Friday, August 12, 2011

பணம் என்னும் பேய் பிடித்து..........


திருப்பூரின் நிலத்தடி நீரையும், விவசாயத்தையும் பாழ்படுத்திவிட்ட சாயப்பட்டறைகள் இப்போது சத்தியமங்கலம் வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன. இதனால் ஒட்டுமொத்த வனப்பகுதிகளும் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் சாய கழிவுகளை அப்படியே நொய்யல் ஆற்றில் கலந்துவிடுவதால், ஆற்று நீர் மாசு படிந்து கெட்டுப் போய்விட்டது.இந்த பிரச்சனை விவசாயிகள் தரப்பில் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாய கழிவுகளால், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீரும், விவசாயமும் அழிந்து போனதும் கண்கூடு.


சொந்த ஊரில் கிளம்பியிருக்கும் எதிர்ப்பால் நிலைக்குலைந்து போயிருக்கும் திருப்பூர் பனியன் தொழில் நிறுவனங்கள், சாயப்பட்டறைகளை சத்தமில்லாமல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டன. அப்படி இந்த வனப்பகுதியில் நிறுவப்பட்ட இரண்டு சாயப்பட்டறைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, விவசாயிகளால் அழிக்கப்பட்டது.

இதுப்பற்றி தமிழக விவசாய சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு, "சத்தியமங்கலம் வனப்பகுதியான தாளவாடி மலை திகினாரை கிராமத்தில் மலைவாழ் மக்களின் விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடிரென்று தற்காலிமாக ஒரு கட்டடம் அமைக்கப்பட்டது. அந்த கட்டடதில் திருப்பூரில் கொண்டுவரப்பட்ட துணிகளுக்கு சாயமிடும் இயந்திரத்தை வைத்து, சாயப்பட்டறையை உருவாக்கியுள்ளனர்.

தினந்தோறும் திருப்பூரிலிருந்து பனியன் துணிகளை மினி டெம்போக்களில் ஏற்றிக் கொண்டு வந்து, இந்த சாயப்பட்டறையில் சாயம் ஏற்றி, மீண்டும் அந்த துணிகள் திருப்பூருக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியாகும் சாயகழிவுகள் அப்படியே நிலத்தில் நேரடியாக விடப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக இது நடந்து வந்துள்ளது.


இந்த விவரம் அப்பகுதி விவசாயிகளுக்கும், பவானிசாகர் எம்.எல்.ஏ. சுந்தரத்துக்கும் தெரிய வந்தது. உடனே அனைவரும் அந்த சாயப்பட்டறையை இடித்துத் தள்ளினர். மலைப்பகுதியில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால், அவர்களை அணுகும் திருப்பூர் தொழில் அதிபர்கள், 'உங்கள் நிலத்தில் ஒரு பகுதியை வாடகைக்குத் தாருங்கள். எத்தனை லட்சம் வேண்டுமானாலும் தருகிறோம். உங்கள் கிணற்று நீரைத் தாருங்கள். அதற்கும் பணம் தருகிறோம்' என்று ஆசை வார்த்தை கூறி மலைவாழ் மக்களை மயக்கியுள்ளனர்.


வனப்பகுதியில் பெரிய வருமானம் இல்லாத வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள அந்த மக்களும் எதிர்கால ஆபத்துகளை உணராமல் தங்கள் விவசாய நிலங்களை சாயப்பட்டறைகளுக்கு வாடகைக்குத் தந்து விடுகின்றனர்.சத்தியமங்கலம் வனப்பகுதியின் அடிவாரத்தில் பெரியகுளம் கிராமத்திலும் கடந்த வாரம் ஒரு சாயப்பட்டறை திடீரென்று முளைத்தது. சுற்றிலும் ஒலைக் கீற்றுகளால் மறைக்கப்பட்டு, அங்கே சாயமிடும் இயந்திரம் வைக்கப்பட்டு, துணிகளுக்கு சாயமிடும் வேலை நடந்து வந்து உள்ளது. இதிலிருந்து வெளியாகும் கழிவு நீரை அப்படியே விளை நிலத்தில் குழிப்பறித்து வெளியேற்றியுள்ளனர். அதுவும் விவசாயிகளின் கவனத்திற்க்கு வந்து இடித்து தள்ளப்பட்டது. பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள வனப்பகுதியில் மூலைமுடுக்குகளில் இருக்கும் கிராமங்களில் பல சாயப்பட்டறைகள் இயங்கி வருவது தெரிய வருகிறது.


சத்தியமங்கலம் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் வனத்துறையின் வாகன செக்போஸ்ட்கள் உள்ளன. இதையெல்லாம் தாண்டித்தான் அந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

அதோடு, கிராமத்தில், கிராம நிர்வாக அதிகாரி,பஞ்சாயத்துத் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அனைவரின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு திருப்பூர் தொழில் அதிபர்கள் வந்துதான் ஆச்சரியம். வனத்துறையின் அனுமதியில்லாமல் இது நிச்சயம் நடந்திருக்காது.


இதில் ஒரு கொடுமை என்னவென்றால், விவசாயத்துக்கு தரப்பட்ட இலவச மின்சாரத்தையும், தங்கள் சாயப்பட்டறை இயந்திரங்கள் இயங்க பயன்படுத்தியதுதான். இந்தக் கொடுமைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் காமராஜ் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வனப்பகுதியில் மாசுக்கட்டுபாட்டு அதிகாரிகளை அனுப்பி அவற்றை கண்டுபிடித்து, அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் உறுதியதியளித்துள்ளார்" என்றார்.


சத்தியமங்கலம் வனப்பகுதியில் 'சுடர்' தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் நடராஜ், "ஈரோடு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், மூன்றில் ஒரு பகுதி வனப்பகுதிதான். சத்தியமங்கலம் வனப்பகுதியில் அரியவகை மான்கள், சிறுத்தை புலிகள், யானைகள் என பல விலங்கினங்கள் இருக்கின்றன. இந்த வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால்தான் அண்மையில் மத்திய அரசு இதை புலிகள் சரணாலாயமாக அறிவித்துள்ளது.

இங்குள்ள விலங்கினங்கள் தண்ணீர் குடிக்க வரும் குட்டைகளில் சாயக் கழிவுகள் கலந்தால் விலங்கினங்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும். ஏற்கனவே, மலைவாழ் மக்கள் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் இங்கே வாழ்க்கை நடத்தி வருகின்ற்னர். அவர்களின் வாழ்வதாரத்திற்க்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.


இந்நிலையில், மலைவாழ் மக்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு திருப்பூர் சாயப்பட்டறை அதிபர்கள் ஒட்டுமொத்த வனப்பகுதியை அழிக்க நினைக்கின்றனர். இந்த மலைப்பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான சிற்றோடைகள்தான் இங்குள்ள பவானிசாகர் அணைக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. பவானி நதி நீர் பாசனத்தை நம்பிதான் இந்த மாவட்டமே உள்ளது.

நொய்யலைப் பாழாக்கிய சாயப்பட்டறைகள், இப்போது பவானி நதியையும், பாழாக்க துடிப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்து வனப்பகுதியைக் காப்பற்றவேண்டும் என்பதே எங்களை போன்ற சமூக,சுற்றுசூழல் ஆர்வலர்களின் கோரிக்கை" என்று கோபமாகச் சொன்னர் நடராஜ்.


வனவிலங்குகள், வனத்தை,ஆற்றை என இயற்கையை ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் மனிதர்களும் வாழ முடியாது என்பதுதான் யதார்த்தம். புரிய வேண்டியவர்களுக்கு புரியுமா ?


தகவல் : குமுதம் ரிப்போர்ட்டர்

0 comments:

Post a Comment