந்தோடியது. முல்லை காடுகள் முடியும் இடத்தில் இருந்து, தெற்கே அன்னூர், அவிநாசி, திருப்பூர், தாராபுரம் நோக்கி புல்வெளிக் காடுகள் விரிந்துகிடந்தன. அதில்தான் வரகுக் கோழிகளும், கான மயில்களும், வெளி மான்களும் வாழ்ந்தன. வன விலங்குகளின் வசந்த பூமியாக ஒரு காலத்தில் திகழ்ந்தது மேட்டுப்பாளையம். ஆனால், என்று மனிதன் வனத்தை அழித்துத் தின்ன ஆரம்பித்தானோ, அன்றே தன்னையே உருக்கிக்கொள்ள ஆரம்பித்தது மேட்டுப்பாளையம்.
கடந்த 19350-களில் காட்டு யானை ஒன்று சுட்டு கொல்லப்பட்ட இடம்தான் இன்று நெருக்கடி மிகுந்த வேளாங்கண்ணி நகர். காட்டு யானை பிடிப்பவர்கள் சங்கமித்த வனப்பகுதிதான் இன்று ஆனைக்காரத் தெரு. இந்திய அளவில் முதல் முறையாக மேட்டுப்பாளையத்தில்தான் நானும் நண்பர் யோகானந்தும் ' பிளாக் பக்' எனப்படும் வெளிமான்களைக் கண்டுபிடித்தோம். ஐரோப்பாவில் இருந்து வலசை வரும் European Bee eater என்ற பறவை மேட்டுபாளையத்துக்கு வந்ததையும், பிறகு பவானிசாகர் செல்வதையும் கண்டு பதிவு செய்தோம். அன்று எங்கள் ஊரைச் சுற்றி எங்கு பார்த்தாலும் மான்கள், காட்டு எருதுகள், யானைகள் கண்ணில் படும். அவற்றின் வலசைப் பாதைகள் நாற்புறமும் அமைந்து இருந்தன.
ஆனால், இன்றோ அவற்றின் பாதைகள் ஆக்கிரமிப்பில் அழிந்து போய்விட்டன. கல்லார் பழப் பண்ணை ஒரு காலத்தில் ராஜ நாகங்கள் கொத்துக் கொத்தாக வாழ்ந்த பகுதி. இரண்டாம் உலக போரின் போது இங்கு வந்த ராணுவ தளபதி ஆடம்ஸ், அந்தப் பாம்புகளைக் கண்டு வியந்து, 'பம்பாய் இயற்கை வ்ரலாற்றுச் சங்கத்தின் சஞ்சிகை'யில் பதிவு செய்துள்ளார்.
இப்படி இருந்த மேட்டுப்பாளையம், இன்று ரியல் எஸ்டேட் புள்ளிகளின் காலடியில். மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் இன்று தமிழகத்தின் புகழ்மிக்க கோயிகளில் ஒன்று. இந்தக் கோயிலுக்கு அருகே உள்ள நெல்லி மலைக் குன்றுகளில் ஒன்று தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு யானை படுத்து இருப்பது போலக் காட்சி அளிக்கும்.
ஒரு காலத்தில் நீலகிரியில் விளைந்த ஆரஞ்சு, மங்குஸ்தான், சூரி, நாவல் போன்ற பழங்கள், மாட்டு வண்டிகளில் வந்து இறங்கின. ஆனால் இன்று தேயிலை, முட்டைகோஸ், உருளைக் கிழங்கைத் தவிர, வேறு எதுவும் பெரிதாகக் கண்ணில்படுவது இல்லை. இந்த ஊரின் பாரம்பரியம், தொன்மை, பூர்வக்குடித்தன்மை ஆகியவற்றைச் சிதைந்தவிடாமல் பாதுகாக்கவும், இலக்கியம் மற்றும் சமூக நற்பணி விசயங்களை உரம் ஊட்டி வளர்க்கவும் அமைப்புகள் எதுவும் இல்லை. அதுவே என் பெரும் மனக் குறை !
மேட்டுப்பாளையம் இப்போது அடியோடு மாறிவிட்டது. எங்கள் கணக்கெடுப்பின்படி ஆற்றின் இருகரைகளிலும் இரண்டு கி.மீ. நீளத்துக்கு சுமார் 2,500 பேர் மலம் கழிக்கின்றனர். 4,000 பேர் குளிக்கின்றனர். இதை எல்லாம் தாண்டி, சமீபத்தில் வட இந்திய அநாகரிகப் பழக்கம் ஒன்று இங்கே இறக்குமதி ஆகி உள்ளது. ஆம், காசியைப்போல் பிணங்களின் சாம்பல் ஆற்றில் கரைக்கப்படுகிறது. வனங்களையும், விளைநிலங்களையும் வளர்க்க பிறப்பு எடுத்த என் பவானி, இப்படி சின்னாபின்னமாகி சிறுமைப்படுவதைப் பார்த்தால் விழியோரம் நீர் காசிகிறது.
படங்கள் : கான மயில்
படங்கள் : European Bee eater பறவை
படங்கள் : பிளாக் பக் வெளிமான்
நன்றி : என்விகடன் நிருபர் எஸ்.ஷக்தி மற்றும் கான மயில் பட உதவி இவன் சதீஸ் வலைப்பூ.
1 comments:
நன்றி ஆனந்த்
Post a Comment