Thursday, July 21, 2011

நீலகிரியும் <--> டாப்சிலிப்பும்


தமிழ்நாட்டு மக்கள் காடுகளை பற்றி பேசினாலே அவர்களின் நினைவிற்கு வருவது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் தான். காடுகள் பற்றி பேசும்போதெல்லாம் தவிர்க்க முடியாத ஒரு தொடர் இது. அந்த மலைதொடரின் முக்கியமான இடங்களாக நீலகிரியையும், டாப்சிலிப்பையும் சொல்கிறார்கள்.

கிட்டதட்ட 5 ஆயிரத்து 670 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட நீலகிரி மலைத்தொடர் 1986-ல் இந்தியாவின் முதல் "பயோஸ்பியர் ரிசர்வ்" ஆக அறிவிக்கப்பட்டது. 'பயோஸ்பியர் ரிசர்வ்' என்றால் பல்லூயிர் மண்டலங்கள் என்று அர்த்தம். அதாவது இந்த மண்டலங்களில் அனைத்து விதமான உயிரினங்களும் இருக்கும் என்பது பொருள். உலகம் முழுவதும் 34 பல்லுயிர் மண்டலங்கள் உள்ளன. இந்தியாவில் இரண்டு பல்லுயிர் மண்டல்ங்கள் இருக்கின்றன. அவை இமயமலையும், நீலகிரியும்தான்.

ஆசிய கண்டத்திலேயே மிகச் சிறப்பான முறையில் ஆவணப்படுத்தப்பட்ட இடமாக நீலகிரி மலைத்தொடர் இருக்கிறது. நீலகிரியை பற்றி கிட்டத்தட்ட 2,829 வெளியீடுகள் வந்துள்ளன. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் இந்த மலைத் தொடரில் மட்டுமே காணக்கூடிய ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்றொரு இடமான டாப்சிலிப்பின் கதையே வேறு.


ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த கொண்டிருந்த போது டாப்சிலிப் பகுதியில் உள்ள காடுகளில் இருந்த லட்சக்கணக்கான மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் காட்டின் வளமே பாதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனாலும் அதைப் பற்றி கவலைபடாமல் தொடர்ந்து மரங்களை வெட்டித்தள்ளிக் கொண்டே இருந்தது ஆங்கில அரசு.

பின் எப்படி டாப்சிலிப் இத்தனை வளமாக இருக்கிறது என்று பார்த்தால் "க்யூகோ வுட்" என்ற தனி மனிதனின் முயற்சிதான் அது. மரங்களை வெட்டி எடுத்து செல்லும் போது அதை கண்காணிக்கும் வேலைக்கு வந்தவர்தான் க்யூகோ வுட் என்ற ஆங்கிலேயர். க்யூகோ வுட் ஒரு மரங்களின் காதலர். அவருக்கு மரங்கள் இப்படி வெட்டப்படுவது வேதனையை கொடுத்தாலும், வேலைக்காக அதை செய்ய வேண்டியிருந்தது. இவர் மரங்களை வேரோடு வெட்டாமல் அடிப்பாகத்தை விட்டு விட்டு வெட்டும் முறையை அறிமுகம் செய்து வைத்தார். ஏனென்றால் பாதியாக விட்டு வைக்கும் மரங்கள் மீண்டும் துளிர் விடும் என்ற நம்பிக்கைதான் அதற்க்கு காரணம்.

காட்டுக்குள் ஊன்றுகோலை ஊன்றி நடக்கும் பழக்கம் கொண்டவர் க்யூகோ வுட். ஒவ்வொரு முறையும் ஊன்றுகோல் ஊன்றும் போது அதில் சிறு குழி ஏற்படுத்துவார். அதில் ஒரு தேக்கு மர விதையைப் போட்டு மூடி விடுவார். மரங்களை அழிக்கும் தனது வேலைக்கு பிராயச்சித்தமாக இதை செய்வார். இன்றைக்கு டாப் சிலிப் அடர்ந்த காடாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் க்யூகோ வுட்டின் கடின உழைப்பு.

தான் இறந்த பின் தனது உடலை அதே காட்டில்தான் புதைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு அவர் இறந்தார். அவரது விருப்பப்படியே க்யூகோ வுட்டின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. டாப்சிலிப் பின் மலைச்சரிவில் இலை சருகுகளை விலக்கிப்பார்த்தால் க்யூகோ வுட்டின் கல்லறை தெரியும்.

செய்தி சேகரிப்பு : தினம் ஒரு தகவல், தினந்தந்தி

1 comments:

Anand said...

Good one.

Post a Comment