Sunday, August 28, 2011

சமூகப் புரட்சியாளர் சாகு மகராசர் !


இந்திய நாட்டில் பல சமூகப் புரட்சியாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜோதி ராவ் புலே, நாராயண குரு, சாகு மகராசர், தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோராவர்.

இவர்களில் சாகுமகராசர் மகாராட்டிர மாநிலத்தின் கோல்காப்பூர் சமாஸ்தான மன்னர் ஆவார். இந்திய நாட்டில் நூற்றுக்கணக்கான மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்களில் சமூகப் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரே மன்னர் சாகுமகராசர் அவர்களே ஆவார்.

சாகுமகராசர் 1874 ஆம் ஆண்டு பிறந்து தனது 20 ஆவது அகவையில் அதாவது 1894 ஆம் ஆண்டு கோலாப்பூர் சமஸ்தான மன்னராக முடிசூட்டிக் கொண்டார். சாகுமகராசர் இறை நம்பிக்கையுள்ளவர். ஆரிய சமாசத்தை ஆதரித்தவர். அரசுப் பதவிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருப்பதற்குக் காரணம், பார்ப்பனரல்லாதாருக்குக் கல்வி மறுக்கப்பட்டதே என்பதை உணர்ந்தார். இதனை மாற்றி அமைக்கப் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் கல்வி போதிக்க முழு முயற்சியில் ஈடுபட்டார்.

கோல்காப்பூரில் அனைத்து மாணவர்களும் தங்கிப் படிக்க ஒரே ஒரு விடுதி இருந்தது. ஆனால் அந்த விடுதியில் பார்ப்பனரல்லாத மாணவர் ஒருவர் கூடத் தங்கியதில்லை என்பதை அறிந்து வருந்தினார். எனவே, பார்ப்பனரல்லாதார் தங்கிப் படிக்க பல விடுதிகளை ஏற்படுத்தினார்.

சாகுமகராசர், தான் பிறந்த மராத்திய சாதி, சமுதாயத்தில் சத்திரியர் எனும் நிலைக்கு உரியது எனக் கூறினார். ஆனால் பார்ப்பனர்கள் அவர் பிறவியில் சத்திரியர் அல்லர், சூத்திரர் எனக்கூறி அவருக்கு வேத மந்திரங்களை ஓத மறுத்தனர். புராண மந்திரங்களையே ஓதி வந்தனர். இதனை அறிந்த மன்னர் சாகு மகராசர் தன்னை இழிவுபடுத்திய பார்ப்பனர்களைத் தண்டிக்க 1901 ஆம் ஆண்டு, இனி அரண்மனையில் புரோகிதர்கள் வேதச் சடங்குகளையே செய்ய வேண்டும். அப்படிச் செய்ய மறுத்தவர்கள் அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்தார். ஆனால் தலைமைப் புரோகிதர் மன்னரின் இந்த உத்தரவை ஏற்க மறுத்தார். இதனால் மன்னர் அவருக்கு தானமாகத் தந்த நிலங்களைப் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பித்தார்.

பார்ப்பனர்களுக்கும் மன்னருக்கும் இடையே மோதல் முற்றிக்கொண்டே போனது. இந்நிலையில் மன்னர் சாகுமகராஜ் மராட்டியத்தில் உள்ள மற்ற மன்னர்களுக்கும் இது பற்றிக் கடிதம் எழுதினார். அவர்களும் பார்ப்பனர்களால் தாங்கள் இழிவுபடுத்தப்பட்டு வருவதை அறிவித்தனர். பரோடா மன்னர் கெய்க்வாடு சாகு மகராசரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தார்.

இந்நிலையில் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் சங்கர மடத்தில் வாரிசுகளை நியமிக்கும் முன் அதற்கான ஒப்புதலை மன்னரிடம் பெறவேண்டும். ஆனால் பிலவதிகர் என்ற சங்கராச்சாரி மன்னரின் அனுமதி பெறாமல் பிரம்மனாலகர் என்பவரைத் தமது வாரிசாக அறிவித்தார். இதனை அறிந்த மன்னர் சங்கர மடத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தார். உடனே பாலகங்காதரத் திலகர் தலையிட்டு மன்னரின் ஆணையை நிறைவேற்ற உறுதி அளித்து பறிமுதல் செய்த சொத்துக்களைத் திரும்பப் பெற்றார். அரண்மனைப் புரோகிதர்களும் வேத மந்திரம் ஓத ஒப்புக்கொண்டனர்.

1902 ஆம் ஆண்டு, தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் வேலைவாய்ப்பில் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார். இந்திய நாட்டில் இதுதான் முதல் சமூகநீதி ஆணையாகும். பிறகு தென்னகத்தில் பல பகுதிகளில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதற்கு இதுவே வழிகாட்டியாகவும் இருந்தது. மேலும், கோல்காப்பூரில் மாணவர் விடுதி ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போது “சாதி முறையை ஒழிப்பது தேவையானது. அதை ஆதரிப்பது குற்றமும், பாவமும் ஆகும். முன்னேற்றப் பாதையில் மிகப்பெரும் தடையாக இருப்பது சாதி முறையே'' என்றார். அதோடு சாதியை அகற்றுவது நமது கடமை என்றும் அக்குறிக்கோளை அடைவதற்குத்தான் சாதி மாநாடுகள் நடைபெறுகிறது என்பதை மறவாதீர் என்று மன்னர் சாகுமகராசர் வேண்டுகோள் விடுத்தார்.

 மன்னர் சாகுமகராசர், தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியும், பதவியும் பெறுவதற்குத் தனிக் கவனம் செலுத்தினார்.

 தாழ்த்தப்பட்டோரை அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் சமமாக நடத்திட ஆணைபிறப்பித்தார்.

 தாழ்த்தப்பட்டோர் நகர சபைத் தேர்தலில் பங்கு பெற்று வெற்றிபெற சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினார்.

 தாழ்த்தப்பட்டோர் பொது கிணறு மற்றும் குளங்களை மற்றவர்களுடன் சமமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிமை கொடுத்தார்.

 தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாகச் செயல்பட்டுவந்த பள்ளிகளை மூடி, பொதுப்பள்ளியில் எவ்வித வேறுபாடுகளுமின்றி அவர்களைச் சேர்த்துக் கல்வி போதிக்க ஆணை பிறப்பித்தார்.

 தாழ்த்தப்பட்டோர் கிராமங்களில் கணக்குப் பிள்ளைகளாகப் பணியாற்ற பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமன ஆணைகளைப் பிறப்பித்தார்.

 மன்னர் தன்னுடைய தனிப்பட்ட அலுவல்களை கவனித்துக் கொள்ள தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டார்.

 அரசாங்க யானை மீது அமர்ந்து அதை வழி நடத்திச் செல்லும் பதவியை ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு வழங்கினார்.

 தாழ்த்தப்பட்ட தோழர்களோடு மன்னரே இணைந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

1919 ஆம் ஆண்டு முதல் மன்னர் சாகுமகராசரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு ஏற்பட்டது. அம்பேத்கர் 1920 ஆம் ஆண்டு வெளியிட்ட “மூக்நாயக்'' (ஊமைகளின் தலைவன்) என்ற மாதமிருமுறை இதழ் வெளிவர சாகுமகராசர் அம்பேத்கருக்கு உரிய உதவிகளைச் செய்தார்.

1920 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 21 ஆம் நாள் கோல்காப்பூர் அரசில் மான்கோன் என்ற இடத்தில் நடைபெற்ற “தீண்டப்படாதார் மாநாட்டிற்கு'' அம்பேத்கர் தலைமை தாங்கினார். மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மன்னர் சாகுமகராசர் “அம்பேத்கர் உருவில் உங்கள் மீட்பரைக் கண்டறிந்துள்ளீர்கள், உங்கள் அடிமை விலங்கை இவர் உடைத்தெறிவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காலம் வரும்; அப்போது அனைத்திந்திய அளவில் மதிப்பு வாய்ந்த புகழ்மிக்க தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்வார் என்று என் மனச்சான்று சொல்கிறது'' என்று குறிப்பிட்டார்.

மன்னர் சாகுமகராசர் அம்பேத்கர் மீது அளவுகடந்த அன்பும் மதிப்பும் கொண்டு இருந்தார். ஒருநாள் திடீரென்று அம்பேத்கர் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவரோடு சில மணிநேரம் கலந்துரையாடித் திரும்பினார். இதன்மூலம்மன்னர் சாகுமகராசர் அம்பேத்கர் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நாம் அறியலாம்.

20 ஆவது அகவையில் ஆட்சிக்கு வந்து 28 ஆண்டுகள் ஒரு சிற்றரசராகப் பதவி வகித்து 48 ஆவது வயதில், அதாவது 1922 இல் மறைந்த சாகுமகராசர் தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் தாழ்த்தப்பட்ட சமூகம் உயர்வதற்கும் பாடுபட்டார். குறிப்பாக 100 ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பனர்களை எதிர்த்தார். ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தை உயர்த்திடத் தனது பதவியே பறிபோனாலும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். பார்ப்பனர்கள் ஆங்கிலேயரைத் தனக்கு எதிராகத் திருப்பிவிட்டு எந்த தண்டனை கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார் என்று பிரகடனம் செய்தவர் மன்னர் சாகுமகராசர் ஆவார்.

சுதந்திர இந்தியாவில் குறிப்பாக கடந்த 64 ஆண்டுகளில் இதுவரை ஒரு பிரதம மந்திரியோ, அல்லது ஒரு மாகாண முதல் மந்திரியோ இவரைப்போல் துணிவுடன் பார்ப்பனர்களை எதிர்த்து பணியாற்ற முன்வந்தார்களா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஆட்சிக்கு வருபவர்கள் தங்களது கொள்கை இலட்சியங்களை மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு, தனது பதவியின் காலத்தை வெற்றிகரமாக முடித்து மீண்டும், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள சில திட்டங்களைத் தீட்டி அவைகளை மட்டுமே செய்து தேர்தலில் போட்டியிடுவதை நாம் காண்கிறோம்.

சாகுமகராசர் தொடங்கிவைத்த பணி இன்னும் முடியவில்லை அவரைப் போன்ற ஒரு வீரமிக்க சமூகப் புரட்சியாளர் நம் சமூகத்தில் மீண்டும் தோன்றிச் சமூக புரட்சிக்கு வழிகாட்ட வேண்டும். வாழ்க சாகுமகராசர் புகழ்.

(பாசறை முரசு ஜூலை 2011 இதழில் வெளியானது)

நன்றி : கீற்று இணையதளம்.



2 comments:

வளத்தூர் தி.ராஜேஷ் said...

அருமையான பகிர்வு நண்பரே இவரை பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன் .தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள் .

Siraju said...

நன்றி நண்பரே.

Post a Comment