Tuesday, August 9, 2011

நவீன கொத்தடிமைமுறை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பஞ்சாலை தொழில் நிறுவனங்களில் இளம் பெண்களை பல்வேறு ஒப்பந்த திட்டங்களின் கீழ் பணியமர்த்த 3 அல்லது 5 ஆண்டுவரை ஒப்பந்தம் என்ற பெயரில் அடிமைப்படுத்தும் கொத்தடிமைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்ற தகவலின் பேரில் திருப்பூர் மக்கள் அமைப்பினர் அந்த பஞ்சாலைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கிடைத்த தகவல்கல் குறித்து திருப்பூர் மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் அலோசியஸ், கோவை கேர் டிரஸ்ட் இயக்குனர் பிரிதிவிராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது :-

தாராபுரம் பகுதியில் சுமார் 30 தனியார் பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 22 பஞ்சாலைகள் ஆய்வு செய்த போது தமிழகத்தின் பின் தங்கிய தென் மாவட்டங்களைச் சேர்ந்த சிறுமிகளையும், இளம்பெண்களையும், மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான இளம் பெண்களையும் அழைத்து வந்து சுமங்கலி திட்டம், கண்மணி திட்டம் என்ற பெயர்களில் எந்த நேரங்களிலும் வேலை வாங்கிக் கொள்ளும் நோக்குடன் கொத்தடிமைகளாக பணியமர்த்தி உள்ளனர்.



இந்த வகையில் 24 ஆயிரம் இளம் பெண்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை கூலியும், 10 முதல் 12 மணி நேரம் கூடுதல் வேலையும் கொடுக்கப்படுகிறது. இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். போன்ற தொழிலாளர் நல சட்டங்கள் முழுமையாக மறுக்கப்பட்டு பயிற்சியாளர்களாகவே 3 ஆண்டுக்கு பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்த தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் சங்கம் அமைக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தங்களது பணியிடங்களில் ஏற்படும் பிரச்சினைகளையும், அவலங்களையும் வெளியே சொல்லி உதவி கேட்க முடியாத நிலைதான் உள்ளது.

கடந்த 10 ஆண்டுக்கு முன் பெண்களை ஆடை உற்பத்தி தொழிலுக்கு லாயக்கற்றகள் என்று ஒதுக்கி வந்த ஆலை நிர்வாகிகள் தற்போது 85 சதவீதத்திற்கும் மேல் இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தி கொள்கிறார்கள். இதனால் ஆண்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.

பெண்கள் அதிகம் வேலை செய்யும் அனைத்து தொழிற்சாலைகளிலும் பாலியல் பிரச்சனைகளை விசாரிக்கும் குழு அமைக்க வேண்டும் என்ற நடைமுறை இங்கு பின்பற்றப்படுவதில்லை. எனவே தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களில் உள்ள வளர் இளம் சிறுமிகளை திருமண ஆசை காட்டி, சுமங்கலி, கண்மணி திட்டங்களை கூறி அழைத்து வந்து பஞ்சாலை நிறுவனங்களில் பணியமர்த்தும் கொத்தடிமை முறை தடை செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மற்றும் பி.எப் உள்ளிட்ட தொழிலாளர் நல உரிமைகளை அமலாக்கம் செய்ய வேண்டும்.பெண்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் பாலியல் தொல்லைகளை கண்காணிப்பு செய்ய, விசாகா வழக்கின் விசாரணை குழுக்களை அமைக்க வேண்டும். பஞ்சாலை மற்றும் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனகளில் 240 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். இவ்வாறு திருப்பூர் மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் அலோசியஸ், கோவை கேர் டிரஸ்ட் இயக்குனர் பிரிதிவிராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.



தகவல் : தினத்தந்தி - திருப்பூர் மாநகர செய்திகள் (07.08.2011)

0 comments:

Post a Comment