ஒரிசாவின் நியாம்கிரி மலையிலும், கிழக்குப் பகுதிகளான காலஹந்தி, லான்ஜிகார், ரயகதா மாவட்டங்களின் பாக்சைட் சுரங்கங்களிலும் வேதாந்தா நிறுவனம் முதலீடு செய்யவிருக்கும் தொகை 50 ஆயிரம் கோடி. “ஒரிசாவில் மட்டும் 240 கோடி டன் பாக்சைட்டும், 25 ஆயிரத்து 300 கோடி டன் நிலக்கரியும் புதைந்துள்ளன. தனியார் துறைகளிடம் சுரங்கங்களுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்ட போது, பிற நிறுவனங்கள் தயக்கம் காட்டின. நாங்கள் ஒரிசா சுரங்கக் கழகத்தின் மூலம் பாக்சைட் சுரங்கங்களை நிர்மாணிக்க முன்வந்தோம். கட்டடங்கள், சாலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்காக இதுவரை 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். இங்கு உற்பத்தி தொடங்கினால், ஒரு டன் அலுமினியத்தை 1000 டாலர் விலையில் சர்வதேச மார்க்கெட்டில் தர முடியும். ஆனால், டன் ஒன்றுக்கு 2000 டாலர் என்பது, இன்றைய சர்வதேச விலை நிர்ணயமாக இருக்கிறது’ என வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், தனது நோக்கங்களை தெளிவுபடுத்துகிறார்.
"ஊரான் வீட்டு நெய்யே....' என்பது போல, இந்திய அரசு என்ற பொதுத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் - ஒரிசா பழங்குடியின மக்களுக்கு முற்றிலும் உரிமையான மாபெரும் இயற்கைச் சுரங்கத்தை - கனிம வளங்களைச் சுரண்டி, சர்வதேச சந்தையில் விற்றுக் கொழுக்க நினைக்கும் அனில் அகர்வாலின் கூற்றுப்படி, டன் ஒன்றுக்கு 1000 டாலர் எனில் 240 கோடி டன் பாக்சைட்டில் கழிவு நீங்க, 200 கோடி டன்னுக்கு கிடைக்கும் வருவாய் 2 லட்சம் கோடி டாலர் (இந்திய நாணய மதிப்பில் சுமார் 96 லட்சம் கோடி. அதிலும் சர்வதேச இன்றைய விலை நிலவரத்தில் 2000 டாலர் எனில், 192 லட்சம் கோடிகள்). இந்த ஒரேயொரு திட்டத்தின் வருவாயைக் கொண்டே, முகேஷ் அம்பானியை விஞ்சி விடலாம் என்பதே அகர்வாலின் திட்டம். இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் பெரும்பணக்காரர் என்ற நிலையை எட்டிவிடலாம் என்பதும் அவரது கனவாக இருக்கலாம்.
இந்தியாவில் மட்டும் இரண்டு இடங்களில் இரும்பு உருக்கு ஆலைகள், ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் ஆறு இடங்களில் துத்தநாக சுரங்கங்கள், மகாராட்டிரத்தில் தாமிர சுத்திகரிப்பு ஆலை, ஒரிசாவில் நான்கு இடங்களில் அலுமினிய சுரங்கங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள், நான்கு மாநிலங்களில் ஏழு இடங்களில் உயர்மின் உற்பத்தி நிலையங்கள், இன்னும் கட்டுமான நிலையில் உள்ள திட்டங்கள் என வேதாந்தாவின் உள்ளங்கையில் இந்திய வரைபடம் என்பது போல, அகர்வாலின் கை வரிசை இந்திய நிலப்பரப்பெங்கும் நீண்டு வளர்கிறது. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு உற்பத்தித் துறைகளிலும் "விரும்பத்தகாத இந்த பூதம்' கால் பதித்துள்ளதாக, முதலாளித்துவ ஊடகங்கள் குதூகலிக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் ஒரிசாவில் ஆட்சியிலிருக்கும் நவீன் பட்நாயக், வேதாந்தாவின் தொழிற் திட்டங்கள் மூலம் ஒரிசா வளர்ச்சி பெறும் என்ற பொய்யான பரப்புரைகளை, வேதாந்தாவிற்கு ஆதரவாக தனது கட்சியினரைக் கொண்டு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றின் மூலம் செய்து வருகிறார். நவீன் பட்நாயக்கின் அரசியல் எல்லை ஒரிசா எனில், பாரதிய ஜனதா கட்சியின் எல்லையோ இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்குமானது. அது, இந்துத்துவ அகண்ட பாரதக் கனவு. அக்கனவை நனவாக்க பெருந்தீனி வார்த்து வரும் ஓர் இந்துத்துவ கனவான் என்ற உறவு முறையில்தான் பாரதிய ஜனதா கட்சியும், சங்பரிவார் அமைப்புகளும் வேதாந்தா அகர்வாலுக்கு ஆதரவாகத் தீவிரமாகக் களம் இறங்கி செயல்படுகின்றன. சங்பரிவார் இந்துத்துவப் படைகளின் நிதிக் காப்பாளராக இருந்த திருபாய் அம்பானி இறந்த பிறகு, அந்த இடத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பவர் அனில் அகர்வால் என்பதை நாம் அறிய வேண்டும்.
இந்துத்துவ சக்திகளின் நம்பிக்கைக்குரிய இந்துப் புரவலர் என்ற வகையில், அனில் அகர்வால் சுரண்டிச் சேர்க்கும் நிதி மூலதனம், இனிவரும் காலங்களில் இந்துஸ்தான் பேரரசை உருவாக்கப் பெரும் பங்களிக்கும். இந்த அபாயகரமான போட்டியை முன் உணர்ந்தே, காங்கிரஸ் அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு முட்டுக்கட்டை போட எண்ணுகிறது. முன்னாள் மத்திய அமைச்சரும் காளஹந்தி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பக்த சரண்தாஸ் ("பசுமை காளஹந்தி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரும் கூட) பழங்குடி மக்களின் பண்பாடு மற்றும் தனித்துவம் பாதிக்கப்படும் என்று கூறி, வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து வருகிறார். 1996 இல் தனது தொகுதியில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை லான்ஜிகார் என்னுமிடத்தில் நிறுவ வேண்டுமென கோரிக்கை வைத்தவரும் இவரே.
இப்பின்னணியை முன்வைத்தே, “இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு, இறங்கு முகத்தைக் கண்ட காங்கிரஸ், இடதுசாரிகளின் ஆதரவைப் பெறுவதற்காக, ஒரிசாவில் பா.ஜ.க. ஆதரவுடன் இருக்கும் நவீன் பட்நாயக்கை வீழ்த்தத் திட்டமிட்டு, வேதாந்தா நிறுவனத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. பன்னாட்டு நிதி ஆதரவில் ஒரிசாவில் காலூன்றியிருக்கும் தொண்டு நிறுவனங்கள், ராகுல் காந்தியின் பழங்குடியினருக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு உதவுகின்றன. ஒரிசாவிலிருந்து வேதாந்தா நிறுவனத்தை வெளியேற்றத் துடிக்கின்றன. இந்த நாட்டை காங்கிரஸ் என்.ஜி.ஓ. மயப்படுத்த விரும்புகிறது’ என்ற தர்மேந்திர பிரதானின் (பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி) கூற்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். “முன்னர் கொள்கை அளவில் இத்திட்டத்திற்கு நடுவண் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. ஆனால், இரண்டாம் கட்ட ஒப்புதலை அளிக்காதது ஏமாற்றம் தருகிறது’ என ஒரிசா மாநில சுரங்கத்துறை அமைச்சர் ரகுநாத் மொஹந்தி கவலை தெரிவிக்கிறார்.
ஆனால் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்துமே, தங்கள் அரசியல் மற்றும் பொருளியல் பயன்களை உள்ளடக்கியே இத்திட்டங்களை ஆதரித்தும் எதிர்த்தும் வேடம் கட்டி வருகின்றன. இவர்களுக்கும், இத்திட்டங்களினால் வாழ்வு பறிபோகவிருக்கும் பழங்குடி மக்களின் உணர்வுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை இவர்களின் நடவடிக்கைகளே நமக்கு உணர்த்தி விடும். முதலாளித்துவக் கட்சிகள், அதிகார வர்க்க நிபுணர்கள், நீதிமன்றங்கள் ஆகியோர் கூட்டாக அடித்தள உழைக்கும் மக்களையும், பூர்வகுடியினரின் உரிமைகளையும் விலைபேசி வருகின்றனர்.
ஆளும் வர்க்கக் கூட்டணிகளின் இத்தகைய பித்தலாட்டங்களுக்கு நடுவில், மார்ச் 2004 இல் "நியாம்கிரி சுரக்ஷா சமிதி' என்ற அமைப்பு, வேதாந்தா நிறுவனம் சுரங்கங்கள் தோண்ட ஒரிசா அரசை அணுகியிருப்பதை அறிந்து, தனது முதல் எதிர்ப்பைப் பதிவு செய்தது. நவம்பர் 2007இல் ஒரிசா வனவாழ்வு சங்கத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் மொகந்தி, லோக்சக்தி அபியான் அமைப்பைச் சேர்ந்த பிரபுல்ல சமந்த்ரே, மலைவாழ் சுற்றுச் சூழல் நிறுவனத்தைச் சேர்ந்த டõக்டர் சிறீதர் ராமமூர்த்தி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து, வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தனர். இதன்பிறகு, இந்த எதிர்ப்பு சர்வதேச அளவில் எடுத்துச் செல்லப்பட்டது. சர்வைவல் இன்டர்நேஷனல், அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஆக்ஷன் எய்டு போன்ற அமைப்புகள் பின்னர், இந்த எதிர்ப்பில் இணைந்து கொண்டன. மக்கள் இயக்கங்களின் எதிர்ப்புகள் ஒருபுறம் வலுப்பெற்று வந்த நிலையில், பழங்குடி மக்களில் பெரும்பான்மையினர் மாவோயிஸ்டுகளின் ஆயுதந் தாங்கிய போராட்டப் பாதையில் அணிவகுத்து வருவது மறுபுறம் நிகழ்ந்தேறியது.
இத்தகைய சமூக - அரசியல் சூழல், ஆளும் வர்க்கத்திற்கு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இந்நெருக்கடியிலிருந்து (தற்காலிகமாக) மீள நடுவண் அரசு, என்.சி. சக்சேனா தலைமையிலான குழு ஒன்றை நியமித்தது. இக்குழு, நியாம்கிரி மலையில் பதினோரு இடங்களில் தோண்டப்பட்டிருக்கும் சுரங்கங்கள் முறையான அனுமதி பெறாதவை என்றும், கிராம வனநிலங்கள் இந்நிறுவனத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. “காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் விதிகளை மீறும் வகையில் இந்த சுரங்கம் அமையும் என்பதால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட அனுமதி சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட அனுமதிக்கான பரிசீலனையின்போது, விதிமீறல் தெரிய வந்தது. சக்சேனா குழு வின் அறிக்கை, வன ஆலோசனைக் குழு அறிக்கை, தணிக்கையாளர் அறிக்கை மற்றும் சட்டரீதியிலான அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2007 இல் இத்திட்டத்திற்கு கொள்கை அளவில் அளிக்கப்பட்ட ஒப்புதலை, திட்டத்திற்கான அனுமதியாகக் கருதக் கூடாது. பழங்குடியினர் பாதுகாப்பை முற்றிலும் சிதைத்துவிடும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளதும் கணக்கில் கொள்ளப்படுகிறது. வனத்துறைக்குச் சொந்தமான 26 ஹெக்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக, இந்நிறுவனத்திற்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது’ என நடுவண் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகஸ்டு 24, 2010 அன்று அறிவித்துள்ளார்.
2006 முதல் 2009 வரை, ஒரிசா மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை வேதாந்தா அலுமினிய நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமை மீறல்களில் வேதாந்தா மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலான பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, இங்கிலாந்து திருச்சபை, நெதர்லாந்து ஓய்வூதிய நிதியம் மற்றும் நார்வே அரசு ஆகியன தங்களது வேதாந்தா நிறுவனப் பங்குகளை இவ்வாண்டின் தொடக்கத்தில் விற்றுவிட்டன. மேலும் "அவிவா' (அஙஐஙஅ) என்னும் காப்பீட்டு நிறுவனம், கடந்த சூலையில் நடத்திய தனது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக மூன்று முக்கிய தீர்மானங்களை எடுத்தது. 2001இல் தொழிற்துறைக்கான இந்தியப் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை வாரியம், பங்கின் விலைகளில் முறைகேடுகள் செய்ததாக ஸ்டெர்லைட் நிறுவனத்தைத் தண்டித்திருக்கிறது.
அதே ஆண்டில் பிரிட்டிஷ் வேலைவாய்ப்பு குழுமம், தனது நிறுவனத்திற்கான பங்குச் சந்தை பரிவர்த்தனைகளின் உத்தேச மதிப்பீடுகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தும், உயர்த்தியும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அகர்வாலை அம்பலப்படுத்தியது. அகர்வாலும் வேதாந்தாவின் துணைத் தலைவரான அவரது தம்பி நவீனும் அந்நியச் செலாவணி விதிகளை பல்வேறு நாடுகளில் மீறி செயல்பட்டவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பல்வேறு நாடு களின் அரசுத் துறை நிறுவனங்களே வேதாந்தாவின் தொழில்முறை பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தியிருந்த போதும், இந்திய ஆளும் வர்க்கம் வேதாந்தாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்து, தனது ஊழல் ஜனநாயக அமைப்பை, தானே அம்பலப்படுத்தியுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் முறைகேடுகள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு சர்வதேச மனித உரிமை செயல்பாட்டாளர் பியான்கா ஜாக்கர், “நான் பார்த்த வகையில், வேதாந்தா மிக மோசமான நிறுவனங்களில் ஒன்று. அதுவும் 21ஆம் நூற்றாண்டில் இத்தனை முறைகேடுகளுடன் ஒரு நிறுவனம் செயல்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. பர்தகுடாவில் அமைந்திருக்கும் இவர்களின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு நிலங்களை ஆக்கிரமித்தபோது, 2002 இல் அங்கு அமையப் போகும் தொழிற்சாலையில் அப்பகுதி மக்களுக்கு வேலை தருவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஒருவருக்கும் வேலை தரப்படவில்லை. அவர்களிடம் பெறும் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ஒரு லட்சம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பலரிடம் சட்டப்படியான உரிமங்கள் (பட்டா, பத்திரம் முதலான ஆவணங்கள் பழங்குடியினருக்கு எப்போதும் தரப்பட்டதில்லை) இல்லாததால், அந்தப்பணம் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் குடியிருந்த வீடுகளுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே, இழப்பீடு தரப்பட்டது. அதாவது வெறும் 20 டாலர் மட்டுமே. இது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
“இந்த தொழிற்சாலை முற்றிலும் வெளிநாட்டு பொறியாளர்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. 2003 இல் இத்தொழிற்சாலை கட்டப்படும் இடத்திற்கு முன்னால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 400 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்திருக் கின்றனர். அவர்கள் அனைவரையும் காவல் துறை சிறையில் அடைத்துள்ளது. அவர்கள் சிறையிலிருந்து வந்த பிறகு, பூரி ஜெகன்னாதர் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, இத்தொழிற்சாலையின் பாதுகாப்புச் சுற்றுச் சுவரைக் கட்டுவதற்கு அம்மக்களை நிர்பந்தித்துள்ளனர். இச்சுற்றுச் சுவருக்குள்தான் அவர்கள் காலங்காலமாகப் பயிர் செய்து வந்த நிலங்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு, கபளீகரம் செய்யப்பட்டிருந்தன. மக்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
“அரசும் காவல் துறையுமே இந்நிறுவனத்திற்கு ஆதரவாக, இம்மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருக்கின்றன. அரசுக்கும் வேதாந்தா நிறுவனத்திற்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் ஆவணங்கள் அனைத்தையும் நான் ஆய்வு செய்தேன். புவனேஸ்வர் பிஜு பட்நாயக் விமான நிலையத்தில் நான் இறங்கியபோது, "சுரங்கங்கள் ஒரிசா மக்களின் மகிழ்ச்சிக்குரியவை' என்ற விளம்பரப் பலகையை நான் கண்ணுற் றேன். என்ன ஒரு குரூரமான முரண்! இப்பகுதியில் வாழும் மக்களுக்கு நோய்களையும், வறுமையையும், துன்பத்தையும் தவிர, வேறு ஒன்றையும் இந்த அலுமினிய சுத்திகரிப்பு ஆலை தரவில்லை. வேதாந்தாவின் பாக்சைட் வெட்டியெடுக்கும் திட்டம் உடனடியாக வெளியேற்றப்படாவிட்டால், கோண்டு இன மக்களின் வாழ்வே முற்றிலும் பறிபோய்விடும்’ என நேர்மையாகவும் பகிரங்கமாகவும் பதில் அளித்துள்ளார்.
இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட உத்தரவிடும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. தூத்துக்குடி அருகே மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் தாமிர உருக்காலை தொடங்க, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு கடந்த 1995 இல் அனுமதி அளிக்கப்பட்டது. ஓராண்டிலேயே இந்த அனுமதியை நடுவண் சுற்றுச் சூழல் அமைச்சகம், தமிழக அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியன வேதாந்தாவுக்கு வழங்கின. முதல் கட்டமாக, தினசரி 234 டன் தாமிரம், 638 டன் சல்பியூரிக் அமிலம் தயாரிக்கும் திறனில் இந்த ஆலை அனுமதி பெற்றது. முதலில் குஜராத், கோவா மாநிலங்களில் தொடங்கப்படுவதாக இருந்த இந்த ஆலை, அம்மாநில மக்களின் எதிர்ப்புக்குப் பிறகு, மகாராட்டிர மாநிலம் ரத்தினகிரிக்கு மாற்றப்பட்டது.
200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட பிறகும், ரத்தினகிரி மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்வாங்கி, வழங்கப்பட்ட உரிமத்தை மகாராட்டிர அரசு திரும்பப் பெற்றது. தேசிய கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள, கடல் தாவரங்கள் அதிகம் காணப்படும் தூத்துக்குடியின் கடலோரப் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை பின்னர் நிறுவப்பட்டது. தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள நான்கு தீவுகளின் அருகில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 25 கி.மீ. தொலைவுக்கு அப்பால் தொழிற்சாலை அமைய வேண்டும் என அப்போது உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ஆனால், தொழிற்சாலைக்கும் நான்கு தீவுகளுக்கும் இடையே முறையே 6, 7 மற்றும் 15 கி.மீ. தொலைவுதான் இருக்கிறது. எனவே, தடை செய்யப்பட்ட பகுதிக்குள்தான் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய ஒப்புதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆலையை மூடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக்கட்டளை, தூத்துக்குடி சி.அய்.டி.யு. மாவட்ட குழுவின் செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் வழக்குத் தொடுத்திருந்தனர். இவர்களின் மனுக்களை ஆய்வு செய்த உயர் நீதிமன்றம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், “தாமிர உருக்காலைக்கு மற்ற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் - மத்திய, மாநில அரசுகள் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். பொது மக்களின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக, சட்டப்படி நடத்த வேண்டிய கருத்து கேட்புக் கூட்டத்தையும் அதிகாரிகள் நடத்தவில்லை. இந்தத் தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுகளில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆர்கானிக், புளோரைடு கலந்துள்ளன என NEERIஇன் அறிக்கையிலேயே கூறப்பட்டுள் ளது.
தொழிற்சாலை அமைந்துள்ள இடமே, கடுமையாக மாசுபட்டுள்ளது. சட்ட விதிகளைப் புறக்கணித்து இத்தொழிற்சாலை தொடங்கப்பட்டதைக் காட்டுவதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், அதை மறுக்கும் வகையில் தேவையான ஆதாரங்களை தொழிற்சாலை தரப்பு தாக்கல் செய்யவில்லை. குடிமக்களின் சுகாதாரம், உடல் நலத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச் சூழலை மேம்படுத்தவும் அரசுக்குப் பொறுப்பு உள்ளது. காற்றில் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவை ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியேற்றுவதன் மூலம், அந்தப் பகுதியைச் சுற்றி வாழ்பவர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. மாசு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை இப்போதாவது நிறுத்த வேண்டும். ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூடும்படி உத்தரவிடப்படுகிறது. தொழில் தகராறு சட்டப்படி, ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற தொழிலாளர்களுக்கு உரிமை உள்ளது.
வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற அமைப்புகளில், அவர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பு கிடைக்க, மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பு வெளியான நாளில், “மராட்டிய மாநிலத்தில் ஆலையை அமைக்க அனுமதிக்காமல் அந்த அரசு விரட்டிய பின் தமிழகத்திற்கு இந்த ஆலை வந்தது. விளைநிலங்கள் பாழாகும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியும்; மக்கள் உடல் நலனுக்கு பெருங்கேடு நேரும் என்பதால், இந்த ஆலை மூடப்படவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நானே வாதாடினேன். தொடர் போராட்டங்கள் பல நடத்தினோம். உண்மை ஒரு நாள் வெல்லும்; நீதி நிலைக்கும் என்பதை எடுத்துக்காட்டி இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது’ என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ அறிக்கை ("தினமலர்' 29.9.2010) வெளியிட்டார்.
ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் இடைக்கால தடை பெறப்பட்டுள்ளது. இத் தொழிற்சாலையின் ஊழியர்களோ, இதை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் இத்தொழிற்சாலையின் எந்திரப்பிரிவில் விபத்தில் சிக்கியும், தொழிற்சாலை நச்சுக்கழிவால் பாதிக்கப்பட்டும் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்து போயிருக்கின்றனர். இத்தொழிற்சாலை தொடங்கப்பட்ட நாள் முதல் எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த போதும், சாதி சங்கங்கள், கட்சிகள், அரசு அதிகாரிகள் என தனக்கு ஆதரவாகப் பலரையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தது. இறுதியாக அரசாங்கமும் விலைபோனது. மூன்று மாநிலங்களில் நிறுவப்பட முடியாத இத்தொழிற்சாலையை பலத்த எதிர்ப்பிற்கிடையில், தமிழகத்தில் வேதாந்தாவால் நிறுவ முடிந்தது. பதினைந்து ஆண்டுகாலம் வேதிப்பொருட்களைத் தயாரித்து, கழிவுகளை நீர்நிலைகளில் கலந்துவிட்டு, காற்றை நச்சாக்கி, தேவையான அளவு லாபம் ஈட்டிய பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடும் நீதித்துறையும், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசுகளும் - வேதாந்தாவைவிட ஆபத்தான மக்கள் விரோதிகள் என்று சொல்லத் தோன்றவில்லையா?
வேதாந்தா நிறுவனத்திற்கு நடுவண் அமைச்சகம் அனுமதி மறுத்த அதே நாளில், புதுதில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்திய மணிசங்கர் (அய்யர்), “மத்திய திட்டக்குழுவில் உள்ளவர்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பதை மட்டுமே மூலமந்திரமாக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள் என்பதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இதன் விளைவாக நாட்டின் வளர்ச்சி என்பது, மக்களின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வளர்ச்சியாக இல்லாமல், பணக்காரர்களே மேலும் பணக்காரர்களாகக் கொழுக்கும் வளர்ச்சியாக உருவெடுத்து விட்டது. ஒரிசாவில் படிப்பறி வில்லாத, கந்தை ஆடை உடுத்தியுள்ள, அழுக்குப் படிந்த பழங்குடிகளிடமிருந்த கனிம வளம் நிறைந்த நிலத்தை அடிமாட்டு விலையில் வாங்கி, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடலாம் என்று கணக்குப் போட்டு உள்நாட்டு, வெளிநாட்டு தொழிலதிபர்கள் கூட்டாகச் செயல்படுகின்றனர்.
“சுற்றுச் சூழலியலாளர்களின் எச்சரிக்கைகளை அரசு அலட்சியம் செய்தது. இப்போது ஆயுதம் தாங்கிய பழங்குடிகள் எதிர்க்கத் தொடங்கிய பிறகே அரசு பின்வாங்கத் தொடங்குகிறது. கடந்த ஆட்சியில் விவசாயக் கடனால் தற்கொலை செய்து கொண்ட, லட்சக்கணக்கான விவசாயிகள் அரசுடைமை வங்கிகளில் வாங்கியிருந்த 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்தபோது, நாடு முழுக்க கண்டனங்கள் எழுந்தன. ஆனால் 10 நாட்கள் மட்டுமே நடந்து முடியவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக, தில்லி நகரில் மட்டும் 70 ஆயிரம் கோடி ரூபாயைச் சூறையாடுகிறது அரசு. கடந்த 15 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், அடிப்படை சமூகத் தேவை களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி 15 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், மனித ஆற்றல் வளர்ச்சியில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பதோ 134 ஆவது இடம் தான். நம்முடைய பொருளாதாரக் கொள்கைகளும், திட்டமிடலும், திட்ட நடைமுறையும் சரியாக இல்லை என்பதையே இவையெல்லாம் உணர்த்துகின்றன’ என காங்கிரஸ் அரசின் ஊழல் அதிகாரத்தை அக்கட்சிக்குள்ளிருந்தே தோலுரிக்கிறார்.
மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்திற்கு வரவிரும்பும் அனைத்துக் கட்சிகளுமே, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிவருடிகளாயிருந்து, உலகப் பெரும் முதலாளிகளின் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டி வரிசைகட்டி நிற்கின்றன. மேலும் மக்கள் விரோதிகளாகவும் அணி சேர்ந்திருக்கின்றனர்.
நன்றி : ஆசிரியர் இளம்பரிதி, தலித் முரசு இதழ் மற்றும் கீற்று இணையதளம்
0 comments:
Post a Comment