Wednesday, August 3, 2011

இரட்டைக் குடியிருப்பு, இரட்டை சலூன், இரட்டை டம்பளர், இரட்டைப் பேருந்து.

கோவை மாவட்டத்தின் மேற்கு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், வயல்வெளிகள் நிறைந்த கிராமங்களில் ஒன்றுதான் தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெம்பனூர் கிராமம். இக்கிராமத்தில் 500 ஒக்கலிகர் குடும்பங்களும், 10 போயர் குடும்பங்களும், 350 அருந்ததியர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். பெரும்பாலான ஒக்கலிகர் குடும்பங்கள் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். 3 குடும்பங்கள் தவிர அருந்ததியர்கள் யாருக்கும் நிலம் இல்லை.

கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்ட அரசுப் பேருந்து 64 டி. அப்பேருந்து கெம்பனூர் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் கெம்பனூர் எல்லைக்கு 200 மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்குள்ளேயே நின்று விடும். கிராமத்தின் எல்லையில் சேரியில் இருப்பவர்கள் 200 மீட்டர் நடந்து சென்று பேருந்தில் ஏறி நகரத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு இக்கிராமத்தை உள்ளடக்கிய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, எட்டு கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியை சேர்ந்த தமிழக அமைச்சர்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவிப்பதற்காக கெம்பனூர் வந்தார். கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்டிருக்கும் அரசுப் பேருந்து 64 டி எல்லை வரைக்கும் வராமல், ஊருக்குள்ளேயே நின்று விடுவதைக் கூறி பேருந்தை முறையாக இயக்க வேண்டுமென சேரிமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அமைச்சரும் பின்விளைவுகள் ஏதும் அறியாமல் உடனே அதிகாரிகளை அழைத்து, பேருந்துகளை முறையாக இயக்குமாறு உத்தரவிட்டு சென்று விட்டார். பேருந்து சரியாக மூன்று முறை கிராம எல்லையான சேரி வரைக்கும் சென்று திரும்பியது.

பேருந்து சேரி வரை சென்று திரும்பியதால் தலித்துகளுக்கு இம்முறை உட்கார்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. ஊர் பேருந்து நிறுத்தத்தில் ஏறியவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தலித்துகள் உட்கார்ந்து கொண்டும், சாதிஇந்துக்கள் நின்று கொண்டும் பயணிக்க பொறுக்குமா சாதிவெறியர்களுக்கு? நான்காவது முறையாக பேருந்து வரும்போது, கடல் கடந்தும் வாழ்கின்ற தமிழர்களின் உரிமைக் குரலான ம.தி.மு.க.வின் மாவட்ட துணைச் செயலரும், ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் மாநில இளைஞர் அணி செயலருமான கதிரவன் தலைமையில் ஊர்மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் செய்ததோடு, இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் போகக் கூடாது என்றும் மிரட்டினர்.

அதிகாரிகள் வழக்கம் போல் தலையிட்டு, இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் செல்லாது என உத்தரவாதம் தந்து அவ்வாறே நடைமுறைப்படுத்தினர். அடுத்த நாள் அனைத்து பத்திரிகைகளும் சாதி பிரச்சனைகளை எல்லாம் மூடி மறைத்து, ஏதோ இரண்டு வெவ்வேறான ஊர்களுக்கு இடையில் நடந்த பிரச்சனை போல செய்தி வெளியிட்டன.

அமைச்சர் கொடுத்த உத்தரவு ஒரே நாளில் காற்றில் பறக்க விடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த தலித்துகள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, அமைச்சர் கொடுத்த உத்தரவை நிறைவேற்றக் கோரி முறையிட்டனர். சேரி மக்களின் போராட்டத்திற்குப் பிறகு, வழக்கம் போல நடந்து முடிந்த அநீதிக்கு தண்டனை என்பதையெல்லாம் மறந்து, இனிமேல் பிரச்சனை வராமல் இருக்க அமைதிக் கூட்டத்தை நடத்தி, உலகளாவிய கண்டுபிடிப்பாக ஒரு சமரச முயற்சிக்கு கொண்டு வந்தனர். அதுதான் "இரட்டைப் பேருந்து'.

ஒரே வழித்தட எண் (64 டி) கொண்ட அரசுப் பேருந்து 6 முறை சேரிக்கும், மீதமுள்ள முறை ஊருக்குள்ளும் வரும் என அதிமேதாவித்தனமான முடிவுக்கு காவல் துறை – இரு தரப்பினரையும் ஒப்புக் கொள்ள வைத்து, அவ்வாறாக ஒப்புக் கொண்ட பின்னரும் கூட காவல் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட முடிவை காற்றில் பறக்க விட்டு, ஒரே ஒரு முறை மட்டும் அரசுப் பேருந்து சேரிக்குள் வந்து செல்கிறது. சேரி மக்கள் பயன்படுத்தும் அப்பேருந்தை பெரும்பாலும் ஊர் மக்கள் பயன்படுத்துவது இல்லை. ஆக, தலித்துகளுக்கு ஒரு பேருந்து; ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஒரு பேருந்து என கெம்பனூர் தன் சாதி வெறியை மெய்ப்பித்திருக்கிறது. 


தகவல் மற்றும் நன்றிகள் : நீலவேந்தன், தலித் முரசு மற்றும் கீற்று இணையதளம்.

0 comments:

Post a Comment