Tuesday, July 26, 2011

இயற்கையை தேடி இனிய பயணம் : டூவீலரில் தேசிய "டூர்'


இந்தியாவில் பின்பற்றப்படும் இயற்கை வேளாண்மை முறைகள் பற்றி ஆராய்ந்து ஆவணப்படுத்தும் லட்சியத்தோடு, கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் தேசிய சுற்றுப்பயணம் துவங்கியுள்ளனர். கோவை, சிங்கநல்லூரை சேர்ந்தவர் தீபன் (25); விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரி. திருப்பூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (25); சாப்ட்வேர் இன்ஜினியர். பள்ளித்தோழர்களான இருவரும் இயற்கை மற்றும் இயற்கை வேளாண்மை மீது, அதிக ஆர்வம் கொண்டவர்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் இயற்கை வேளாண்மை முறைகளை பற்றி ஆராய்ந்து, ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு, இரு சக்கர வாகனத்தில் இந்தியா முழுவதும் சுற்றி வர முடிவு செய்து, நேற்று காலை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து பயணத்தை துவங்கினர்.

சுமைப்பயணம் பற்றி தீபன் கூறியதாவது: எங்கள் இருவருக்கும் பள்ளி நாட்களிலேயே இயற்கை மீது ஆர்வம் அதிகம். வேலைக்காக வெவ்வேறு துறையை தேர்வு செய்ததால், நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைத்தது. அதில், வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரம் கிடைத்ததே தவிர, மன நிறைவு கிடைக்கவில்லை. அதனால், மனதுக்கு பிடித்தமான வேலையை செய்யலாம் என முடிவெடுத்து, நாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்தோம். பின், இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மை பற்றி ஆராயலாம் என்கிற முடிவுக்கு வந்தோம். "இயற்கை விஞ்ஞானி' நம்மாழ்வார், மதுராமகிருஷ்ணன் ஆகியோர், நவீன வேளாண்மையில் உள்ள பிரச்னைகள் மற்றும் இயற்கை வேளாண்மையிலுள்ள நன்மைகள் பற்றி விரிவாகக் கூறினர். மண்ணைப் பாதுகாத்து, மகசூலை பெருக்க, இயற்கை வேளாண்மையே சிறந்தது என்பதை பல்வேறு சான்றுகளோடு விளக்கினர்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எந்த மாதிரியான விவசாய முறைகளை பின்பற்றுகின்றனர்; அங்கு இயற்கை வேளாண்மைக்கு வரவேற்பு இருக்கிறதா, என்பதை கள ஆய்வு செய்து வீடியோ ஆதாரமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் ஆவணப்படுத்த உள்ளோம். இந்த பயணத்துக்கு இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துகிறோம். 45 நாட்கள் தமிழகத்திலும், பின் கேரளா மற்றும் அங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். திரும்பி வர இரண்டு ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு, தீபன் தெரிவித்தார்.

தகவல் : தினமலர்

0 comments:

Post a Comment