முன் எப்போதையும்விட உச்சகட்டத்தை எட்டிஇருக்கிறது ஒடிஷாவில் (`ஒரிஸ்ஸா’வின் இப்போதைய பெயர்.) `பாஸ்கோ’ நிறுவனத்துக்கு எதிரான மக்கள் போராட்டம்!
`பாஸ்கோ நல்ல திட்டம்தானே என்று வளர்ச்சிக்கு வக்காலத்து வாங்குபவர் களுக்கு... `பாஸ்கோ’ திட்டத்துக்குப் பின் உள்ள அரசியல் தெரியுமா?
`பாஸ்கோ’ திட்டம் ஆரம்பித்த நொடி முதல், அதற்கு எதிராகக் களத்தில் செயல்பட்டு வரும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழகத் தலைவரும் இந்தத் திட்டம்பற்றி மத்திய அரசால் உண்மை கண்டறி யும் பெரும்பான்மைக் குழுவின் அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவருமான வி.சுரேஷ் அவர்களிடம் பேசினோம்...
``ஒடிஷாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் இந்த `பாஸ்கோ’ நிறுவனம் அமைய இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்று இந்த பாரதீப். `Pohang Steel Company (POSCO) என்பதன் சுருக்கம்தான் பாஸ்கோ. முதலில் தென் கொரிய அரசிடம் இருந்த இந்த நிறுவனம், இப்போது தனியாரிடம்!
உலகிலேயே மிகச் சிறந்த இரும்புக் கனிமூலம் ஒடிஷாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கண்டாதர் சுரங்கத்தில் நிறைந்து இருக்கிறது. இந்தச் சுரங்கம் முழுக்க வனம் சூழ்ந்த இடம். சுமார் 12 மில்லியன் டாலர்கள்... இந்திய மதிப்பில் 55,000 கோடியுடன் வந்து இறங்கியது பாஸ்கோ. ஒடிஷா அரசுடன் 2005 ஜூலை 5-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது. இந்த ஒப்பந்தம் ஐந்து வருடங்கள் வரைக்குமே செல்லுபடி ஆகும். இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் அந்நிய முதலீட்டுடன் தொடங்கப் பட இருக்கும் திட்டம் இதுதான்!
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது மூன்று திட்டங்களுடன் இறங்கியது பாஸ்கோ. ஒன்று, பாஸ்கோ இரும்புத் தொழிற்சாலை. இரண்டாவது, சிறிய துறைமுகம் (னீவீஸீஷீக்ஷீ ஜீஷீக்ஷீt). மூன்றாவது, சுரங்கம். தவிர, மின்சார உற்பத்தி, பணியாளர் குடியிருப்பு, சரக்கு ஏற்றிச் செல்வதற்காக ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து, திட்டம் செயல்படுவதற்கு அடிப்படைத் தேவையான நீர் வசதி... இவை தொடர்பாக எதுவுமே அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எப்படி இவற்றைச் செயல்படுத்தப்போகிறீர்கள் என்று அரசும் கேட்கவில்லை. ஆனால், மறைமுகமாக இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து, கிட்டத் தட்ட ஒரு மாவட்டத்தையே காலி செய்வ தற்கான திட்டம் பாஸ்கோவிடம் இருக் கிறது.
சரி, இந்த நிறுவனம் இங்கு வந்து என்ன செய்யப்போகிறதாம்? 12 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யப்போகிறார்களாம். அதுவும் ஆறு வருடங்களுக்குள். முதல் இரண்டு வருடங்களில் 4 மில்லியன் டன் இரும்பு என மொத்தமாக ஆறே வருடங் களில் 12 மில்லியன் டன் இரும்பு. தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கிவைத்தபோது, `புதிய இந்தியாவின் கோயில்கள் இந்த அணைகள். இரும்பு, சாலை, அணைகள் இந்த மூன்றிலும் நாம் மிகச் சிறந்தவர்களாகத் திகழ வேண்டும்’ என்றார். அப்போது இருந்து இந்த மூன்று முக்கியமான துறை களில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப் பட்டு வந்திருக்கின்றன.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னால் 21 இரும்புத் தொழிற்சாலைகளால் 13.5 மில்லியன் டன் இரும்பை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிற நிலையில், ஒரு தனித் தொழிற்சாலை எவ்வாறு ஆறு வருடங்களில் 12 மில்லியன் டன் இரும்பை உற்பத்தி செய்ய முடியும்?
இரண்டாவதாக, பாஸ்கோ சமர்ப்பித்த அறிக்கையில், இந்தத் திட்டத்துக்காக `மைனர் போர்ட்’ அமைக்கப்பட இருக்கிறது என்று குறிப் பிட்டு இருக்கிறது. `மேஜர் போர்ட்’ டுக்கும், `மைனர் போர்ட்’டுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியச் சட்டத்தில், அரசு கட்டுகின்ற அனைத்துமே `மேஜர் போர்ட்’. தனியார் கட்டுகின்ற அனைத்துமே `மைனர் போர்ட்’. இது அப்போதையே ஆங்கிலேயர்களின் சட்டத்தைப் பின்பற்று வதால் ஏற்படுகிற குளறுபடி. ஆனால், இது மைனர் போர்ட்தானா?
நிச்சயமாக இல்லை. காரணம், இந்த நிறுவனம் அளித்த அதே அறிக்கையில், 1,70,000 டெட் வெயிட் டன் (DWT) தாங்கும் கப்பல்கள் இரண்டு, 1,50,000 டெட் வெயிட் டன் கப்பல்கள் மூன்று, 1,00,000 டெட் வெயிட் டன் கப்பல்கள் ஐந்து ஆகியவற் றைத் தாங்கும் அளவு தகுதி உடைய இந்த போர்ட், `மைனர் போர்ட்’தானா? இப்போது வரை 2,00,000 டெட் வெயிட் டன் உள்ள கப்பல்தான் உலகிலேயே மிகப் பெரிய கப்பலாகக் கருதப்படுகிறது. 1,70,000 டெட் வெயிட் டன் கப்பல் இரண்டாவது பெரிய கப்பலாக இருக்கிறது. ஒரு கப்பலின் அளவு, ஐந்து கால் பந்தாட்ட மைதானங் களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த அளவு பெரிய கப்பலுக்கு அங்கு என்ன தேவை இருக்கிறது?
பாஸ்கோவின் உண்மையான நோக்கம், 20 வருடங்களுக்குள் ஒடிஷாவின் தரமான இரும்புக் கனிமூலங்களை முழுவதுமாகச் சுரண்டி எடுத்துவிட வேண்டும் என்பது தான். இதற்காக இந்த நிறுவனம் ஒடிஷா அரசுக்குக் கிள்ளிப்போடுகின்ற தொகை மிகவும் சொற்பம். ஒரு மெட்ரிக் டன் இரும்புக் கனிமூலத்துக்கு 60 சென்ட்கள் தருகிறார்கள். இது இந்திய மதிப்பில் 27 மட்டுமே. இதே அளவு கனிமூலத்தை வெளிச் சந்தையில் விற்றால், சுமார் 200 டாலர். அந்தக் கனிமூலத்தைச் செறிவூட்டி விற்றால், 2,000 டாலர்கள். அதே கனி மூலத்தை உயர்தரக் கனிமூலமாகத் தயா ரித்து விற்றால், சுமார் 5,000 டாலர்! ஆக, 12 மில்லியன் டாலர்களுடன் கால் பதித்து, 200 பில்லியன் டாலர்களுடன் திரும்பிப் போகிற அடாவடித்தனம்தான் இந்தத் திட்டம்!
இந்தத் திட்டத்தின் இன்னொரு பெரிய பாதிப்பு, இரும்புத் தொழிற்சாலைக் கழிவு கள். கோக் எனும் எரிபொருளை இரும்புக் கனிமூலத்துடன் சேர்த்து எரிக்கும்போது, சுத்தமான இரும்பு தனியாக வந்துவிடும். கோக் தனியாகப் பிரிந்துவிடும். இந்த கோக், சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இதனால், நம் நாட்டின் `கரியமிலத் தடம்’ (Carbon Foot print) அதிகமாகும். கொரியாவுக்குச் சுத்த மான இரும்பு கிடைக்கும். இதுதான் வளர்ச்சியா?
வனப் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை ஒழுங்கமைவு மண்டலம், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை என இந்த மூன்றுக்குமான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும். ஆனால், இவை அனைத்தும் மீறப்பட்டு இருக்கின்றன. எப்படி?
இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலங்களை எங்கே இருந்து கையகப்படுத்தப்போகிறது பாஸ்கோ?
இதில்தான் மக்களின் அடிவயிற்றில் கைவைக்கிறது அரசு. 2005-க்கு முன்பு வரை எது எல்லாம் பட்டா நிலம் இல்லையோ, அது எல்லாம் அரசாங்கத்துக்குச் சொந்தமானது. ஆகவே, அப்போது வனங்களில் குடியிருந்த பழங்குடிகள், ஆதி வாசிகள் எல்லோரும் அரசின் பார்வையில் இப்போது ஆக்கிரமிப்பாளர்கள்!
வனங்களில் கிடைக்கும் மரத் துண்டுகள், விறகு, பழங்கள் இவை எல்லாவற்றையும் பயன்படுத்துவது குற்றமாகிப்போனது. குடிமக்களைக் குற்றவாளிகளாக்கியது அரசு.
தின்கியா, கடாகுஜாங், நுவாகன் என எட்டு கிராமப் பஞ்சாயத்துகள் இந்த வனங்களில் வெற்றிலை பயிர் செய்து வருகிறது. இங்கு விளையும் ஒவ்வொரு வெற்றிலையும் கை அளவு அகலம் இருப்ப தற்கு அங்கு உள்ள தண்ணீர் மிக முக்கியக் காரணம். ஒரு வெற்றிலையின் விலை 2. மும்பையில் விற்றால் 5. வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் 50.
ஓர் ஏக்கரில் பத்தில் ஒரு பங்கு நிலம் மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 1.5 லட்சம் வருவாயை மக்களுக்கு ஈட்டித் தருகிறது. இந்த நிலங்களை பாஸ்கோ எடுத்துக் கொண்டு அதற்குத் தரும் இழப்பீடோ, மொத்தமே 1 லட்சம்தான். இந்தத் திட்டம் மக்களைப் பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது!
இரண்டாவதாக, கடற்கரை ஒழுங்கமைவு மண்டலத்தின் வரையறைகளைச் சகட்டுமேனிக்கு மீறி இருக்கிறது இந்தத் திட்டம். கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு தொழிற்சாலையையும் அனுமதிக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது.
ஆனால், இந்த பாஸ்கோ திட்டம் 500 மீட்டருக்குள் வருகிறது. மேலும், பாஸ்கோவின் மைனர் போர்ட் அமைந்து இருக்கும் ஜடாதர் எனும் நீர்ப் பகுதியில் இதுவரை ஆறு சூறாவளிகள் ஏற்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் 10 கி.மீ. தூரத்துக்கு உள்ள மணலை அள்ளித் தூர எறிந்துவிட்டு, 26 அடிக்கு சுவர் ஒன்றை எழுப்ப இருக்கிறார்களாம். ஏற்கெனவே, இந்தப் பகுதி மண் அரிப்பு அதிகமாக உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதை மீறித் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அந்தக் கடல்பகுதியில் ஏற்படுகிற கொந்தளிப்பின் தாக்கம் இன்னும் மோசமாக அதிகரிக்கும்.
மூன்றாவதாக, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையையும் நேர்மையான முறையில் பெறாதது; நிபுணர் மதிப்பீட்டுக் குழு, வன அறிவுரைக் குழு போன்றவற்றின் கூட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட `மினிட்ஸ்’களைத் திரித்தது; முன்னர் சுற்றுச்சூழல் துறைச் செயலராக இருந்த மீனா குப்தாவை நாங்கள் இடம்பெற்ற உண்மை கண்டறியும் பெரும்பான்மைக் குழுவுக்குத் தலைவராக நியமித்தது என ஏகப்பட்ட குளறுபடி கள்.
சுதந்திரத்துக்குப் பிறகான போராட்டங்களிலேயே இந்த பாஸ்கோ எதிர்ப்புப் போராட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆறு வருடங்களாக அகிம்சை வழியில், மூங்கில் கழிகளை ஊரைச் சுற்றிலும் தடுப்புச் சுவராக நட்டுவைத்து, திட்டம் தொடர்பான எந்த ஆதரவாளர்களையும் உள்ளே விடாது போராடுகிறார்கள் மக்கள்.
இவர்களைப் பழிவாங்கும் விதமாக ஒடிஷா அரசு, மின்சாரம், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட நிறுத்தி விட்டது. இந்த ஆறு வருடங்களாக ஊரை விட்டு யாரும் வெளியே வரவில்லை. காரணம், ஒவ்வோர் ஆணின் மீதும் சராசரியாக 200 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. மக்களைக் கொல்லவும் முயற்சிகள் நடக்கின்றன. எல்லாவற்றையும் மீறி இன்னும் போராட் டம் தொடர்கிறது!
இந்தப் பிரச்னையில் அதிகார வர்க்கத்தினர் இழைத்த அநீதியையும், நேர்மையற்ற தன்மையையும்தான் நாம் எதிர்க்க வேண்டி இருக்கிறது. இந்த நிமிடத்தின் அதிஅவசியத் தேவையும் அதுதான்!`` என்கிறார் சுரேஷ்.
இந்தியாவைக் காப்பாற்றுங்கள்!
படங்கள் உதவி: பிரகாஷ் பைக்ரானி
ஆனந்த விகடன் 10 ஆகஸ்ட் 2011 இதழில் இருந்து...
2 comments:
நன்றி தோழர்
நல்ல பதிவு
Post a Comment