எந்த சாதிய கூட்டணிகளையும் மீறி மாயாவதிதான் அடுத்தும் ஆட்சிக்கு வருவார்
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தேர்தலை எதிர்கொள்வதற்கு இன்னும் ஓராண்டு உள்ளது. ராகுல் காந்தி மற்றும் திக்விஜய் சிங் தலைமையில் காங்கிரசார் அங்கே கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர். மாயாவதியைத் தோற்கடிக்க காங்கிரஸ் சமாஜ்வாடியுடன் கைகோர்க்க விருப்பத்துடன் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இரு கட்சிகள் கொண்டிருக்கும் தனிப்பட்ட ஆசைகளால் அந்தக் கூட்டணி வருவதற்கு வாய்ப்பில்லை. இம்மாநிலத்தில் பாஜகவும் ஆட்சிக்கு எப்பாடுபட்டாவது வரவேண்டும் என்று போராடி வருகிறது. அக்கட்சியின் ராமஜென்ம பூமி ஆயுதம் பழுதுபட்டு விட்டதால் பலவீனமாக உள்ளது.
தேர்தலுக்கு முன்பான இந்த ஓர் ஆண்டில் இரண்டு விஷயங்களுக்காக மாயாவதி விமர்சனத் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம். கட்சியின் கீழ்மட்ட, மத்திய நிலைகளில் பிராமணர்களின் மேலாதிக்கம் தலித் தொண்டர்கள் மத்தியில் குறிப்பாக சாமார்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் பிராமணர்கள் தங்களுக்கு சாதகமாக ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்திக்கொண்டதான உணர்வு அவர் களிடையே உள்ளது. தலித்துகள் மற்றும் பிராமணர்களைச் சேர்த்து மாயாவதி ஒரு அசாதாரணமான பரிசோதனையை செய்தது நம் அனைவருக்கும் தெரியும். பிராமணர்களுக்கு பொருளாதார அனுகூலங்கள் கிடைக்க வேண்டும் என்று மாயாவதி விரும்பினார். அந்த வாய்ப்பை வழங்காவிட்டால் அங்கே மிகப்பெரிய பிராமணக் கலகம் எழுந்திருக்கும்.
பிராமணர்களில் ஒரு பிரிவினர் காங்கிரசுக்குப் போகலாம் என்ற தோற்றம் உள்ளது. ஆனால் காங்கிரஸ் யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப் போகிறது என்பதை வைத்துதான் இதை முடிவுசெய்ய முடியும். தலைவர் யார் என்ற பிரச்னையில் பாஜகவிலும் குழப்பம் நிலவுகிறது.
தலித் வாக்குவங்கியை தக்கவைக்க மாயாவதி சமாஜிக் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தியது இரண்டாவது முக்கிய அம்சமாகும். ஆனால் தலித்துகளின் நல்வாழ்வுக்காக பெரிதாக எதையும் அவர் செய்யவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் அம்பேத்கர், புத்தரையெல்லாம் தாண்டி பரிவர்த்தனின் முகமாக கான்ஷிராம் மாறியுள்ளார். கான்ஷிராம் சாமார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாயாவதியுடன் சாமார்கள் பொருளாதாரப் பயன் பெறாவிட்டாலும் நீடித்து நிற்பார்கள். மற்ற தலித்துகளிடம் கொஞ்சம் அதிருப்தியும் உருவாகியுள்ளது.
சாமார் அல்லாத தலித் சாதியினரும் அதிகமாக மாயாவதியிடமிருந்து விலகிச் செல்லவில்லை. ஏனெனில் மாயாவதியின் கலாசார சுயமரியாதைப் பரப்புத் திட்டங்கள் தான் காரணம். ஊடகங்கள் மாயாவதியை சுயநல, ஊழல் பெண்மணியாக, தனது சிலைகளை தானே நிறுவுபவராக, மாலைகள் என்ற பெயரில் பகிரங்கமாக பணத்தைப் பெறுபவராக, வெளிப்படுத்த நினைக்கின்றன. ஆனால் தலித்துகளோ மாயாவதியை தலித் வரலாற்றை நிர்மாணம் செய்பவராகப் பார்க்கிறார்கள்.
உயர்சாதி அறிவுஜீவிகள் காசி, மதுரா, அயோத்யா போன்ற வரலாற்றுத் தலங்களை பெருமையாகக் கருதுகிறார்கள். ஆனால் இவை அப்போது கட்டப்படும்போது நிறைய பொதுமக்கள் வறுமையில் வாடி செத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தற்போது தலித்துகளின் தலைவி செய்யும் செயல்கள் வருங்காலத்தில் பெருமைமிக்க வரலாறாக இருக்கப் போவதில்லை என்று கூறினால், அதை தலித்துகள் ஏற்கப்போவதில்லை. இந்துமரபில் மாயாவதியின் சிலை தலித்துகளின் சொந்த வழிபாடாக உருவாக மாறலாம். ஒருவேளை பௌத்த பெண் அடையாளமாகவோ, அம்பேத்கர் சிலைகளைப் போன்றோ மாறலாம். இந்த தேசம் தாஜ்மகாலால் பெருமை அடைய முடியாது. ஏனெனில் மக்கள் பசியில் இறந்துகொண்டிருக்கும் போது அது கட்டப்பட்டது. அதேபோல தலித் பகுஜன் வரலாற்று ஸ்தலங்களை உருவாக்கும் மாயாவதியையும் இந்த நாடு கண்டிக்கவே முடியாது.
இதற்கு நேர்மாறாக முலாயம் சிங்கோ, தனது ஆதரவுத் தளமான பிற்படுத்தப்பட்டவர்களின் அடையாளத்திற்கோ சுயமரியாதைக்கோ ஒரு துளிகூட தன் உழைப்பைத் தரவில்லை. அவர் மாயாவதி போன்றோ, கான்ஷிராம் போன்றோ வரலாற்று அடையாளமாக ஒரு நாளும் உருவாகமுடியாது. இருவருமே இந்து வேர்களை எதிர்த்து வந்தவர்கள். மாயாவதி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வரலாற்று ஸ்தலங்களை பிராமணர்களின் வேர்களை துண்டித்தே உருவாக்கியுள்ளார்.
உணவுக்கான பசியைவிட கலாசார வரலாற்றுக்கான பசிதான் தலித்துக்கு வலுவானது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி மீண்டும் ஆட்சிக்கு வருவதே அம்மாநிலத்துக்கு நல்லதாக இருக்கும்.
நன்றி : தி சண்டே இந்தியன்
0 comments:
Post a Comment