Monday, August 22, 2011

பேராசிரியர் கல்யாணி (பிரபா.கல்விமணி)

"காக்கா கூட்டத்தைப் பாருங்க. அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க ?" என்னும் எளிமையான பாடலைத் தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் பெரிய பலகையில் எழுதி வைக்கலாம். பகுத்தறிவு இல்லாத காக்கைகள் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்கத் தெரிந்து வைத்திருக்கின்றன. ஆனால், நாம் ஒவ்வொரு பிரச்சனை பற்றியும் தனித்தனியாகப் புலம்ப மட்டுமே பழகியிருக்கிறோம். 'தனி மரம் தோப்பாகாது!" என்கிற பழமொழியின் அர்த்ததை நாம் உணர்ந்துவிட்டால் போதும்.... தெருவிளக்கு எரியவில்லை என்கிற ஒரு தெருவின் பிரச்சனை தொடங்கி, காவிரிக்குத் தண்ணீர் வரவில்லை என்கிற ஒரு மாநிலத்தின் பிரச்சனை வரை எல்லோருமே தீர்ந்துவிடும் !

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' தோன்றியதாகப் பெருமைப்பட்டு கொள்ளும் தமிழனத்துக்கு ஒன்று சேர்ந்து போராடுகிற பக்குவம் மட்டும் வரவே இல்லை.

" மக்களே ஆயுதம் ! மக்களே கேடயம்!

ஒரணியில் திரண்டு, கடந்த காலத்தில்

சூழ்ச்சிகள் பலவற்றை முறியடித்தோம்.

சாதனைகள் பல படைத்தோம்..."

என்கிற பாடல் திண்டிவனம் பகுதியில் உள்ள எல்லாக் கடைகளிலும்,வீடுகளிலும் துண்டுப் பிரசுரமாக இருக்கும்.

விழுப்புரம் மாவட்டத்தின் பெரிய நகரங்களில் திண்டிவனமும் ஒன்று. 1986-ஆம் ஆண்டு வரை அங்கே அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி இல்லை. 'பெண்கள் நாட்டின் கண்கள்' என்று அரசு விளம்பரங்கள் வெளியிட்டால் மட்டும் போதாது. பெண் குழந்தைகள் படிக்க பள்ளி வேண்டும் என்கிற கோரிக்கையுடன் திண்டிவனத்தில் உள்ள அனைத்து தரப்பு இயக்கங்களும் ஒன்று சேர்ந்து போராடினோம்.சீருடை முதல் நோட்டுப் புத்தகங்கள் வரை குத்தகை விட்டு, ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்த தனியார் பள்ளிகளின் முதலாளிகள், அரசு பள்ளி வருவதை எல்லா வகையிலும் தடுக்கப் பார்த்தார்கள். அதிகார மட்டம், அரசியல் வட்டம் என எல்லாத் தரப்பையும் சரிக்கட்டிக் கொடிக்கட்டிப் பறந்தவர்களை எதிர்க்க "நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு" என்கிற ஒர் அமைப்பைத் தொடங்கினோம். அதில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பெண் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பும் இடம் பெற்றனர்.

'நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்க யாரோ சிலர் தடையாக இருப்பதா ?" என தெருமுனைக் கூட்டங்கள் போட்டு பேசினோம். ஆளுங்கட்சியைத் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் ஒன்றினைந்து பணம் படைத்த, பலம் படைத்தவர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினோம். ஒன்றிணைந்த மக்கள் சக்திக்கு முன் அரசும், அதன் அதிகாரங்களும் பணிந்தன. இன்று திண்டிவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல ஆயிரம் பெண்கள் படித்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

ஒரு பள்ளிக்காக ஒரே முறை ஒன்று திரண்ட மக்களின் சக்தி, பிறகு ஒவ்வொரு பிரச்சனைக்காகவும் போராட ஆரம்பித்தது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் நன்கொடை என்கிற பெயரில் பகல் கொள்ளை அடிப்பதை எதிர்த்து, 'நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு' போராடியது. அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணங்களையும்,ஒவ்வொரு தனியார் பள்ளியும் வசூலிக்கிற கட்டணங்களையும் குறிப்பிட்டு ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து வீடு வீடாகக் கொடுத்தோம்.

98 ரூபாய் கட்டணத்துக்குப் பதில் 500 ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள் என்று ஆதாரங்களுடன் சொன்னதால், எல்லாப் பள்ளிகளும் பின்வாங்கின.

தங்கள் பள்ளியில் 100% தேர்ச்சி என்று பெருமையடித்துக் கொள்வதற்காக, தன் பள்ளி மாணவர்களையே காப்பி அடிக்க வைத்த சிறுமைத்தனத்தை சில பள்ளிகள் செய்து வந்தன. அதையும் நேர்மையோடும், நெஞ்சுறுதியோடும் கண்டித்தது, நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு.

அது பெரிய விவகாரமாகி, தேர்வு அதிகாரி நியமிக்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு நடந்த தேர்வில் அந்த பள்ளிகளில் 50% அளவுகூட தேர்ச்சி இல்லை. ஒவ்வொரு பள்ளியின் கல்விதரமும் வெட்ட வெளிச்சமாகியது. அவர்களைவிட அரசு பள்ளி நல்ல தேர்ச்சி விகதம் காட்டியது.

இப்படிக் கல்வியில் தொடங்கி அடிப்படை விசயங்கள் ஒவ்வொன்றுக்காகவும் போராட ஆரம்பித்தோம். 1992-ல் திண்டிவனம் அரசுக் கல்லூரிக்குச் செல்ல, 25 லட்சம் செலவில் 3 கி.மீ. தூரத்துக்குச் சாலை போடப்பட்டது. இது 15 ஆண்டுகாலக் கோரிக்கை. ஏமாற்ற வாய்ப்பு தராமல் இருக்க, ' சாலை கண்காணிப்புக் குழு' அமைக்கப்பட்டது. அதில் மாணவப் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். 'இப்படி ஒரு குழு சாலை போடுவதைக் கண்காணிக்கிறது' என்பதை நெடுஞ்சாலைத் துறைக்குத் தெரிவித்தோம். இவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்துமே, ஊழலிலேயே ஊறிப்போன ஒப்பந்தக்காரர் 60 லாரிகள் சல்லிக்கல் கொட்ட வேண்டியதற்குப் பதில் 28 லாரிகள்தான் கொட்டினார். உடனடியாகப் புகார்கள் பறக்கத் தொடங்கியதோடு, கல்லூரி மாணவர்கள் போரட்டத்தில் குதித்துப் பேரணி நடத்தினர். இதற்குப் பொதுமக்களும் ஆதரவு அளிக்க, தயாரானது தரமான சாலை.

சுகப் பிரசவம் ஆக வேண்டிய ஒரு பொண்ணுக்குப் பணத்தாசையால் சிசேரியன் செய்தது ஒரு தனியார் மருத்துவமனை. அதில் அந்த பெண் இறந்து போனார். சுகப் பிரசவம் என்றால் 5 ஆயிரம் ரூபாய்தான் கட்டணம். சிசேரியன் என்றால், குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் கட்டணம். உயிர் காக்கும் மருத்துவத்தின் பெயரால் மனித உயிர்களைப் பணயம் வைத்து அடிக்கப்படும் கொள்ளைக்கு எதிராகவும் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த மருத்துவமனைக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட வழக்கை காவல் நிலையத்தில் ஏற்க மறுத்தார்கள். உயர்நீதிமன்றம் வரை போராட்டம் தொடர்ந்தது. 'யாருக்கோ நடந்ததுதானே என்று ஒவ்வொரு முறையும் எல்லோரும் அமைதியாக இருக்கிறோம். இன்று யாருக்கோ நடந்தது நாளை நமக்கும் நடக்கும்' என்பதை வீதி வீதியாகச் சென்று விளக்கினோம்.தனியார் கொள்ளையார்களை மட்டும் எதிர்க்காமல், அரசின் ஊழலையும், அதிகாரத்தின் ஊழலையும் துணிச்சலுடன் ஒன்றிணைந்து எதிர்தோம்'.

நடைமுறையில் பெரும்பாலும் காவல் துறையினர் குற்றம் இழைத்தவர்களுக்குப் பாதுகாப்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியும் சட்டம் - ஒழுங்கைச் சீர் குலைக்கின்றனர்' என்று 'காவல் துறையினரால் பாதிக்கப்பட்டோர் மனித உரிமை' மாநாட்டை நடத்தினோம். போலீஸாரால் பாதிக்கப்பட்டவர்களை மக்கள் முன் தகுந்த ஆதாரங்களுடன் நிறுத்தினோம். அப்பாவிகள் மீது சித்ரவதை நடந்த காவல் நிலையம், சித்ரவதை செய்த அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டோம். உண்மையை மட்டுமே முன்வைத்துப் போராடியதால் ஒவ்வொரு முறையும் வெற்றியே கிடைத்தது. மனசாட்சிக்கு விரோதமாக யார் மிதும் புகார் சொல்லாததோடு, நேர்மையோடு நடந்துகொள்கிற அதிகாரிகளையும் வெளிபடையாக மேடை போட்டுப் பாரட்டியதில் போராட்டத்தின் அர்த்தம் முழுமை அடைந்தது.

காவல் துறையின் அத்துமீறல்களை வெளிக் கொண்டு வந்து கறைபடிந்த போலீஸ்காரர்களைச் சட்டதின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தந்ததும் எங்களின் ஒற்றுமைதான்.செஞ்சி சிறையில் நீதிமன்றக் காவலில் காவல் துறையினரால் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரி, தனி காவல் நிலையங்களில் சூறையாடப்பட்ட கல்பனா சுமதி, சிதம்பரம் பத்மினி, அத்தியூர் பழங்குடி இருளர் பெண் விஜயா எனப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, மனித உரிமை மீறலை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி அடைந்து இருக்கிறோம்.

மதவெறி நோக்கத்துடன், திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டபோது, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் எதிர்தோம். அதற்காக 'மத நல்லிணக்கக் குழு' ஒன்றை அமைத்துப் போராடினோம்.

பல்வேறு இயக்கங்களின் கூட்டுமுயற்சி, பலம் வாய்ந்த அதிகார அநீதியை வேரோடு பிடுங்கி எறிந்தது. தனித் தனிப் பிரச்சனைகள் மட்டுமின்றி தடா, பொடா போன்ற மனித உரிமைக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தபோதும், மாநில அரசு அதைப் பயன்படுத்தியபோதும், திண்டிவனம் நகரம் கூட்டக இணைந்து செயலாற்றி வெற்றியடைந்திருக்கிறது.

இத்தனை உதாரணங்களும் கற்பனையானவை அல்ல, கண் எதிரே நிகழ்ந்தவை. இந்திய வரைபடத்தில் ஒரு சின்னப் புள்ளியாக இருக்கும் மிகச் சிறிய ஒரு நகரத்தின் கூட்டு முயற்சி சாதனை இது.

ஏழைப் பிள்ளைகளுக்குப் போடுகிற சத்துணவில்கூட புழுத்த அரிசியையும், அழுகிய முட்டையும் போட்டு லாபம் தேடுகிற சுயநலாவதிகள் இருக்கிற சமூகம் இது. எனவே, எங்களின் முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையூறுகள் இல்லாமல் இல்லை.அடிக்கடி நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏறி இறங்குகிறபோது ஒரு தலைமுறைக்கு விடிவு கிடைக்கிறதே !

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !' என்பதை எங்களின் ஒன்றிணைந்த போராட்டங்களின் அனுபவம் இப்படி மாற்றிச் சொல்ல வைக்கிறது.


"'ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு! "


நூல் : தமிழ் மண்ணே வணக்கம்

0 comments:

Post a Comment