Friday, August 26, 2011

காலத்தின் மதிப்பு !


பிக்காஸோ புகழ்பெற்ற ஒரு ஒவியர். இன்றும் அவரது ஒவியங்கள் பல கோடி ரூபாய் விலைக்கு விற்கிறது. ஒரு முறை அவர் பூங்கா ஒன்றில் தனிமையில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அவரை அடையாளம் கண்டு கொண்டாள். அவரிடம் வந்து, " நீங்கள் பிக்காஸோதானே ?" என்று சந்தேகத்துடன் கேட்டாள். பிக்காஸோவும் சிரித்துக் கொண்டே "ஆமாம்" என்றார்.

உடனே அந்த பெண் " நீங்கள் பெரிய ஒவியர் என்று கேள்விப்பட்டிருக்கிருக்கிறேன். என்னை உங்களால் வரைய முடியுமா ?" என்று கேட்டாள். இது போன்ற கோரிக்கை பிக்காஸோவுக்கு வந்ததில்லை. அந்தப் பெண்ணின் ஆர்வத்தை அவர் மறுக்க விரும்பவில்லை. உடனே ஒரு காகிதத்தை எடுத்து அந்தப் பெண்ணின் முகத்தை வரைந்து கொடுத்துவிட்டார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் முப்பது வினாடிகள்.

பெண்ணுக்கு ஆச்சரியம் ! "ரொம்ப அழகாக வரைந்துள்ளீர்கள்!" என்று மகிழ்ச்சியடைந்தார்.

" இந்த ஒவியத்தை நீ விற்றால் பல லட்சம் டாலர் கிடைக்கும்" என்று அவளிடம் சொன்னார் பிக்காஸோ. இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு இன்னும் ஆச்சரியம்.

"என்னது பல லட்சம் டாலரா ? படம் வரைய முப்பது வினாடிகள்தானே ஆயிற்று ?"

உடனே, பிக்காஸோ சிரித்துக் கொண்டே, "ஆமாம், ஆனால் இந்த நிலையை அடைய எனக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று" என்றார்.


தகவல் : குமுதம் வார இதழ்.

0 comments:

Post a Comment