Saturday, August 20, 2011

ஒற்றைக் கொம்பு... உதைத்தால் வம்பு!

தெங்குமரஹடா ராமசாமி... மேற்குத் தொடர்ச்சி மலையின் தனிக் 'காட்டு’ ராஜா! மாயாறு பள்ளத்தாக்கு, தெங்குமர ஹடா, முதுமலை, மசினக்குடி, தலமலை, தாளவாடி எனச் சுமார் 1,000 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட வனத்தில், யானை ஆராய்ச்சியாளர்களுக்கு இவர் தான் வழிகாட்டி. அடர்ந்த வனத்தில் அவரைச் சந்தித்தேன். ''அப்பாவுக்கு வேட்டையாடுறதுதான் தொழில். அதனால காடே கதின்னு கிடப்போம். அப்பலாம் வேட்டைக்குத் தடை கிடையாது. நாலு வயசுலயே 10 வேட்டை நாய்களைக் கூட்டிட்டு வேட்டைக் குப் போயிருக்கோம். கடமான், உடும்பு, காட்டுப் பன்னி, அலுங்கு (எறும்பு தின்னி), மந்தியெல்லாம் வேட்டையாடிச் சாப்பிடுவோம். நேரம் இருந்தா வீடு திரும்புவோம். இல்லேன்னா, ஏதாவது ஒரு மரத்துல மேல ஏறிப் படுத்திருவோம்.

பறவையியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சிவகணேசன் என்னைத் தேடி வந்தார். 'மாசம் 1,000 ரூபா தர்றேன். என் கூட வர்றியா’னு கேட்டார். காட்டு யானைங்க இருக்கிற இடத்துக்கு அவரைக் கூட்டிட்டுப் போகணும். இதுதான் என் வேலை. அவரை ஆனைக்கட்டி, முதுமலை, சிறுயூர், தெங்குமரஹடா காட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனேன். அங்கே மறைவா இருந்து மணிக்கணக்கில் யானைகளைப் பத்திக் குறிப்பு எடுத்தார்!'' என்பவர் சின்ன இடைவெளி கொடுத்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் பேச்சைத் தொடர்கிறார்.


'காட்டுக்குள் போறப்ப பேசக் கூடாது. காதுகளைக் கூர்மையா வெச்சுக்கணும். பழுப்பு, பச்சை நிற உடுப்பைத்தான் உடுத் தணும். நான் முன்னாடி போவேன். மத்தவங்களை 10 அடி தூரம் பின்னாடி வரச் சொல்வேன்.


ஒருவேளை, யானை துரத்தினா, அதை என் பின்னாடி வரவெச்சு அவங்களைத் தப்பிக்கவைக்கத்தான் இந்த ஏற்பாடு. காட்டுக்குள்ளே நுழைஞ்சதுமே யானை எங்கே இருக்குன்னுசுலபமா கண்டுபிடிச்சிருவேன். யானைக்குனு தனி வாடை இருக்கு. அதை வெச்சே கண்டு பிடிச்சுரலாம். அது போக, மரத்தை ஒடிக் குற சத்தம், மூச்சு விடுற சத்தம், நடக்குற சத்தத்தைவெச்சு, எத்தனை யானைங்க இருக்குது, கொம்பு யானை (ஆண்) எத்தனை, பெண் யானை எத்தனை, குட்டி எத்தனைன்னு ஓரளவு கணிச்சிருவேன். யானைங்க நம்மைப் பார்த்திருச்சுன்னா, தும்பிக்கையைத் தூக்கி, காதை விறைக்கும். உடனே, எதிர் திசையில நாம மெதுவா நகர்ந்துடணும். மீறி அங்கேயே இருந்தோம்னா, காலைத் தரையில ஓங்கி உதைக்கும். அப்படிப் பண்ணினா, நம்மைத் தாக்கப் போகுதுன்னு அர்த்தம். உடனே ஓடிரணும். யானை எடுத்த எடுப்புலயே 40 கி.மீ. வேகத்துல ஓட ஆரம்பிக்கும். அப்படித் துரத்த ஆரம்பிச்சதுன்னா, விசாலமான பாதையில ஓடாம புதரைப் பார்த்து ஓடணும்.

ஒரு முறை ரெண்டு ஆராய்ச்சியாளர்களை அழைச்சுட்டு பவானி சாகர் - காராச்சிக்கொறை காட்டுல யானைகளைத் தேடிப் போனேன். திடீர்னு யானை பிளிர்ற சத்தம் கேட்டுச்சு. 'யானை நம்மைக் கவனிச்சுடுச்சு’னு சொல்லிட்டு இருக்கும்போதே, ஒரு கொம்பு யானை நேருக்கு நேரா துரத்த ஆரம்பிச்சது. நான் அவங்க ரெண்டு பேரையும் புதர்ல தள்ளிவிட்டுட்டு, பாதையில் ஓட ஆரம்பிச்சேன்.

ஏன்னா, யானைக்குக் கண் பார்வை குறைவு. புதர்ல இருக்குறவங்களைவிட, பாதையில தெளிவா தெரியிற உருவத்தைக் குறிவெச்சு ஓடி வரும். நான் நினைச்ச மாதிரியே அவங்களை விட்டுட்டு என்னைத் துரத்த ஆரம்பிச்சது. ஓடிட்டு இருக்கும்போதே உடைஞ்சுகிடந்த கண்ணாடி பாட்டில் துண்டு ஒண்ணு என் கால்ல குத்திடுச்சு. சுருண்டு விழுந்துட்டேன். யானை நாலு எட்டு தூரத்துல வந்து நின்னுருச்சு. உடனே, பக்கத்துல கிடந்த பாட்டிலை எடுத்துப் பாறையில் அடிச்சு உரசுனேன். ஆக்ரோஷமா வந்த யானை சடக்குனு திரும்பி ஓடிப் போயிருச்சு. பொதுவா, கருங்கல்லைத் தட்டுற சத்தம் கேட்டாலோ, அரிவாளைக் கல்லுல உரசுற சத்தம் கேட்டாலே யானைகளுக்கு ஆகாது. அப்படிச் செஞ்சா, யானை பயந்து ஓடிரும்னு எதுவும் நிச்சயம் கிடையாது. ஆனா, அது நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயம். புகையைவெச்சு யானையை விரட்டலாம். பல தடவை பீடியைப் பத்தவெச்சே யானைகள்கிட்ட இருந்து தப்பிச்சிருக்கேன்.

ஒரு சமயம் 'மாயாறு பக்கமா ஒரு யானைக்கு மதம் பிடிச்சு இருக்கு. அதைக் கண்காணிச்சுத் தகவல் சொல்லுங்க’னு வனத் துறையினர் சொல்லி அனுப்புனாங்க. மதம் பிடிச்ச யானைக்குன்னு தனி வாடை உண்டு. ஒரு பெரிய புதர் பக்கத்துல அந்த வாடை அடிச்சது. புதரை விலக்கிப் பார்த்தா, ரெண்டு அடி தூரத்துல யானை நின்னுட்டு இருக்கு. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி என் தலை முடியைப் பிடிச்சு இழுத்துச்சு. அப்படியே குனிஞ்சு ஓடினேன். தலையில கொத்து முடியைக் காணோம். அரை மணி நேரமா காட்டுக்குள் ஓடிக்கிட்டே இருக்கேன். அந்த யானை விடாமத் துரத்துது. மாயாறு வந்ததும் குதிச்சிட்டேன். உள் நீச்சல் அடிச்சிட்டே கொஞ்ச தூரம் தள்ளிப் போய் எழுந்து பார்க்குறேன்... நான் ஆத்துல குதிச்ச இடத்துல யானை இறங்கி தும்பிக்கையால துழாவிட்டு இருந்தது. அந்த ராஜாவுக்கு அவ்வளவு கோபம். அன்னிக்கு நான் தப்பிச்சது என் முன்னோர்கள் செஞ்ச புண்ணியம்!


சுரேந்திர ராஜான்னு ஒரு ஃபாரஸ்ட் கார்டை ஒத்தைக் கொம்பு யானை மிதிச்சுக் கொன்னுடுச்சு. 'அது அடிக்கடி ரோட்டுப் பக்கம் வருது. அதைக் கண்காணிச்சு காட்டுக்குள் திசை திருப்பிவிடணும்’னு என்கிட்ட சொல்லி அனுப்பினாங்க. நாலு பசங்களைக் கூட்டிக்கிட்டுப் போனேன். வாட்ச்சிங் டவர் பக்கம் காரை நிறுத்திட்டு உள்ளே போனோம். நான் யானையை மோப்பம் பிடிச்சிட்டேன். அதுவும் என்னை மோப்பம் பிடிச்சுருச்சு போல. திடீர்னு பெரிய சலசலப்பு. எங்களைச் சுத்தி ஏழெட்டு யானைங்க ஆங்காங்கே தும்பிக்கை தூக்குதுங்க. தலை தெறிக்க ஓடி ரோட்டுக்கு வந்தோம். அங்கே 10 யானைங்க காரைச் சுத்தி நிக்குது. நெருப்பு மூட்டி எல்லா யானைகளையும் விரட்டித் தப்பிச்சு வந்தோம்.

பல தடவை என்னை யானைங்க துரத்தினாலும் எனக்கு அதுங்க மேல கோபம் எதுவும் கிடையாது. சொந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைஞ்சா, யாருக்குத்தான் கோபம் வராது? அதுங்க செய்யிறதுதான் சரி. முன்னாடி நான் வேட்டையாடி விலங்குகளைக் கொன்னதை நினைச்சா, இப்போ வருத்தமா இருக்கு. அதுக்குப் பிராயச்சித்தமா மரக் கடத்தல், வேட்டை கும்பலைப்பத்தி தகவல் கொடுத்து, காட்டைப் பாதுகாத்துட்டு வர்றேன். ஒண்ணு மட்டும் நிச்சயம்... காடும் விலங்கு களும் நல்லா இல்லைன்னா, நாம நல்லா இருக்க முடியாது. நம்மளால காடுகளை உருவாக்க முடியாது. பாதுகாக்கத்தான் முடியும். காடுகளைப் பாதுகாக்க நாம எதுவும் செய்ய வேண்டாம். சும்மா இருந்தாலே போதும். காடும் விலங்குகளும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும்!''- சுற்றிலும் நேசத்தோடு பார்வையைப் படர விட்டபடி முடிக்கிறார் ராமசாமி!


தகவல் : நிருபர் -டி.எல்.சஞ்சீவிகுமார், ஆனந்தவிகடன், 24-08-2011.


நன்றி : சுற்றுசூழல் குறித்தும், வனவிலங்குகள் குறித்தும்
பல தகவல் அடங்கிய வலைப்பூ : http://poovulagu.blogspot.com

0 comments:

Post a Comment