Wednesday, July 20, 2011

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்



சாதி எனும் பெயரில் சக மனிதர்களை விலங்குகளாக நடத்திய கேடுகெட்ட சமூகத்தைத் திருத்த, ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் சமூகத்திலிருந்து தோன்றியவர் தத்தா ரெட்டைமலை சீனிவாசன். செங்கல் பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் கோழியாளம் எனும் கிராமத்தில் 7.7.1859 ஆம் ஆண்டு பிறந்தார். கோழியாளம் மதுராந்தகத்திற்கு வடமேற்கே சுமார் பதிமூன்று கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. இவர் பெயரிலுள்ள ரெட்டைமலை எனும் ஒட்டு அவரது தந்தையின் பெயராக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. பின்னர் இவரது குடும்பம் தஞ்சை மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தபோது அங்கு உயர் கல்வியை முடித்தவர், அதன்பின்னர் கோவையில் அரசினர் கலைக் கல்லூரியில் படிப்பினைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பி.ஏ. பட்டதாரியாக பெருமைகொண்டார்.

இங்கு கல்வி பயிலும் காலத்தில் அறிஞர் அயோத்திதாச பண்டிதரின் வீட்டில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் அயோத்திதாசப் பண்டிதரின் மைத்துனன் ஆவார். 1887 ஆம் ஆண்டு ரெங்க நாயகி அம்மையாரை மணந்தவர் ஊட்டியில் ஒரு நிறுவனத்தில் பத்தாண்டுகள் கணக்கராக பணிபுரிந்தார்.

தலித் சமூகத்தின் துயரத்தைத் தொடர்ந்து கண்டவர், தம் சமூகத்தின் துயரங்களை நீக்க பணியிலிருந்து விலகி 1890 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். தென்னிந்தியா முழுவதும் சென்று ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிந்த அவர், சாதியிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான வழியைக் காணும் ஆய்வில் இறங்கினார்.

சமத்துவ சமூகம் அமைப்பதற்கான தரவுகளை கல்வெட்டுகளிலிருந்தும், வரலாற்று நூல்களிலிருந்தும், அரசுக் குறிப்பேடுகளிலிருந்தும் தேடினார். தானடைந்த அறிவுகளை 1893 ஆம் ஆண்டு தொடங்கிய 'பறையன்' என்ற இதழ் மூலம் வெளிப்படுத்தினார். அவரின் பத்திரிகை அந்நாளில் அச்சிட்ட உடனேயே வெகுவாக விற்றுத் தீர்ந்தது. இந்திய கடந்து அயல் நாடுகளிலும் அதற்கு வாசகர்கள் பெருகியிருந்தனர். பத்திரிகையாளராக மட்டும் இருந்திடாமல் மக்களை திரட்டி அமைப்பாக்கினார். 1891 ஆம் ஆண்டு பத்திரிகை தொடங்கும் முன்னரே 'பறையர்மகாஜன சபை ' என்ற அமைப்பை தொடங்கி சாதிக் கொடுமையை எதிர்த்து மக்களை அணியமாக்கினார்.பல போராட்டங்களை நடத்தினார்.

'பறையர் மகாஜன சபை' மூலம் அக்காலத்திலேயே மாநாடு நடத்தி தலித் மக்களின் உரிமைகள் குறித்துப் பேசினார். இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்கள், கூட்டங்கள் மூலம் 1894 ஆம் ஆண்டு குடியிருக்க வீட்டுப் பட்டாக்களும், விவசாயம் செய்வதற்கு நிலங்களும், குழந்தைகளுக்கு கல்வி வசதியும் பெற்றுத் தந்தார்.மேலும் , ஆங்கில அரசு காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்த முன்னோடியாகவும் விளங்கினார். மக்களோடு இருந்து பணிசெய்ததன் சாட்சியாக ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டலாம்.1895 ஆம் ஆண்டு சென்னை வந்த ஆங்கில அதிகாரி வைஸ்ராய் லார்டு எல்சின் என்பவரிடம் மனுக் கொடுப்பதற்காக் மக்களைத் திரட்டியவர், அவர்களோடு ஊர்வலமாகச சென்றார். இன்றைய கால ஊர்வலங்களின் போது தலைவர்கள் மக்களுக்கு அப்பாற்பட்டு வாகனத்தில் வருவதை ஒப்பிட்டுப் பார்த்து அவருடைய மக்கள் நெருக்கத்தை உணரலாம்.

மேலும்,அதே 1895 ஆம் ஆண்டு அக்.5 ஆம் ஆண்டு வெளிவந்த பறையன் இதழில் தலித்துகளுக்கு நிலம் ஒதுக்கவில்லை என்பது குறித்து எழுதினர்.மதுரை மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும் புறம்போக்கு நிலங்களை பறையர் சமூகத்திற்கு வழங்கவேண்டுமென்ற அரசாங்க உத்தரவு மதுரை மாவட்டத்திற்கு பொருந்தாது என்று கூறி நிலம் கொடுக்காமல் ஓரவஞ்சனை செய்வதாகவும், நிலம்கேட்டு அளித்த விண்ணப்பங்களை நிராகரித்ததாகவும் கூறினார். மேலும், புதுப்பட்டி கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தை ஒரு பிராமணருக்கு ஒதுக்கியதை சுட்டிக் காட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் பிராமணர்களே அதிகாரிகளாக இருப்பதால்தான் பறையர்களுக்கு ஒரு துண்டு நிலம்கூட ஒதுக்கவில்லை என்றும் எழுதினார்..

இந்நிலையில், 1896 ஆம் ஆண்டு அக்.ஏழாம் நாள் சென்னை விக்டோரியா அரங்கில் மக்கள் மாநாட்டைக் கூட்டியவர் ஒடுக்கப் பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதாரம்,பண்பாடு குறித்துப் பேசினார். அதுகுறித்து பல செயல் திட்டங்களை வகுத்தார். ஆனால், திட்டங்கள் நிறைவேறத் தேவையான நிதிதேடி லண்டன் நோக்கி கப்பலில் பயணமானார்.செல்லும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதனால் தென்னாப்பிரிக்காவில் இறக்கிவிடப்பட்டார். அங்கேயே நேட்டால் என்ற இடத்தில தங்கி நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளராக பணியாற்றினார். இந்த பணி நாட்களின்போதுதான் காந்தியுடன் நண்பரானார். தென்னாப்பிரிக்காவின் பீனிக்ஸ் என்னுமிடத்தில் காந்தியைக் கண்டதாகக் கூறுகிறார். காந்திக்கு தமிழில் பெயர் எழுதக் கற்றுக் கொடுத்தார்.

ஆப்பிரிக்காவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி, மீண்டும் பறையன் இதழைத் தொடங்கினார். (எஸ்.கே.அந்தோணி பால் என்பவற்றின் குறிப்பு இப்படிச் சொன்னாலும் ரவிக்குமார் அவர்களின் தொகுப்பில் 1897 ஆம் ஆண்டு வெளிவந்த 'பறையன்' இதழ்ச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆக அவர் வெளி நாட்டில் இருந்தபோதும் பத்திரிகை நடத்தியிருக்க வேண்டும்)

1922 களில் நீதிக் கட்சியில் இணைந்தவர், 1923 முதல் 1938 வரை பதினைந்து ஆண்டுகள் சட்டப் பேரவையில் நியமன உறுப்பினராக இருந்தார். அனைத்து மக்களுடனும் சாலைகளில் சமமாக நடக்கவும், பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்கவுமான சுதந்திரம் கொடுக்கும் சட்டத்தை 1925 ஆம் ஆண்டு ஆங்கில அரசிடமிருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுத்தந்தார். மேலும், ஒடுக்கப்பட்டவர்கள் மீட்சிபெற சென்னையில் 'ஐக்கிய மகா சபை' எனும் அமைப்பை 1928 ஆம் ஆண்டு நிறுவி அதன் தலைவராகவும் விளங்கினார்.

1930 - லண்டன் முதல் வட்ட மேசை மாநாட்டில் 5 ஆவது மன்னரிடம் உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு மன்னரோடு கைகுலுக்கினார்கள்.

ஆனால் ரெட்டமலை சீனிவாசன் தன கோர்ட் பக்கெட்டில் "ராவ்சாகிப் ரெட்டமலை சீனிவாசன் பறையன் தீண்டப்படாதவன்" என பொறிக்கப்பட்ட அடையாள அட்டையை அணிந்திருந்தார்.

மன்னர் கை குலுக்க முன்வந்த போது இரட்டமலை சீனிவாசன் அதை மறுத்து "நீங்கள் என்னை தொட்டால் தீட்டுஉங்களுக்கு ஒட்டிக்கொள்ளும் என்ற நிலை இருகிறதே! நான் எப்படி உங்களுக்குகை கொடுக்க முடியும்?" என கேட்டார்.

தாத்தா அணிந்திருந்த 'பறையன்' என்ற அடையாள அட்டையை நெஞ்சோடு உரசினார். இந்நிகழ்வு அம்பேத்கருடன் அவர் வைத்த இரட்டை வாக்குரிமை கோரிக்கை ஏற்கப்பட உதவியது. இவ்வரலாற்று நிகழ்வு 1930 ஆம் ஆண்டு நடந்தேறியது.

ஆனால், இரட்டை வாக்குரிமை வழங்குவதை எதிர்த்து காந்தி உண்ணாமல் இருந்தார்.ஒடுக்கப் பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்குவதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்ததை வீரத் தன்மையற்ற செயல் என்று கூறியதோடு, நேருக்கு நேர் நின்று வாதாடாமல் உண்ணாமல் இருக்கும் கோழை என்று காந்தியைக் குறிப்பிட்டார். அச்சூழ்நிலையில் ஒடுக்கப் பட்ட மக்கள்மீது நடத்தப் பட்ட கொலை,பாலியல் வன்முறை ஆகியவை பெருகியது. அதனால், வேறு வழியில்லாமல் தலித்துகளின் அன்றையப் பாதுகாப்புக் கருதி அம்பேத்கருடன் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது ஒரு வரலாற்றின் கருப்பு நிகழ்வாக அமைந்தது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு காந்தி செய்த துரோகம் மன்னிக்கமுடியாததாக அமைந்தது.

அவருடைய மைத்துனன் அயோத்திதாசர் ' தமிழன்' என்று சாதியை ஒழிப்பதற்காக மொழியின்வழி அடையாள படுத்தப் பட்ட பத்திரிகை துவங்கியதற்கு மாறாக, சாதியின் பெயரிலேயே 'பறையன்' என்று பத்திரிகை துவங்கினார். எனை எந்தப் பெயரைச் சொல்லித் தாழ்த்துகிறாயோ அந்தப் பெயர்கொண்டே மீண்டேழுவேன் என்றவாறு அவரது போர்க்குணம் அமைந்தது. அயோத்திதாசர் 'திராவிட மகாஜன சபை' என்று துவங்கியபோது இவர் 'பறையர் மகாஜன சபையை' நிறுவினார்.

விடுதலையின் செயல் வடிவத்தில் இவ்வாறு தனித்த போக்குகளைக் கொண்டிருந்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கரின் கண்ட வழிமுறையிலும் முரண்பட்டு நின்றார். புத்த மதம் மாறினால் சாதிக் கொடுமைகளுக்கு முடிவுகட்டலாம் என அம்பேத்கர் உரைத்த பொழுது, அதில் தீர்வுகிடைக்கது என்று ஆணித்தரமாகக் கூறினார் தாத்தா. அவர் கூறியது போலவே இன்றும் புத்த மதத்திற்கு மாறிய தலித்துகளின் நிலையில் மாற்றமில்லை.

இவ்வாறான தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த தாத்தா 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -27 ஆம் நாள் உருவாக்கப்பட்ட செட்யூல்டு இன புரோவின்சியல் அட்வைசரிப் போர்டுக்கு ஆலோசகராக விளங்கினார். இவ்வாறு தொடர்ந்து மக்கள் பணி செய்த அவருக்கு ஆங்கில அரசு 1926 ஆம் ஆண்டு ராவ் சாகிப், 1930 ஆம் ஆண்டு ராவ் பகதூர், 1936 ஆம் ஆண்டு திவான் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கியது. 1940 ஆம் ஆண்டு திராவிட மணி என்ற பட்டம் தமிழ் தென்றல் திரு.வி.க. முன்னிலையில் வழங்கப்பட்டது. அந்நிகழ்வுக்கு இராஜாஜி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓயாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை தேடி ஒடிய மாவீரன் இரெட்டைமலை சீனிவாசன் 1945 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் (இயற்கை எய்தினார்). அவரின் பிறந்த நாள் இன்று. சாதியை ஒழிக்க சபதமேற்போம்.


நன்றி : தமிழ்முதல்வன் வலைப்பூ மற்றும் தமிழச்சி

2 comments:

MUTHU said...

தாத்தா ரெட்டை மலை சீனிவாசனின் சரித்திரம் பற்றி படிக்க ஆவலாக உள்ளது.
My Mail id is
isakki.dvk@gmail.com
isakki@yahoo.com

Siraju said...

தொடர்ந்து கிடைக்கும் தாத்தா ரெட்டைமலை சீனிவாசனாரின் கட்டுரைகள் இடப்படும். வேறு ஏதாவது அவரைப் பற்றிய தகவல் அறிந்தால் உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்புகிறேன்.

Post a Comment