Monday, August 22, 2011

யானைகளுக்கும், மனிதர்களுக்குமான புரிதல்கள்....



கர்நாடகத்தில் வனப்பகுதி அருகே அமைந்துள்ள வரலாற்று நகரம் மைசூர். இங்கு காட்டு யானைகளுக்கு பஞ்சம் இல்லை. கடந்த ஜீன் மாதம் 8-ந்தேதி மைசூர் நகரில் திடீரென்று 4 காட்டு யானைகள் புகுந்தன. அதிகாலை 5 மணியளவில் மைசூர்-பெங்களூர் சாலையில் சர்வசாஹ்டாரணமாக உலா வந்த இந்த யானைகளால் பொதுமக்கள் நிம்மதி இழந்து அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.

அந்த யானைகளில் ஒன்று ஏ.டி.எம்.காவலாளி ஒருவரை மிதித்து கொன்றது. இதனால் மக்களின் பீதி மேலும் அதிகரித்தது. யானைகளால் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியை நினைத்து மைசூர் மக்கள் இன்று நடுங்குவது உண்டு.

இந்த நிலையில் மைசூரில் நேற்று 2 யானைகள் மதம் பிடித்ததை போல இங்கும் அங்கும் ஒடி மக்களை மீண்டும் பீதிக்கு உள்ளாக்கியது. இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மைசூர் சாமுண்டிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுத்தூர் மடம். இந்த மடத்தில் "மாஸ்தி" என்ற 22 வயது ஆண் யானையும், "லட்சுமி" என்ற 12 வயது பெண் யானையையும் பராமரித்து வருகின்றனர். தினந்தோறும் இந்த இரண்டு யானைகளையும் அதன் பாகன்கள் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். நேற்று காலையில் வழக்கம் போல 2 யானைகளையும் நடைபயிற்சிக்காக அதன் பாகன்கள் அழைத்துச் சென்றனர்.

நஞ்சன்கூடு சாலை வழியாக நடைபயிற்சி சென்ற அந்த யானைகள் மீண்டும் நஞ்சுமளிகே சாலை வழியாக மடத்தை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தன. " மாஸ்தி" யானை முன்னால் நடந்து செல்ல, அதை பிந்தொடர்ந்து "லட்சுமி" சென்று கொண்டிருந்தது. சாமுண்டிபுரத்தில் உள்ள சர்க்கிள் அருகே யானைகளை அதன் பாகன்கள் அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது இந்த யானைகளுக்கு பின்புறத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் ஒன்று ஒலி எழுப்பியபடி வந்தது.

அந்த சத்தத்தை கேட்டு "மாஸ்தி" ஆண் யானை மதம் பிடித்தது போல மிரண்டு ஒட்டம் பிடித்தது. யானை மீது அதன் பாகனும் அமர்ந்து இருந்தார். "மாஸ்தி" யானை ஒடுவதை கண்டு "லட்சுமி" யானையும் ஒடியது. 2 யானைகளும் சாலையை விட்டு திசை மாறி தெரு தெருவாக ஒடத் தொடங்கியது. இதனால் மிரண்டு போன பொது மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஒடினர். சிலர் தங்கள் வீட்டுக்குள் கதவை பூட்டிக் கொண்டனர். ஒரு வழியாக லட்சுமி யானையை அதன் பாகன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். ஆனால் "மாஸ்தி" யானை மட்டும் கட்டுக்குள் அடங்காமல் தொடர்ந்து ஒட்டம் எடுத்தது.

எனவே "மாஸ்தி" யானைக்கு மதம் பிடித்து இருக்கலாம் என்று கருதிய பாகன்கள் அதனுடன் "லட்சுமி" யானையை சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி லட்சுமி யானையை அருகில் அழைத்துச் சென்றனர். ஆனால், அதை கண்டு கொள்ளாத " மாஸ்தி" தனது தந்தத்தால் "லட்சுமி"யை குத்தி விரட்டி அடித்தது. இதனால் லட்சுமி யானையும் அங்கிருந்து ஒட்டம் பிடித்தது. லட்சுமியின் பாகனையும் மாஸ்தி யானை தந்தத்தால் குத்த முயன்றது. இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டது.

யானையின் மீது அமர்ந்து இருந்த பாகன் "மாஸ்தி"யை அடக்க முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து ஒடிய "மாஸ்தி", அருகில் இருந்த மரத்தில் தலை மற்றும் முதுகுபுறத்தால் உரசியபடி இங்கும் அங்கும் வேகமாக அசைந்தது. இதனால் பயந்து போன பாகன் யானை மீது இருந்தே அந்த மரத்தில் தாவி அமர்ந்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த யானை, அந்த மரத்தை அசைக்கத் தொடங்கியது. மரத்தின் மீதிருந்த பாகனை நோக்கி துதிக்கையை தூக்கிய வண்ணம் நின்று கொண்டே இருந்தது.

இதற்கிடையே இதுபற்றிய தகவல் மைசூர் நகரில் காட்டுத் தீப்போல பரவியது. ஏராளமான மொதுமக்கள் அங்கு திரண்டனர். உயிரை கையில் பிடித்தபடி இந்த பரபரப்பான காட்சியை பார்த்த பொதுமக்கள் அலறி அடிது ஒட்டம் பிடித்தனர். யானையை அடக்குவதற்கு பாகன் எவ்வளவோ சிரமப்பட்டார். ஆனால், அவரது பேச்சுக்கு யானை கட்டுப்படவில்லை. தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டது.

இந்நிலையில் மைசூர் தசரா யானைகள் நேற்று காலையில் நடைபயிற்சி முடிந்து அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்தது. உடனடியாக இதுப்பற்றி தகவல் தசரா யானை பாகன்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி கஜேந்திரா உள்ளிட்ட 6 தசரா யானைகளும் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டன. அட்டகாசம் செய்து கொண்டிருந்த மாஸ்தி என்கிற ஆண் யானை, தசரா யானைகளின் கூட்டத்தை கண்டதும் அமைதி அடைந்தது. இதைத் தொடர்ந்து பாகன்கள் மாஸ்தி யானையின் காலில் சங்கிலியை கொண்டு கட்டினர். பின்னர் லட்சுமி மற்றும் மாஸ்தியை மடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதற்கு தேவையான உணவுகளை பாகன்கள் வழங்கினார்கள். இதனால் மாஸ்தி இயல்பு நிலைக்கு திரும்பியது.

வளர்ப்பு யானை என்பதால் மாஸ்தியால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அட்டகாசம் செய்த ஒரு சில மணி நேரத்தில் அதை பாகன்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதுவே காட்டு யானை என்றால் அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வர கடுமையான போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்.

இது போன்ற செய்திகள் குறித்து சுற்றுபுற சூழல் ஆர்வலர் பா.சதீஸ் முத்து கோபால் கருத்து தெரிவிக்கையில் :-

ஒரு நாள் யானை ஊருக்குள் புகுந்து செய்த நாசங்களை இவ்வளவு தெளிவாக காட்டும் ஊடகங்கள், மனிதர்கள் காட்டிற்குள் சென்று செய்யும் அக்கிரமங்களை காட்டியதில்லை.

மாடுகளின் மேய்ச்சலுக்காக வனங்கள் தீ வைக்கப்படுகின்றன. அவை கட்டுக்கடங்காது பரவி பல சமயங்களில் ஏராளமான வனப் பகுதிகள் தீக்கிரையாகின்றன.

வனப் பகுதிகளில் சாலைகள் போடப்படுகின்றன.

வனப் பகுதிகளில் ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. அவற்றால் பல யானைகள் உயிரிழந்தன.

வாகனங்கள் பயன்படுத்தும் அதிக டெசிபல் ஒலிப்பான்களால் வன விலங்குகள் அச்சமடைந்து வேறு பகுதிக்குள் நுழைகின்றன.

ஞெகிழிக் கழிவுகள் வனங்களில் போடப்பட்டு, அவற்றை உண்டு ஏராளமான உயிர்கள் மடிகின்றன.

வெட்டப்படும் மரங்களால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இன்று வனங்களில் விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கூட இல்லாத சூழல் நிலவுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுகின்றன.

இவை எல்லாவற்றையும் என்றைக்காவது, தொடர்ந்து ஆறு மணி நேரம் எந்த ஊடகமாவது செய்தி ஒளிபரப்பியதுண்டா? எல்லா தீமைகளையும் செய்யும் மனிதர்கள் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஒரு நாள் யானை ஊருக்குள் வந்தால் தாம் தூம் என குதிக்கின்றன ஊடகங்கள்.


இயற்கை வன உயிர் ஆய்வாளர்கள் ச.முகமது அலி மற்றும் யோகனந்த் அவர்களின் புத்தகமான அழியும் பேருயிர் : யானைகள் நூல் குறித்து சதீஸ் முத்து கோபால் விமர்சனம் இதோ : -

"அழியும் பேருயிர் : யானைகள்" என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் இந்தயாவில் லட்சக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

ஆப்ரிக்க யானைகளும் லட்சகணக்கில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இன்று யானைகள் அழிந்து வருவதற்கு நம் மக்களின் மூட நம்பிக்கையும், இயற்கையைப் பற்றிய புரிதல் இல்லாததுமே எனச் சாடுகிறார் ஆசிரியர். இன்றைய சூழ்நிலையில் கூட, ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் யானைகளை ஒரு கொடூர விலங்காக சித்தரிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்.

"மனிதர் அன்போடு வளர்ப்பதாகக் கூறப்படும் யானைகள் வண்டி இழுத்தன, கடும் வெயிலில் ஏர் உழுதன, மூட்டை சுமந்தன, கல்லையும், கட்டைகளையும் இழுக்கின்றன. வழிபாட்டுத்தலங்களில் வெந்ததைத் தின்று விதி வந்து சாகும்வரை வதைபட்டு பெருமை காட்டுகின்றன. சர்க்கஸ் செய்கின்றன, தன் சகோதரனுடன் சண்டையிட வைக்கப்பட்டன. மன்னர்கள் என்ற மமதை கொண்ட குண்டர்களைத் தூக்கிச் சுமந்தன, பிச்சை எடுக்கின்றன, அடிமையாக சந்தைகளில் விற்பனைக்குள்ளாகின்றன, கெட்டவார்த்தைகளால் திட்டு வாங்குகின்றன, அடி உதைகளால் ரத்தம் சிந்தி அழுகின்றன.

வேண்டிய நீரும், உணவும், நிழலும் கிடைக்காமல் துடிக்கின்றன, அழுக்கடைந்த, கூச்சல் மிகுந்த வீதிகளில் அலைக்கழிக்கப்படுகின்றன, தனிமையில் தவிக்கின்றன, மொட்டை வெயில், புகைதூசிகளால் மன உளைச்சலடைகின்றன, இயற்கையான சத்துள்ள ஆகாரமின்றி நோயால் கஷ்டப்படுகின்றன, தன் வாழ்விடத்தை தானே அழிக்கவும், தன் இனத்தை தானே பிடிக்கவும் உள்ளாக்கப்படுகின்றன. “இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’’ என கொல்லப்பட்டு தனது தந்தத்திலேயே செய்த தன் உருவத்தைச் சுமக்கும் கொடுமைக்கு ஆளாகின்றன. ஆனால் இவ்வளவையும் பரிதாபத்திற்குரிய யானைகள் மகிழ்ச்சியோடு செய்வதாகவே நினைக்கிறது `ஆறறிவு கொண்ட’ மாந்தரினம்" என்ற இவருடைய எழுத்துக்கள், யானைகள் மீது ஆசிரியர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும், நம் சமூகத்தின் மீதான கோபத்தையும் பிரதிபலிக்கிறது.


யானைகள் அக ஒலி மூலம் பேசிக் கொள்கின்றன என்ற செய்திகள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ஐந்து கி.மீ தொலைவிலுள்ள யானைகள் அக ஒலி மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன எனும் செய்தி வியப்பை அளிக்கிறது. இதில் மேலும் ஒரு ஆச்சர்யம் அந்த ஒலி மனிதர்களால் உணர முடியாத அளவுக்கு மிக நுட்பமாக இருப்பதுதான்.

மேலும் ஆப்ரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் அவற்றின் வாழிடப் பரவலையும் எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆசிய யானைகளின் தும்பிக்கை ஒரு விரல் நுனியையும் ஆப்ரிக்க யானைகளின் தும்பிக்கை இரண்டு விரல் நுனியையும் கொண்டிருப்பது போன்ற செய்திகள், யானைகளை எளிதில் வேறுபடுத்தி புரிந்து கொள்ள உதவுகிறது.


பள்ளிபருவத்திலேயே எல்லோரும் இந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென விரும்புகிறேன்...



இது போன்ற சம்பவங்களை நினைக்கும் போது இக்கவிதை நம்மை சுடுகிறது.


யானை பற்றிய சில கேள்விகள்


யானை எத்தனை பெரியது என்றாய் ?
பார்த்ததும்
எத்தகைய பெரியவர்களையும்
சிறு குழந்தைகளாக்கிவிடும்
அத்தகைய பெரியது என்றேன்

யானையின் தும்பிக்கை பார்த்த பின்பு
ஆல மரத்துக்கு மட்டும் ஏன்
இத்தனை தும்பிக்கைகள் என்றாய்

அப்போதுதான் யோசித்தேன்
யானையின் தும்பிக்கை
அதற்கு வேரா, விழுதா என்று

திருவிழா பார்க்க ஊர் சென்றவர்கள்
யானையை வியந்தபடியே செல்கிறார்கள்
தேர் பார்க்க சென்றதை மறந்து

பெரிய கோயிலில்
எந்த சாமி பிடித்தது என்றேன்
யானை சாமி என்றாய்

ஏன் என்றேன்
யானைதானே ஆசிர்வாதம் தந்தது என்கிறாய்

யானை எப்போது வீட்டுக்குப் போகும் என்றாய்
யானைக்கு வீடு இல்லை என்றேன்
ஏன், வீட்டைத் தொலைத்துவிட்டதா
என்கிறாய்

இல்லை
நாம்தான்
அதன் காட்டைத் தொலைத்துவிட்டோம்
என்றேன் !

- இரமேசு கருப்பையா.


தகவல்: மைசூர் சம்பவம் குறித்தான செய்திகள் தினத்தந்தி(23.08.11.)
நன்றி : யானைகள் குறித்த தகவல்களுக்கு http://ivansatheesh.blogspot.com

நன்றி : ஓவியர் சிவபாலன்

0 comments:

Post a Comment