Thursday, August 4, 2011

''நான் முத்துமாரி ஆனது எப்படி?''


புழுதி பறக்கும் கரிசல் காடுதான் முத்துமாரியின் முகவரி. தயங்கி வெளிப்படும் வார்த்தைகளின் உச்சரிப்பில் இன்னமும் நகரம் பழகாத ஒரு கிராமத்துப் பெண் தெரிகிறார். வாய்ப்புகளும் வசதிகளும் அற்ற விருதுநகர் பக்கத்துக் கிராமம் சத்திரரெட்டியப்பட்டியில் பிறந்த முத்துமாரி இன்று டெபுடி கலெக்டர்!

முதல் தலைமுறையாகப் பள்ளிக்கூடம் பார்த்து, முட்டி மோதி முன்னேறி வந்திருக் கும் கரிசல் மண் பெண்!

வாய்ப்புகள் சூழ்ந்திருக்க உச்சம் தொடுவதைக் காட்டிலும்; உண்ணவும், உடுக்கவும், படிக்கவும், பயணிக்கவும் வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்தில் இருந்து வெற்றியை எட்டிப்பிடிப்பது கூடுதல் சாதனை!

''விருதுநகர்ல இருந்து மதுரை போற ரோட்லதான் எங்க ஊரு. அப்பா சிவபாக்கியத்துக்கும் அம்மா பஞ்சவர்ணத்துக்கும் விவசாயம்தான் வேலை. சொந்தமா இருக்குற கொஞ்சம் நிலத்துல மழை பெய்ஞ்சா ஏதாச்சும் விவசாயம் நடக்கும். மத்த நாளெல்லாம் கூலி வேலை. நானும் அப்பப்போ அவங்ககூட வேலைக்குப் போவேன். பள்ளிக்கூடத்துலயும் எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. 'வீட்டுல நம்மளை கஷ்டப்பட்டுப் படிக்கவைக்காங்க. ஒழுக்கமாப் படிக்கணும்.' அது மட்டும்தான் தெரியும். அதனால, டீச்சர் என்ன படிச்சுக் குடுத்தாலும் உடனே படிச்சிருவேன். பத்தாங்கிளாஸ்ல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.

கள்ளிக்குடி பள்ளிக்கூடத்துல ப்ளஸ் ஒன் சேர்ந்த பிறகுதான் இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசை வந்து வெறியோடு படிச்சேன். எப்பமும் படிப்புதான். ப்ளஸ் டூ-ல 1026 மார்க் எடுத்து பள்ளிக்கூடத்துல இரண்டாவதா வந்தேன். எங்க ஊருக்கு அதெல்லாம் பெரிய மார்க். ஆனா, ஒண்ணுத்துக்கும் பயன்படலை. இன்ஜி னீயரிங் காலேஜ்ல பேமென்ட் ஸீட்டுதான் கிடைச்சது. அதுக்கு லட்சக்கணக்குல பணம் கட்டச் சொன்னாங்க. எங்க வீட்டுல முடியலை. அதுக்காக என்ன செய்ய?

பிறகு, விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்ட்ரி சேர்ந்தேன். 'நல்லாப் படிக்கிற பிள்ளையை இப்படி ஹிஸ்ட்ரில சேர்த்துவிட்டிருக்குறதப் பாரு'ன்னு ஊரெல்லாம் எங்க அம்மா, அப்பாவைக் கேலி பண்ணாங்க. 'வரலாறு படிச்சா அரசாங்க வாத்தியார் வேலை மட்டும்தான் கிடைக்கும். இப்பல்லாம் அரசாங்கத்துல ஹிஸ்ட்ரி வாத்தியார் வேலைக்கு ஆள் எடுக்குறது இல்லை' அப்படி, இப்படின்னு ஆளாளுக்கு சொன்னாங்க. அதைக் கேட்டு எங்க வீட்டுக்கும் வருத்தம். நானும் அழுவேன். மெள்ள மெள்ளத் தேறி, 'சரி எதுவா இருந்தா என்ன? படிக்கிறதை ஒழுங்காப் படிப்போம்'னு படிக்க ஆரம்பிச்சேன். டிகிரி ரிசல்ட் வந்தப்போ பி.ஏ.ஹிஸ்ட்ரியில நான்தான் யுனிவர்சிட்டி கோல்டு மெடல்.

அடுத்தது என்ன பண்றதுன்னும் தெரியலை. அம்மா, அப்பா ரெண்டு பேருமே படிக்காததுனால விவரம் சொல்ல யாரும் இல்லை. நாங்களா உக்காந்து பேசி 'டீச்சருக்குப் படிச்சா என்னிக்கு இருந்தாலும் வேலை கிடைச்சிரும்'னு முடிவு பண்ணினோம். சேலம் சாரதா பெண்கள் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., சேர்ந்தேன். ஒரு வருஷம் ஹாஸ்டல். அரசாங்க ஸீட்டுங்கிறதால பெருசாச் செலவு இல்லை. படிச்சு முடிக்கும்போது என்கூட காலேஜ்ல படிச்ச புஷ்பராணியைப் பார்த்தேன். அவங்க மதுரையில தங்கி ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராகிட்டு இருந்தாங்க. 'நானும் ஐ.ஏ.எஸ்., எழுதணும். என்ன பண்ணணும்?'னு கேட்டதுக்கு, 'தினமும் பேப்பரைப் படி. அதுல வர்ற அறிவிப்புகளைப் பார்த்துக்கிட்டே இரு'ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் வீட்டுல தினமும் பேப்பர் போடச் சொல்லி படிக்க ஆரம்பிச்சேன்.

அப்படித்தான் ஒருநாள் 'சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை' சார்பா சென்னையில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி கொடுக்கிற தகவல் தெரிஞ்சது. அங்கே போனேன். சின்ன தேர்வுவெச்சு சேர்த்துக்கிட்டாங்க. அதுவரைக்கும் சென்னைக்கு நான் வந்ததே இல்லை. ஆனா, அந்தப் பயமே தெரியாம அத்தனை அன்போடு அக்கறையோடு கவனிச்சுக்கிட்டார் துரைசாமி சார். இந்த ரெண்டு வருஷத்துல நான் சாப்பிட்ட சாப்பாடு, துணிமணி எல்லாம் அவர் தந்ததுதான். நானெல்லாம் சென்னைக்கு வந்து படிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கும்போது அதை சரியாப் பயன்படுத்திக்கணும்னு நினைச்சேன்.

2008-ல் நான் இந்த ஐ.ஏ.எஸ்., அகாடமியில் வந்து சேர்ந்தேன். சிவில் சர்வீஸ் எழுதுறதுதான் நோக்கம். ஆனா, 2009 ஆரம்பத்தில் குரூப்-1 எக்ஸாம் வந்தப்போ, எங்க குடும்ப நிலைமையை மனசுலவெச்சு அதை எழுதலாம்னு நினைச்சேன். அகாடமியில் சொன்னப்போ, 'தாராளமா எழுதுங்க'ன்னு சொல்லி அதுக்குரிய புத்தகங்கள் எல்லாம் வாங்கித் தந்தாங்க. ராத்திரி பகலா எனக்குப் படிக்கிறதுக்கு எல்லாரும் உதவி பண்ணாங்க. ஆரம்பக் கட்டத் தேர்வு, பிறகு எழுத்துத் தேர்வு, அப்புறம் நேர்முகத் தேர்வு எல்லாம் வரிசையா முடிஞ்சு போன மாசம்தான் தேர்வு முடிவு வந்துச்சு. முதல் முயற்சியிலேயே குரூப் -1 தேர்வுல ஜெயிச்சுட்டேன். இப்போ நான் டெபுடி கலெக்டர்!'' என்கிறார் முத்துமாரி கம்பீரமாக.

''இனி என் நோக்கம் ஐ.ஏ.எஸ்-தான். தொடர்ந்து சிவில் சர்வீஸ் எழுதுவேன். சத்திரரெட்டியப்பட்டியின் முதல் ஐ.ஏ.எஸ்., நானாக இருப்பேன்!''

வாழ்த்துக்கள் முத்துமாரி!

*
மூலம் : ஆனந்த விகடன்

நன்றிகள் : நிருபர் பாரதி தம்பி படம்: வீ.நாகமணி

0 comments:

Post a Comment